ஞாயிறு, 7 டிசம்பர், 2008

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


மதுரை, டிச.8-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்ட கலெக்டரின் இ-மெயில் முகவரிக்கு கடந்த 4-ந் தேதி ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அதில், பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்களில் டிசம்பர் 6-ந் தேதி வெடிகுண்டுகள் வெடிக்கும். இதே போல் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்றும் 3 கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன், ராமநாதசுவாமி கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த இ-மெயில் தகவல் குறித்து தல்லாகுளம் போலீசில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இ-மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த ஒரு செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூரை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரத்தினம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.
தனிப்படையினர் ரத்தினத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இ-மெயில் மிரட்டல் அவர் அனுப்பவில்லை என்றும், ஆனால் அவருக்கு எதிராக அதே ஊரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் மணிமாறன் (வயது 30) என்பவர் திருப்பூரில் இருந்து அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மணிமாறனை பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தினத்துக்கு எதிராக, அவரை போலீசில் மாட்டி விடுவதற்காக இந்த இ-மெயில் மிரட்டலை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் மணிமாறனை மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் போலீசாரிடம் மணிமாறன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் ஆகும். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. படித்தேன். பிறகு ஓராண்டு கம்ப்ட்டர் பயிற்சியும் முடித்தேன். படிக்கிறபோதே அதே ஊரை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டேன்.
எங்களுக்கு நந்தீஸ்வரன் (8), பிரியதர்ஷனி, ரோகிணி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். மானாமதுரையில் ஒரு கம்ப்ட்டர் சென்டரில் டீச்சராக வேலை பார்த்தேன். குடும்பம் நடத்த சம்பளம் போதாததால் திருப்பூர் சென்றேன். அங்கு ஒரு நிறுவனத்தில் டிசைனிங் பிரிவில் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி மற்றும் குழந்தைகள் மிளகனூரில் இருந்து வருகிறார்கள்.

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் எனது மனைவி ஹேமலதா காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டார். இந்த சமயத்தில் ரத்தினத்துக்கும், எனது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்தேன். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். ரத்தினத்தை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. பாதுகாப்பு என்ற பெயரில் போலீசார் பரபரப்பாக இருக்கும், இந்த நேரத்தில் ரத்தினம் பெயரில் முக்கிய கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் அவரை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கருதினேன்.
இதற்கான திட்டத்தை நிறைவேற்ற ரத்தினம் பெயரில் இ-மெயில் முகவரியை தயார் செய்தேன். இதன் மூலம் மீனாட்சி அம்மன், ராமநாதசுவாமி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்.

இதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளின் இ-மெயில் முகவரிகளை தேடியபோது கிடைக்கவில்லை. அப்போது தான் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு இ-மெயில் முகவரி கிடைத்தது. இதன் வழியாக ரத்தினம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவலை அனுப்பினேன். அதில் இப்படிக்கு ரத்தினம், எம்.ஆர். `டெர்ரீஸ்ட்', மிளகனூர், சிவகங்கை மாவட்டம் என்பதோடு அவரது செல்போன் நம்பரை குறிப்பிட்டு இருந்தேன்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் என்னை கைது செய்தனர். நான் வேண்டும் என்று இந்த மிரட்டலை விடுக்கவில்லை. எனது எதிரியான ரத்தினத்தை போலீசில் சிக்க வைக்கவே இதை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மணிமாறனை கைது செய்தனர். அவர் மிரட்டல் விடுக்க பயன்படுத்திய கம்ப்ட்டர் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரத்தினத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: