வெள்ளி, 5 டிசம்பர், 2008

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னை ரெயில் நிலையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு


சென்னை, டிச.6-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வரலாறு காணாத அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில்களில் சரக்குபோக்குவரத்தும் 2 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னையிலும், சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையம் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (சனிக்கிழமை) வருவதையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களை பொறுத்தவரை, வழக்கத்தைவிட கூடுதலாக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசாருடன் இணைந்து, கமாண்டோ படை வீரர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, சிறப்பு காவல் படையினர் ஆவடி, திருச்சி, வீராபுரம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்துள்ளனர். சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே, ஒருவழி பாதை வழியாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ரெயில்களில் வந்து இறங்கும் பயணிகளும் ஒரு வழி பாதை வழியாகவே வெளியேற்றப்படுகின்றனர்.

ரெயில் நிலையத்திற்குள் கமாண்டோ படை போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கன்னிவெடிகளை கண்டறியும் சோதனையில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகளோடு பயணியாக போலீசாரும் மாறுவேடத்தில் நின்று கண்காணித்து வருகின்றனர்.
ரெயில்வே டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர், தாங்கள் வைத்துள்ள துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்பி தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும், ரெயில்களில் சரக்கு போக்குவரத்திற்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரெயில் நிலையங்களில் சரக்குகள் குவிந்துகிடைப்பதை காண முடிந்தது.

சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும், போலீஸ் தலைகளாகவே தெரிகின்றன. அந்த அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடும் சோதனைக்கு பிறகே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால், ரெயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே, ரெயில் நிலையத்திற்கு வந்துவிடுமாறு எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னபாண்டி தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: