ஞாயிறு, 21 டிசம்பர், 2008

"நாங்கள் போரை விரும்ப வில்லை"- "எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால், சந்திக்க தயார்" - பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்!.





இஸ்லாமாபாத், டிச.22-

நாங்கள் போரை விரும்ப வில்லை. ஆனால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று, பாகிஸ்தான் மந்திரி கூறினார்.

மும்பையில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா திட்டவட்டமாக ஆதாரத்துடன் கூறுகிறது.

ஆனால் இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்று உலக நாடுகள் கருதுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் வெளி உறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் போரை விரும்ப வில்லை. சமாதானத்தையே விரும்புகிறோம். ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டு மக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமையை, நாங்கள் முழுமையாக செய்வோம்.

தீவிரவாதிகள் பற்றி விசாரணை நடத்த இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார். ஆனால், இந்தியா எங்களுக்கு உறுதியான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். விசாரணை தொடங்கும் முன்பே, எங்கள் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல.

தீவிரவாத அமைப்புகள் மீது நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை உலக நாடுகள் பாராட்டுகின்றன. தீவிரவாதிகள் பற்றி நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கப்படும் ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். தீவிரவாதிகள் மீது குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால், எங்களது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குரேஷி கூறினார்.

கருத்துகள் இல்லை: