செவ்வாய், 30 டிசம்பர், 2008

தலிபான்களின் கோட்டையாகி விட்ட சுவாத் பள்ளத்தாக்கு - நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறும் பாக். அரசு.


இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் ஒரு காலத்தில் பிரபல சுற்றுலா தலமாக இருந்த, சுவாத் பள்ளத்தாக்கு, தற்போது தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. கண்ணுக்கு இனிய இயற்கை காட்சிகள் கொண்ட பள்ளத்தாக்கை தங்களின் கோட்டையாக மாற்றியுள்ள தலிபான்கள், எதிர்ப்பவர்களை தலையை துண்டித்தும் கொன்றும் வருகின்றனர். இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது பாக்., அரசு.


பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வாசிரிஸ்தான் பகுதிகளில், ஏற்கனவே தலிபான்கள் மற்றும் அல்- குவைதா பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இங்கு இவர்களை ஒடுக்கும் பணியில் ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தப் பகுதியில் இருந்து தொலை தூரத்தில் உள்ள மற்றொரு பகுதியான சுவாத் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இங்குள்ள இயற்கை வனப்பு மிக்க மலைப்பகுதிகளில் பெரும்பாலானவை, தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. "சுவாத் பகுதி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது' என, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். சுவாத் பகுதியில் உள்ள இவர் வீடு, சமீபத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.


"சுவாத் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான், தலிபான் பயங்கரவாதிகள் பரவத் துவங்கினர். தற்போது அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் யாரும் இப்போது செல்ல முடியவில்லை. அங்கு வசிக்கும் மக்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேட்டி காண முடியவில்லை. தலிபான்களின் கெடுபிடிகளுக்கு பயந்து அதிகாரிகள் பலர், இப்பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்' என, அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சுவாத் பகுதியை ஒட்டிய பர்னர் என்ற இடத்தில், கடந்த ஞாயிறன்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இப்பகுதியில் பீதி உருவாகியுள்ளது.


மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால், நிலைமை மேலும் மோசமாகி விடும். இப்பகுதியில் முன்னர் 15 லட்சம் பேர் வசித்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளியேறி விட்டனர்.
இப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் எல்லாம், மவுலானா பசுல்லா என்பவரின் தலைமையின் கீழ் செயல்படுகின்றனர். இங்குள்ள பயங்கரவாதிகள் எல்லாம், நீண்ட தலைமுடி, தாடி, துப்பாக்கிகள், சால்வைகள் மற்றும் ஷூக்களுடன் காணப்படுவதால், அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். தற்போதைய நிலையில், 2,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உள்ளனர். சில இடங்களில் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில், கிராமங்களே உள்ளன. அரசு ஆதரவாளர்களை தலை துண்டித்து கொலை செய்வதோடு, பாலங்களையும் குண்டுகள் வைத்தும் தகர்க்கின்றனர். மேலும், பெண்கள் எல்லாரும் பர்தா அணிய வேண்டும் என்றும் கடும் நிபந்தனை விதிக்கின்றனர். இதை மீறுவோரை தண்டிக்கவும் செய்கின்றனர்.


அரசைப் போலவே, கோர்ட்டுகளை நடத்துவது, வரி வசூல் செய்வது, சோதனை சாவடிகள் அமைத்து சோதனையிடுவது போன்ற வேலைகளையும் செய்கின்றனர். இப்பகுதியில் இருந்த மகளிர் பள்ளிகள் பலவற்றையும் தீ வைத்து அழித்துள்ளனர். டிசம்பர் மாத மத்திய பகுதியில், இளம் வயது நபர் ஒருவர் தலிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். உடன் அவரை கொன்ற பயங்கரவாதிகள், அவரின் பிணத்தை கிராமத்தின் மையப் பகுதியில் கயிற்றில் கட்டி இரண்டு நாட்கள் தொங்கவிட்டனர். அவரைப் போல யாருக்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காக இதைச் செய்தனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டிக்காக சுவாத் பகுதியில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வந்த சலா - உத் -தீன் கூறுகையில், "சுவாத் பள்ளத்தாக்கின் 80 சதவீத பகுதி, தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது' எனக் கூறியுள்ளார்.


தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள நகரம் பெஷாவர். இந்நகரை ஒட்டிய பழங்குடியின பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் அதிகளவில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மீது இந்த தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாக்., ராணுவத்தினர் நேற்று மீண்டும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ஜம்ரூத் பகுதியில் தங்கியிருக்கும் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாயினர்.


இங்குள்ள மலைப்பகுதிகளில் தலிபான்களின் மறைவிடங்களை குறிவைத்து, ராணுவ ஹெலிகாப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. அத்துடன் சிறிய பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.

கருத்துகள் இல்லை: