வெள்ளி, 19 டிசம்பர், 2008

"குடியரசு தினத்தன்று டெல்லியில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் ஆபத்து!"- தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க முப்படைகளும் உஷாராக இருக்கும்படி கட்டளை.!.




புதுடெல்லி, டிச.20-

குடியரசு தினத்தன்று, டெல்லியில் விமானம் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால், முப்படைகளும் உஷாராக இருக்கும்படி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கட்டளையிட்டு இருக்கிறார்.


குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் பிரமாண்ட விழா நடைபெறும். அப்போது தீவிரவாதிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று, புலனாய்வுத்துறை மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மத்திய ராணுவ இலாகா மந்திரி ஏ.கே. அந்தோணி, விமானப்படையின் தலைமை அதிகாரி ஏர்மார்ஷல் பாலி ஹோமியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். குடியரசு தின விழா நடைபெறும் போது, வானத்தில், போர் விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஏ.கே.அந்தோணி உத்தரவு பிறப்பித்தார்.


ராணுவ தளபதி தீபக் கபூரும், ஏ.கே.அந்தோணியை சந்தித்தார். அப்போது, 26-ந் தேதியன்று ராணுவத்தினர் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஏ.கே.அந்தோணி கேட்டுக்கொண்டார்.

கடற்படை தளபதி சுரேஷ் மேத்தாவும், ஏ.கே.அந்தோணியை சந்தித்தார். அப்போது, கடல் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ மந்திரி உத்தரவிட்டார்.

குடியரசு தின பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, கடலோர காவல் படையினர் மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளுடனும் ஏ.கே.அந்தோணி, இன்னும் சில நாட்களில் ஆலோசனை நடத்துகிறார்.

கருத்துகள் இல்லை: