திங்கள், 22 டிசம்பர், 2008

பாகிஸ்தான் மீது எந்த வித நடவடிக்கைக்கும் இந்தியா தயார்!." - பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!!!.



புதுடெல்லி, டிச.23-

`பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டாவிட்டால் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்' என்று வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் நேரடி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆலோசனை நடத்தினார்.

இந்தியா அளித்த ஆதாரங்களை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ïனியன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்களின் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டை வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரக தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றின் மூலமாக, இந்த பிராந்தியத்தின் அமைதியை குலைப்பதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தெளிவாகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நெருக்கடி கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மற்றும் அவர்களால் இயக்கப்படும் முகாம்களால் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும். அதுதான் ஒட்டு மொத்த உலகத்துக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் நல்லது.


எல்லைதாண்டிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிப்பது தொடர்பான எந்த ஒரு வாய்ப்பையும் இந்தியா இன்னும் கைவிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் போதாது. தங்களுடைய அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாக இந்தியாவிடமும் `சார்க்' அமைப்பிலும் பாகிஸ்தான் அளித்த உறுதி மொழி எதுவும் காப்பாற்றப்படவில்லை. பாகிஸ்தானில் மக்களால் நடத்தும் ஒரு அரசையே இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால், தீவிரவாதிகள்தான் அரசை ஆட்டுவித்து வரும் போக்கு இன்னும் தொடருகிறது.


இந்திய மக்கள் கொல்லப்படுவதையும், அவர்களுடைய சொத்துகள் அழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பாகிஸ்தான், தனது உறுதி மொழியை காப்பாற்றினால் மட்டுமே மும்பை தாக்குதல் விசாரணையில் கிடைத்த ஆதாரங்களை கொடுக்க முடியும். பல்வேறு பிரச்சினைகளிலும் திசை திருப்பும் வகையிலேயே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
தீவிரவாதி மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை ஒப்படைப்பதில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை. தற்போதைய சட்ட விதிகளே போதும். எனவே, தீவிரவாதிகளை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தீவிரம் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள நேரிடும். இதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியே இல்லை.


பாகிஸ்தானுடன் போர் குறித்து கேள்வி எழுந்துள்ளது. சூழ்நிலைக்கு தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் (மத்திய அரசு) மேற்கொள்வோம். அனைத்துவித நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளும் எங்கள் முன் உள்ளன. பாகிஸ்தான், தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக கூற முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நடவடிக்கையை வெளிப்படையாக எடுப்போம். ராணுவ நடவடிக்கை என்பது யாருடைய தனிப்பட்ட நலனுக்காகவும் மேற்கொள்வது கிடையாது.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
இந்த மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இது தவிர, இந்தியாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களுடன் இந்திய தூதர்கள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக இந்திய தூதர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி ஒருவர் மறுத்தார்.

அவர் கூறுகையில், "இதற்கு முன் 1969-ம் ஆண்டில் தூதர்கள் மாநாடு நடந்தது. அப்போது 52 நாடுகளின் இந்திய தூதர்கள் பங்கேற்றனர். தற்போது 120 நாடுகளில் பணியாற்றும் தூதர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தம" உள்ளிட்ட பிரச்சினைகளால் கால தாமதம் ஏற்பட்டு தற்போது நடைபெறுகிறது'' என்றார்.

கருத்துகள் இல்லை: