செவ்வாய், 30 டிசம்பர், 2008

தலிபான்களின் கோட்டையாகி விட்ட சுவாத் பள்ளத்தாக்கு - நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறும் பாக். அரசு.


இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் ஒரு காலத்தில் பிரபல சுற்றுலா தலமாக இருந்த, சுவாத் பள்ளத்தாக்கு, தற்போது தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. கண்ணுக்கு இனிய இயற்கை காட்சிகள் கொண்ட பள்ளத்தாக்கை தங்களின் கோட்டையாக மாற்றியுள்ள தலிபான்கள், எதிர்ப்பவர்களை தலையை துண்டித்தும் கொன்றும் வருகின்றனர். இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது பாக்., அரசு.


பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வாசிரிஸ்தான் பகுதிகளில், ஏற்கனவே தலிபான்கள் மற்றும் அல்- குவைதா பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இங்கு இவர்களை ஒடுக்கும் பணியில் ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தப் பகுதியில் இருந்து தொலை தூரத்தில் உள்ள மற்றொரு பகுதியான சுவாத் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இங்குள்ள இயற்கை வனப்பு மிக்க மலைப்பகுதிகளில் பெரும்பாலானவை, தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. "சுவாத் பகுதி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது' என, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். சுவாத் பகுதியில் உள்ள இவர் வீடு, சமீபத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.


"சுவாத் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான், தலிபான் பயங்கரவாதிகள் பரவத் துவங்கினர். தற்போது அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் யாரும் இப்போது செல்ல முடியவில்லை. அங்கு வசிக்கும் மக்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேட்டி காண முடியவில்லை. தலிபான்களின் கெடுபிடிகளுக்கு பயந்து அதிகாரிகள் பலர், இப்பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்' என, அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சுவாத் பகுதியை ஒட்டிய பர்னர் என்ற இடத்தில், கடந்த ஞாயிறன்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இப்பகுதியில் பீதி உருவாகியுள்ளது.


மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால், நிலைமை மேலும் மோசமாகி விடும். இப்பகுதியில் முன்னர் 15 லட்சம் பேர் வசித்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளியேறி விட்டனர்.
இப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் எல்லாம், மவுலானா பசுல்லா என்பவரின் தலைமையின் கீழ் செயல்படுகின்றனர். இங்குள்ள பயங்கரவாதிகள் எல்லாம், நீண்ட தலைமுடி, தாடி, துப்பாக்கிகள், சால்வைகள் மற்றும் ஷூக்களுடன் காணப்படுவதால், அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். தற்போதைய நிலையில், 2,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உள்ளனர். சில இடங்களில் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில், கிராமங்களே உள்ளன. அரசு ஆதரவாளர்களை தலை துண்டித்து கொலை செய்வதோடு, பாலங்களையும் குண்டுகள் வைத்தும் தகர்க்கின்றனர். மேலும், பெண்கள் எல்லாரும் பர்தா அணிய வேண்டும் என்றும் கடும் நிபந்தனை விதிக்கின்றனர். இதை மீறுவோரை தண்டிக்கவும் செய்கின்றனர்.


அரசைப் போலவே, கோர்ட்டுகளை நடத்துவது, வரி வசூல் செய்வது, சோதனை சாவடிகள் அமைத்து சோதனையிடுவது போன்ற வேலைகளையும் செய்கின்றனர். இப்பகுதியில் இருந்த மகளிர் பள்ளிகள் பலவற்றையும் தீ வைத்து அழித்துள்ளனர். டிசம்பர் மாத மத்திய பகுதியில், இளம் வயது நபர் ஒருவர் தலிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். உடன் அவரை கொன்ற பயங்கரவாதிகள், அவரின் பிணத்தை கிராமத்தின் மையப் பகுதியில் கயிற்றில் கட்டி இரண்டு நாட்கள் தொங்கவிட்டனர். அவரைப் போல யாருக்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காக இதைச் செய்தனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டிக்காக சுவாத் பகுதியில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வந்த சலா - உத் -தீன் கூறுகையில், "சுவாத் பள்ளத்தாக்கின் 80 சதவீத பகுதி, தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது' எனக் கூறியுள்ளார்.


தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள நகரம் பெஷாவர். இந்நகரை ஒட்டிய பழங்குடியின பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் அதிகளவில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மீது இந்த தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாக்., ராணுவத்தினர் நேற்று மீண்டும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ஜம்ரூத் பகுதியில் தங்கியிருக்கும் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாயினர்.


இங்குள்ள மலைப்பகுதிகளில் தலிபான்களின் மறைவிடங்களை குறிவைத்து, ராணுவ ஹெலிகாப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. அத்துடன் சிறிய பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.

திங்கள், 29 டிசம்பர், 2008

இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் !.


ஜெருசலேம்:

காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதுவரை நடந்துள்ள தாக்குதலில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் அதிரடியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதில் ஏராளமானோர் பலியாயினர். இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் இரண்டாவது நாளாக நேற்றும்காசா எல்லைப் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின. இதுவரை நடந்துள்ள தாக்குதலில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாகவும், 800க்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் மீது தரை வழியாகவும் தாக்குதலைத் துவங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிவருகிறது. 6,000 ராணுவ வீரர்களை எல்லைப் பகுதிக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து இஸ்ரேல்அதிகாரிகள் கூறுகையில், "ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்ப இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.

வெள்ளி, 26 டிசம்பர், 2008

பாகிஸ்தானுடன் போர் மேகம்". - பிரதமர் மன்மோகன் சிங்குடன் முப்படை தளபதிகள் ஆலோசனை!.


புதுடெல்லி, டிச.27-

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் முப்படை தளபதிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு மாத `கெடு' விதித்திருந்தது.

ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிடிவாதமாக கூறி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பை நிரூபிக்க இந்தியா போதுமான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் சாக்கு போக்கு சொல்கிறது. உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்தும், தீவிரவாதிகள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டது.

இந்நிலையில், இந்தியா விதித்த ஒரு மாத `கெடு' நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இந்தியா எந்த நேரமும் அதிரடி தாக்குதலை தொடங்கலாம் என்று பாகிஸ்தான் பீதியில் உள்ளது. அதை சமாளிப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்தியாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் விமானப்படை விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. விடுமுறையில் சென்ற ராணுவத்தினரை உடனே பணிக்குத் திரும்புமாறு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா போரை விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் தயார்நிலையில் இருப்பதால், இந்தியாவின் முப்படைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

போருக்கு தயார்நிலை பற்றி விவாதிப்பதற்காக, முப்படை தளபதிகளுடனான உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டினார். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ராணுவ தளபதி தீபக் கபூர், கடற்படை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பாலி எஸ்.மேஜர் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி பொதுவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, போரை சந்திக்க முப்படைகள் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளன என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

தத்தமது படைகள் தயார்நிலையில் இருப்பது பற்றி முப்படை தளபதிகளும் பிரதமரிடம் தனித்தனியாக எடுத்துரைத்தனர். பாகிஸ்தானின் அச்சுறுத்தல் பற்றியும், எதிர் நடவடிக்கைக்கு எல்லைப் பகுதியில் இந்தியா செய்துள்ள ஏற்பாடுகள் பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார். ராணுவத்தினருக்கான சம்பள கமிஷன் சிபாரிசில் நிலவும் அதிருப்தி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டம் வழக்கமானதுதான் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நடைபெற்றதால், இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, பாதுகாப்புக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்றது. அதிலும், போருக்கான தயார்நிலை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், போர் மூண்டால் உயிரை காத்துக்கொள்வதற்காக, தங்கள் வீடுகளில் பதுங்கு குழிகளை தோண்டி வருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள விமான தளங்கள் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விமான தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதால், அதை முறியடிப்பதற்காக, டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமான தளத்தில் மிக்-29 ரக போர் விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் விமான ஒத்திகை மீதும் இந்திய விமானப்படை ஒரு கண் வைத்துள்ளது. பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்பகுதிக்குள் ஊடுருவுகின்றனவா? என்று கண்காணித்து வருகிறது.

எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ராணுவ தளபதி தீபக் கபூர், சியாச்சின் பனிமலைச் சிகரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்திய விமானப்படை விமானங்கள், பொக்ரானில் குண்டு வீசி ஒத்திகையில் ஈடுபட்டன.

ஆனால், பாகிஸ்தானைப் போல், இந்தியா படையினர் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. எல்லைக்கு அப்பால், பாகிஸ்தான் ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் எம்.எல்.குமாவத் தெரிவித்தார். இருப்பினும், இது வழக்கமானதுதான், பயப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இடையே 3 தடவை போர் நடந்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் அடாவடிப் போக்கால், 4-வது தடவையாக போர் மூளும் சூழ்நிலை நிலவுகிறது.

புதன், 24 டிசம்பர், 2008

"தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா"?. - இந்தியாவின் `கெடு' நாளை முடிகிறது.





தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்த `கெடு' நாளையுடன் முடிவடைகிறது. எனவே பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யப்போகிறது? என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, டிச.25-

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக கடந்த 26-ந் தேதி மும்பை வந்த 10 தீவிரவாதிகள் அங்கு நட்சத்திர ஓட்டல்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய தாக்குதலில் 180-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆனார்கள்.

அவர்களில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மலிடம் நடத்திய விசாரணையில், தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு `கெடு' விதித்த இந்தியா, தீவிரவாதிகளின் பட்டியலையும் கொடுத்தது.

இதேபோல், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவும் பாகிஸ்தானை வற்புறுத்தியது. அத்துடன் தனது மண்ணை பாதுகாத்துக் கொள்வதற்காக தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்றும் கூறியது.

ஆனால் பாகிஸ்தானோ, `முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல்', மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று கூறுவதோடு, `தீவிரவாத இயக்கங்கள் மீது உறுதியான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், இன்னும் ஆதாரங்களை கொடுங்கள்' என்று கேட்டு வருகிறது. அத்துடன் இந்திய எல்லையை யொட்டிய பகுதியில் தனது படைகளை குவிப்பதோடு, `இந்தியா போர் தொடுத்தால் சந்திக்க தயார்' என்றும் சவால் விடுத்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய எல்லைப்பகுதியில் உள்ள நமது ராணுவமும் `உஷார்' படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்த ஒரு மாத `கெடு' நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது.

இதுபற்றி அமெரிக்க புலனாய்வு துறை நிபுணர் ஸ்டாட்போர் கூறுகையில்; தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள `கெடு' 26-ந் தேதியுடன் முடிவடைவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்காக இந்தியா கடந்த ஒரு மாதமாக தயாராகி வருகிறது என்றும் தெரிவித்தார். ராணுவ நடவடிக்கை தொடர்பான திட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தானை தாங்கள் வற்புறுத்தி வருவதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்றும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் கூறி விட்டதாக தெரிகிறது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் அலுவலகங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


இதற்கிடையே, கட்டளை வந்தால் தாக்குதல் நடத்த எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய விமானப்படையின் மேற்கு மண்டல தளபதி பி.கே.போர்போரா கூறி உள்ளார்.

இதுகுறித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

உலகிலேயே இந்திய விமானப்படை 4-வது பெரிய விமானப்படை ஆகும். நமது ராணுவ பலத்துக்கு பாகிஸ்தானின் ராணுவ பலம் ஈடாகாது. எந்த சவாலையும் சந்திக்க நாம் தயாராக இருக்கிறோம். இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்து பாகிஸ்தான் அஞ்சுகிறது. போரை அந்த நாடு தவிர்க்க நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

கட்டளை பிறப்பிக்கப்பட்ட 4 முதல் 6 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானில் உள்ள நிலைகளை நம்மால் தாக்க முடியும். தாக்குதல் இலக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்து இருக்கிறோம். மேலும் ஆபத்து குறித்த தகவல் வந்த 2 மணி நேரத்திற்குள் மேற்கு மண்டலத்தில் உள்ள நமது அனைத்து விமானப்படை தளங்களையும் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

என்றாலும் போர் என்பது கடைசி கட்ட நடவடிக்கைதான். பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அது முடியாத பட்சத்தில் சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். எல்லா முயற்சிகளுமே தோல்வி அடைந்தால்தான் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
போரினால் ஏற்படும் விளைவுகளை நமது பொருளாதாரம் தாங்கிக் கொள்ளும். ஆனால் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும். ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட பாகிஸ்தானால் இறக்குமதி செய்ய முடியாது. அந்த அளவுக்கு அங்கு பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது.

இவ்வாறு பி.கே.போர்போரா கூறினார்.
மும்பை தாக்குதல் சம்பவம் பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்; மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்தான் என்று கூறினார்.

இப்போது, அவர் திடீரென்று `பல்டி' அடித்து உள்ளார்.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கான ஆதாரத்தை இந்தியா கொடுத்தால், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் சர்தாரியை சந்தித்து கூறுவேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

அப்படி இந்தியாவால் ஆதாரங்களை கொடுக்க முடியாவிட்டால், உண்மைக்கு மாறான புகார்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார்.

இதற்கிடையே, ராணுவ உயர் அதிகாரி தாரிக் மஜித்துடன் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்; பாகிஸ்தான் ராணுவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் எந்த தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி அதற்கு உண்டு என்றும் கூறினார்.

செவ்வாய், 23 டிசம்பர், 2008

பாகிஸ்தான் அதிபருடன் ராணுவ தளபதி சந்திப்பு!.- ``போருக்கு எந்த நிமிடமும் தயார்'' என்று அறிவிப்பு.(!.?)



இஸ்லாமாபாத், டிச.24-

பாகிஸ்தான் அதிபரை அந்த நாட்டு ராணுவ தளபதி சந்தித்தார். அப்போது ``போருக்கு எந்த நிமிடமும் தயார்'' என்று அவரிடம் கூறினார்.

``மும்பை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் அந்த இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு இயங்கும் தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பாகிஸ்தான் இதற்கு சரியான பதில் அளிக்க வில்லை. சில தலைவர்களை கைது செய்வது போல செய்து, பின்னர் விட்டு விட்டது. தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அதற்குரிய போதுமான ஆதாரங்களை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் சப்பை கட்டு கட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் கண்டித்தும் பாகிஸ்தான் மசியவில்லை.



இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரமும் போர் தொடுக்கலாம் என்று அந்த நாடு அச்சத்தில் உள்ளது. இதன் எதிரொலியாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வைத்து இருக்கிறது. ஆப்கானிஸ்தான் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த படைகளையும் இந்திய பகுதிக்கு அனுப்பி உள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை தனது கண்காணிப்பை அதிகரித்து உள்ளது. தனது நகரங்கள் மீது இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தக் கூடாது என்று கருதி, முன்னெச்சரிக்கையாக இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் ஆகிய முக்கிய நகரங்கள் மீது போர் விமானங்கள் பறந்து தீவிர கண்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.


பாகிஸ்தான் பிரதமர் ராஜா கிலானி கராச்சியில் பேசும்போது, ``நாட்டின் கிழக்கு பகுதியில் போர் தொடுக்கப்பட்டால் நாட்டு மக்கள் அதை ஒற்றுமையாக எதிர் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கிய சில மணி நேரத்தில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை அந்த நாட்டின் தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் எத்தகைய பதிலடி கொடுக்கும் என்றும், போர் வியூகங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

அவர் கூறியதாக அந்த நாட்டு பத்திரிகை `தி நியூஸ் டெய்லி' தெரிவித்து இருப்பதாவது:-

``இந்தியா போர் தொடுத்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் படைகள் சரியான பதிலடி கொடுக்கும். எத்தகைய தாக்குதலையும் எதிர் கொள்ள நமது படைகள் முழு வீச்சில் தயாராக இருக்கின்றன. நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்ய நமது வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்.''

இவ்வாறு கயானி தெரிவித்தார்.
அப்போது சர்தாரி அவரிடம் கூறியதாவது:-

``அமைதி ஏற்பட நடவடிக்கைகளை முடுக்கி விடலாம் என்று நினைக்கிறேன். அதற்காக பாகிஸ்தானை பலவீனமாகக் கருதி விடக் கூடாது. பக்கத்து நாடுகளிடம் சமாதானத்துடனும், நல்லுறவுடனும் நீடிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய தலைவர்கள் விடும் அறிக்கைகள் போர் சூழலை உருவாக்கும் வகையில் உள்ளன.

நாட்டின் முப்படைகள், அரசியல், தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டால் ஒற்றுமையாக சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எல்லைப் பகுதியில் அப்படி ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது.''

இவ்வாறு சர்தாரி கூறினார்.

நேற்று முன்தினம் இரவு அமெரிக்க முப்படைகளின் இணை தலைமை தளபதி அட்மிரல் மைக் முல்லன், பாகிஸ்தான் தலைமை தளபதி கயானி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவரிடமும், ``இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், எங்களைப் பாதுகாத்துக் கொள்ள சரியான பதிலடி கொடுப்பதற்கு முழு உரிமை இருக்கிறது'' என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் முழு ஆதரவு அளிக்கப் போவதாக தலீபான் இயக்கம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமான தெஹ்ரிக்-இ-தலீபான் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத், `தி டெய்லி நிïஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், ராணுவத்துடன் இணைந்து போராட ஆயிரக்கணக்கான எங்களது வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் படைகளுக்கு உதவியாக செல்ல ஆயிரக்கணக்கான தற்கொலைப் படையினருக்கு, வெடிகுண்டுகளுடன் கூடிய ஜாக்கெட்டுகள், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வகானங்கள் அளித்து உள்ளோம்'' என்று தெரிவித்து உள்ளார்.

திங்கள், 22 டிசம்பர், 2008

பாகிஸ்தான் மீது எந்த வித நடவடிக்கைக்கும் இந்தியா தயார்!." - பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை!!!.



புதுடெல்லி, டிச.23-

`பாகிஸ்தானில் பதுங்கி உள்ள தீவிரவாதிகளை பிடிப்பதில் தீவிரம் காட்டாவிட்டால் பொருளாதாரத் தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை இந்தியா மேற்கொள்ளும்' என்று வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மும்பையில் நேரடி தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து வந்தவர்கள் என்பது உறுதி செய்யப்பட்டு உள்ளது. இந்த தாக்குதலை தொடர்ந்து, இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் ஏற்படும் நிலைமை ஏற்பட்டுள்ளது. முப்படை தளபதிகளுடன் ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி ஆலோசனை நடத்தினார்.

இந்தியா அளித்த ஆதாரங்களை தொடர்ந்து அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளும் பாகிஸ்தானுக்கு நெருக்கடி கொடுத்து வருகின்றன. இந்த நிலையில், அமெரிக்கா, இங்கிலாந்து, ஐரோப்பிய ïனியன் உள்பட 120-க்கும் மேற்பட்ட நாடுகளில் பணியாற்றி வரும் இந்திய தூதர்களின் மாநாடு டெல்லியில் நேற்று தொடங்கியது.

இந்த மாநாட்டை வெளியுறவு மந்திரி பிரணாப் முகர்ஜி தொடங்கி வைத்து பேசினார். பின்னர் நிருபர்களுக்கும் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலில் உள்ள இந்திய தூதரக தாக்குதல், மும்பை தாக்குதல் ஆகியவற்றின் மூலமாக, இந்த பிராந்தியத்தின் அமைதியை குலைப்பதில் பாகிஸ்தான் தீவிரவாதிகளின் ஆதிக்கம் அதிகரித்து வருவது தெளிவாகிறது. தீவிரவாதிகளை ஒடுக்குமாறு பாகிஸ்தானுக்கு உலக நாடுகள் நெருக்கடி கொடுக்க வேண்டும்.

பாகிஸ்தானில் உள்ள தீவிரவாத குழுக்கள் மற்றும் அவர்களால் இயக்கப்படும் முகாம்களால் இந்தியாவுக்கு மட்டுமல்ல உலக நாடுகளுக்கே அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பு வசதிகளை பாகிஸ்தான் அரசு அழிக்க வேண்டும். அதுதான் ஒட்டு மொத்த உலகத்துக்கும், பாகிஸ்தான் மக்களுக்கும் நல்லது.


எல்லைதாண்டிய தீவிரவாதத்தை ஒழிப்பதில் அனைத்து நடவடிக்கைகளையும் இந்தியா மேற்கொள்ளும். பாகிஸ்தான் தீவிரவாதிகளை ஒழிப்பது தொடர்பான எந்த ஒரு வாய்ப்பையும் இந்தியா இன்னும் கைவிடவில்லை என்பதை தெரிவித்து கொள்கிறேன். பாகிஸ்தானை வழிக்கு கொண்டு வருவதற்காக உலக நாடுகள் மேற்கொண்டுள்ள முயற்சிகள் போதாது. தங்களுடைய அனைத்து வசதிகளையும் பயன்படுத்த வேண்டும்.

எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிப்பதாக இந்தியாவிடமும் `சார்க்' அமைப்பிலும் பாகிஸ்தான் அளித்த உறுதி மொழி எதுவும் காப்பாற்றப்படவில்லை. பாகிஸ்தானில் மக்களால் நடத்தும் ஒரு அரசையே இந்தியா எதிர்பார்க்கிறது. ஆனால், தீவிரவாதிகள்தான் அரசை ஆட்டுவித்து வரும் போக்கு இன்னும் தொடருகிறது.


இந்திய மக்கள் கொல்லப்படுவதையும், அவர்களுடைய சொத்துகள் அழிக்கப்படுவதையும் பார்த்துக் கொண்டு இருக்க முடியாது. பாகிஸ்தான், தனது உறுதி மொழியை காப்பாற்றினால் மட்டுமே மும்பை தாக்குதல் விசாரணையில் கிடைத்த ஆதாரங்களை கொடுக்க முடியும். பல்வேறு பிரச்சினைகளிலும் திசை திருப்பும் வகையிலேயே பாகிஸ்தான் செயல்பட்டு வருகிறது.
தீவிரவாதி மசூத் அசார் உள்ளிட்ட தீவிரவாதிகளை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். அவர்களை ஒப்படைப்பதில் சட்ட சிக்கல்கள் எதுவும் இல்லை. தற்போதைய சட்ட விதிகளே போதும். எனவே, தீவிரவாதிகளை ஒடுக்குவதில் பாகிஸ்தான் தீவிரம் காட்ட வேண்டும். இல்லாவிட்டால், பொருளாதார தடை உள்ளிட்ட நடவடிக்கைகளை எதிர் கொள்ள நேரிடும். இதைத் தவிர இந்தியாவுக்கு வேறு வழியே இல்லை.


பாகிஸ்தானுடன் போர் குறித்து கேள்வி எழுந்துள்ளது. சூழ்நிலைக்கு தகுந்த நடவடிக்கைகளை நாங்கள் (மத்திய அரசு) மேற்கொள்வோம். அனைத்துவித நடவடிக்கைகளுக்கான வாய்ப்புகளும் எங்கள் முன் உள்ளன. பாகிஸ்தான், தன்னுடைய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்பதே இந்தியாவின் விருப்பம்.

ராணுவ நடவடிக்கை எடுப்பது குறித்து பத்திரிகையாளர்களிடம் வெளிப்படையாக கூற முடியாது. அப்படி ஒரு சூழ்நிலை ஏற்பட்டால் அந்த நடவடிக்கையை வெளிப்படையாக எடுப்போம். ராணுவ நடவடிக்கை என்பது யாருடைய தனிப்பட்ட நலனுக்காகவும் மேற்கொள்வது கிடையாது.

இவ்வாறு பிரணாப் முகர்ஜி கூறினார்.
இந்த மாநாட்டில், பிரதமர் மன்மோகன் சிங் இன்று கலந்து கொண்டு உரையாற்றுகிறார். ஜனாதிபதி பிரதீபா பட்டீலும் மாநாட்டில் பங்கேற்க உள்ளார். இது தவிர, இந்தியாவில் உள்ள முக்கிய தொழில் அதிபர்களுடன் இந்திய தூதர்கள் கலந்துரையாடவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதற்கிடையே, மும்பை தீவிரவாதிகள் தாக்குதல் எதிரொலியாக இந்திய தூதர்கள் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டதாக வெளியான தகவல்களை உயர் அதிகாரி ஒருவர் மறுத்தார்.

அவர் கூறுகையில், "இதற்கு முன் 1969-ம் ஆண்டில் தூதர்கள் மாநாடு நடந்தது. அப்போது 52 நாடுகளின் இந்திய தூதர்கள் பங்கேற்றனர். தற்போது 120 நாடுகளில் பணியாற்றும் தூதர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்திலேயே மாநாட்டுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அணுசக்தி ஒப்பந்தம" உள்ளிட்ட பிரச்சினைகளால் கால தாமதம் ஏற்பட்டு தற்போது நடைபெறுகிறது'' என்றார்.

ஞாயிறு, 21 டிசம்பர், 2008

"நாங்கள் போரை விரும்ப வில்லை"- "எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால், சந்திக்க தயார்" - பாகிஸ்தான் மந்திரி மிரட்டல்!.





இஸ்லாமாபாத், டிச.22-

நாங்கள் போரை விரும்ப வில்லை. ஆனால் எங்கள் மீது போர் திணிக்கப்பட்டால், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று, பாகிஸ்தான் மந்திரி கூறினார்.

மும்பையில் நடந்த கொடூர தாக்குதலில் ஈடுபட்டவர்கள், பாகிஸ்தானை சேர்ந்த தீவிரவாதிகள் என்று இந்தியா திட்டவட்டமாக ஆதாரத்துடன் கூறுகிறது.

ஆனால் இதை பாகிஸ்தான் ஏற்கவில்லை. இதனால் இரு நாடுகள் இடையே ஏற்பட்டுள்ள பிரச்சினை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுக்கலாம் என்று உலக நாடுகள் கருதுகின்றன.

இந்த நிலையில் பாகிஸ்தானின் வெளி உறவுத்துறை மந்திரி ஷா முகமது குரேஷி நிருபர்களிடம் கூறியதாவது:-

நாங்கள் போரை விரும்ப வில்லை. சமாதானத்தையே விரும்புகிறோம். ஆனால் போர் எங்கள் மீது திணிக்கப்பட்டால், அதை சந்திக்க தயாராக இருக்கிறோம். எங்கள் நாட்டு மக்களை பாதுகாத்துக்கொள்ள வேண்டிய கடமையை, நாங்கள் முழுமையாக செய்வோம்.

தீவிரவாதிகள் பற்றி விசாரணை நடத்த இந்தியாவுடன் ஒத்துழைக்க தயார். ஆனால், இந்தியா எங்களுக்கு உறுதியான ஆதாரங்களை கொடுக்க வேண்டும். விசாரணை தொடங்கும் முன்பே, எங்கள் மீது குற்றம் சாட்டுவது சரியல்ல.

தீவிரவாத அமைப்புகள் மீது நாங்கள் சரியான நடவடிக்கை எடுத்து வருகிறோம். இதை உலக நாடுகள் பாராட்டுகின்றன. தீவிரவாதிகள் பற்றி நாங்களும் விசாரணை நடத்தி வருகிறோம்.

இந்தியாவில் இருந்து எதிர்பார்க்கப்படும் ஆதாரங்களுக்காக காத்திருக்கிறோம். தீவிரவாதிகள் மீது குற்றம் கண்டு பிடிக்கப்பட்டால், எங்களது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு குரேஷி கூறினார்.

``உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் கணவரை கொன்றோம்'' - கள்ளக்காதலனுடன் கைதான ஆங்கிலோ இந்திய பெண் வாக்குமூலம்!.


சென்னை, டிச.22-
உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதாக ஆங்கிலோ இந்திய பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 756-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் இருந்தார். இவருடைய மனைவி நிக்கோலா (வயது 26). ஆங்கிலோ இந்திய பெண். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

அமைந்தகரையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த பிரவீன் கடந்த 18-ந் தேதி நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு அறைக்குள் பிணமாக கிடந்தார். கணவரைக் கொன்று விட்டு நிக்கோலா தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நிக்கோலாவுக்கு, அம்பத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிமாறன் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. 2 முறை மணிமாறனுடன் ஓடிப் போன நிக்கோலாவை, பிரவீன் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். பிரவீன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ஆட்டோ டிரைவர் மணிமாறனும் தலைமறைவாகிவிட்டார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிக்கோலா மற்றும் மணிமாறனை போலீசார் பிடித்தனர். அவர்களின் விசாரணையில், நிக்கோலா, மணிமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரவீனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நிக்கோலா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
"நான் சைதாப்பேட்டையில் கால் சென்டரில் வேலைக்கு செல்ல மணிமாறன் ஆட்டோவில்தான் செல்வேன். அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. எங்களுடைய விவகாரம் தெரியவந்ததும், எனது கணவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

மணிமாறனுடன் நான் வாழப்போகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று என் கணவரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டு மணிமாறனுடன் சென்றேன். ஆனால் அவர் போலீஸ் உதவியுடன் மணிமாறனிடம் இருந்து என்னை பிரித்தார். மீண்டும் அவருடன் சென்றேன். ஆனால் மறுபடியும் என் கணவர் என்னை பிரித்து டி.பி.சத்திரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

இதனால் பிரவீனை தீர்த்துக்கட்டிவிடலாம் என்ற முடிவுக்கு நானும், மணிமாறனும் வந்தோம். முதலில் அவரது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் சண்டை போட்டேன். இங்கிருந்து சென்றுவிடலாம் என்று நான் கூறிய யோசனைக்கு பிரவீன் சம்மதித்தார். அதைத் தொடர்ந்து அமைந்தகரையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.

அங்கிருந்து மணிமாறனுக்கு போன் செய்து வரவழைத்தேன். அவர் என் கணவரிடம், என்னை விட்டு விடும்படி கேட்டார். ஆனால் அவரை கொன்றுவிடுவேன் என்று சொல்லி மிரட்டி விரட்டி அடித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பிரவீன் தூங்கி கொண்டிருந்த போது மணிமாறன் வந்தார். கத்தியால் நெஞ்சு, தொண்டையில் குத்தினார்.
அப்போது பிரவீன் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை நான் பொத்தினேன். அவர் இறந்ததை உறுதி செய்து விட்டு அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தப்பி ஓடினோம். எங்கு செல்வது என தெரியாமல் சென்னைக்குள் ஆட்டோவில் சுற்றிய போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு நிக்கோலா வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மாலை மணிமாறன், நிக்கோலா ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

சனி, 20 டிசம்பர், 2008

ஆப்பிள் இறக்குமதிக்கு லஞ்சம் கேட்டதாக சென்னை துறைமுக சுதாதார அதிகாரி கைது!.- ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்!.


சென்னை, டிச.21-

ஆப்பிள் இறக்குமதிக்கு லஞ்சம் கேட்ட சென்னை துறைமுக சுகாதார அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை கோயம்பேட்டில் பழ ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர் என்.சி.அலெக்சாண்டர். இவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்வது வழக்கம். இவை கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

சென்னை துறைமுகத்துக்கு வந்ததும் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் அனைத்தையும் துறைமுக சுகாதார அதிகாரியை வைத்து சோதனையிட வேண்டும். மக்கள் பயன்பாட்டுக்கு இந்தப் பழங்கள் அனைத்தும் உகந்ததுதானா? என்பதை அந்த அதிகாரி சோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்குவார்.

இந்த வகையில் 19-ந் தேதி அமெரிக்கா வாஷிங்டன் நகரில் இருந்து ஆப்பிள் பழங்களை அலெக்சாண்டர் இறக்குமதி செய்தார். அவை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்தன. இவற்றை சோதனை செய்து சான்றிதழ் வழங்கும்படி துறைமுக சுகாதார அதிகாரி டாக்டர் வி.வி.சாய்ராம்பாபு-வை அலெக்சாண்டர் அணுகினார்.

இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று சாய்ராம்பாபு கேட்டுள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டிடம் (லஞ்ச தடுப்புப் பிரிவு) அலெக்சாண்டர் புகார் கொடுத்தார்.


இதன் அடிப்படையில் சாய்ராம்பாபுவை ரூ.6 ஆயிரத்தை லஞ்சமாக பெறும்போது, சி.பி.ஐ. போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த பணத்தை அலெக்சாண்டரிடம் இருந்து சுங்கவரித்துறை ஏஜெண்ட் மணிசேகரன் மற்றும் பூபதி ஆகியோர் வாங்கி சாய்ராம்பாபுவிடம் கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சாய்ராம்பாபு, மணிசேகரன் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். சாய்ராம்பாபுவின் அலுவலகம் மற்றும் வீட்டை சோதனையிட்டனர். பணம் மற்றும் பல்வேறு பத்திரங்களையும் சேர்த்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கணவனை கொன்ற ஆங்கிலோ இந்திய பெண் கள்ளக்காதலனுடன் கைது!.



சென்னை, டிச.21-

சென்னை லாட்ஜில் கணவனை கொன்று விட்டு தப்பி ஓடிய ஆங்கிலோ இந்திய பெண் கள்ளக்காதலனுடன் ஆட்டோவில் சுற்றிய போது பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.


சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 156-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி நிக்கோலா (வயது 26). ஆங்கிலோ இந்திய பெண். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு பிரவீன், குடும்பத்தினருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு லாட்ஜ் அறையில் பிரவீன் நெஞ்சில் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கணவரைக் கொன்று விட்டு நிக்கோலா தலைமறைவாகிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் நிக்கோலாவுக்கு, மணிமாறன் என்ற ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. 2 முறை தன்னை விட்டு ஆட்டோ டிரைவர் மணிமாறனுடன் பிரிந்து சென்ற மனைவி நிக்கோலாவை பிரவீன் சமாதானப்படுத்தி வாழ்க்கையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே மணிமாறனை தேடி போலீசார் அம்பத்தூர் சென்ற போது அவரும் தலைமறைவானது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கும் பிரவீன் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலையில் நிக்கோலா, டிரைவர் மணிமாறனுடன் ஆட்டோவில் சுற்றிக் கொண்டிருந்தார். நிக்கோலாவின் பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிப்பதற்காக விரட்டினர்.

சிறிது தூரம் விரட்டி சென்று நிக்கோலாவையும், கள்ளக்காதலன் மணிமாறனையும் சுற்றி வளைத்து பிடித்து, இருவரையும் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிரவீன் கொலை செய்யப்பட்ட போது, அந்த அறையில் மணிமாறனும் இருந்ததும், பிரவீன் கால்களை நிக்கோலா பிடித்துக் கொள்ள, மணிமாறன்தான் பிரவீனை குத்தி கொலை செய்துவிட்டு, லாட்ஜின் பின்புறமாக தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிக்கோலா, மணிமாறன் ஆகிய இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

வெள்ளி, 19 டிசம்பர், 2008

"குடியரசு தினத்தன்று டெல்லியில் விமானம் மூலம் தாக்குதல் நடத்தும் ஆபத்து!"- தீவிரவாதிகளின் சதியை முறியடிக்க முப்படைகளும் உஷாராக இருக்கும்படி கட்டளை.!.




புதுடெல்லி, டிச.20-

குடியரசு தினத்தன்று, டெல்லியில் விமானம் மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தும் ஆபத்து இருப்பதால், முப்படைகளும் உஷாராக இருக்கும்படி, ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி கட்டளையிட்டு இருக்கிறார்.


குடியரசு தினமான வரும் ஜனவரி 26-ந் தேதி, டெல்லி செங்கோட்டையில் பிரமாண்ட விழா நடைபெறும். அப்போது தீவிரவாதிகள் விமானம் மூலம் தாக்குதல் நடத்தலாம் என்று, புலனாய்வுத்துறை மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்து இருக்கிறது.

இதைத்தொடர்ந்து மத்திய ராணுவ இலாகா மந்திரி ஏ.கே. அந்தோணி, விமானப்படையின் தலைமை அதிகாரி ஏர்மார்ஷல் பாலி ஹோமியை நேரில் அழைத்து ஆலோசனை நடத்தினார். குடியரசு தின விழா நடைபெறும் போது, வானத்தில், போர் விமானங்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் என்று ஏ.கே.அந்தோணி உத்தரவு பிறப்பித்தார்.


ராணுவ தளபதி தீபக் கபூரும், ஏ.கே.அந்தோணியை சந்தித்தார். அப்போது, 26-ந் தேதியன்று ராணுவத்தினர் மிகுந்த கண்காணிப்புடன் செயல்பட வேண்டும் என்று ஏ.கே.அந்தோணி கேட்டுக்கொண்டார்.

கடற்படை தளபதி சுரேஷ் மேத்தாவும், ஏ.கே.அந்தோணியை சந்தித்தார். அப்போது, கடல் பாதுகாப்பை பலப்படுத்த ராணுவ மந்திரி உத்தரவிட்டார்.

குடியரசு தின பாதுகாப்பை மேலும் பலப்படுத்த, கடலோர காவல் படையினர் மற்றும் உள்துறை உயர் அதிகாரிகளுடனும் ஏ.கே.அந்தோணி, இன்னும் சில நாட்களில் ஆலோசனை நடத்துகிறார்.

சென்னை லாட்ஜில் கணவரை குத்திக் கொன்ற ஆங்கிலோ இந்திய பெண்ணின் காதல் லீலைகள்:- கள்ளக்காதலனுடன் தலைமறைவானவருக்கு போலீஸ் வலைவீச்சு!.


சென்னை, டிச.20-

சென்னை லாட்ஜில் கணவரை கொன்றுவிட்டு கள்ளக்காதலனுடன் ஓடிய ஆங்கிலோ இந்திய பெண்ணை போலீசார் தேடி வருகின்றனர்.


சென்னை டி.பி.சத்திரம் மெயின்ரோடு 756 பிளாக்கை சேர்ந்தவர் தணிக்கைராஜ் பிரவீன் (வயது 30). இவர் வாடகை கார் டிரைவராக இருந்ததுடன், எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் பணியாற்றினார்.

பிரவீனுக்கும் பெரம்பூர் திரு.வி.க. நகரை சேர்ந்த ஆங்கிலோ இந்திய பெண்ணான நிக்கோலா (26) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டு காதல் மலர்ந்தது. நிக்கோலா பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருப்பார்.


5 வருடங்களுக்கு முன்பு பெற்றோரிடம் சொல்லாமல் ரகசியமாக நிக்கோலாவும், பிரவீனும் திருமணம் செய்து கொண்டனர். கொடுங்கைர் கட்டபொம்மன் தெருவில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர். அவர்களுக்கு அடுத்தடுத்த வருடங்களிலேயே பிரிட்னி, நிக்வின், ஆன்ரியா என்ற 3 குழந்தைகள் பிறந்தன.

ஆங்கிலோ இந்திய பெண்ணான நிக்கோலா ஆங்கிலேய கலாசாரத்திலேயே வாழ்ந்தார். தினமும் மது, சிகரெட் என்று உல்லாசத்தில் திளைத்தார்.


நிக்கோலா நுனிநாக்கில் ஆங்கிலம் பேசுவார். இதனால் அவருக்கு சைதாப்பேட்டையில் உள்ள கால் சென்டரில் வேலை கிடைத்தது. மனைவி சைதாப்பேட்டைக்கு சென்று வருவதற்காக ஆட்டோ ஒன்றை மாதாந்திர வாடகைக்கு அமர்த்தினார். அமைதியாக சென்ற அவர்களின் வாழ்க்கையில் ஆட்டோ டிரைவர் மணிமாறன் (22) வடிவில் புயல் வீசத் தொடங்கியது.

மெல்ல மெல்ல நிக்கோலாவுக்கும், ஆட்டோ டிரைவர் மணிமாறனுக்கும் பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் அது கள்ளக்காதலாக மாறியது. அவர்களின் கள்ளக்காதல் பிரவீனுக்கு தெரியவந்தது. நிக்கோலாவை அவர் கண்டித்தார்.



இதனால் கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டது. நிக்கோலா கோபித்துக்கொண்டு, குழந்தைகளை வீட்டிலேயே விட்டு விட்டு ஆட்டோ டிரைவர் மணிமாறனுடன் ஓட்டம் பிடித்தார். இதையடுத்து பிரவீன் தனது மனைவியை மீட்டுத்தரும்படி போலீசில் புகார் செய்தார். போலீசாரும் நிக்கோலாவை மீட்டு பிரவீனிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்துக்கு பிறகு பிரவீன், மனைவி குழந்தைகளுடன் டி.பி. சத்திரத்தில் உள்ள தனது தந்தை வீட்டில் குடியேறினார்.

கடந்த மார்ச் மாதம் மீண்டும் வீட்டை விட்டு வெளியேறிய நிக்கோலா கள்ளக்காதலன் மணிமாறனுடன் மாதவரத்தில் குடும்பம் நடத்த தொடங்கினார்.



இதையடுத்து மனைவியை மீட்டுத் தரக்கோரி மீண்டும் டி.பி.சத்திரம் போலீஸ் நிலையத்திலும், போலீஸ் கமிஷனர் அலுவலகத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பிரவீன் புகார் செய்தார். அதைத் தொடர்ந்து இந்த பிரச்சினையில் போலீசார் தலையிட்டு, நிக்கோலாவை அழைத்து பேசினர். இதில் சமாதானம் அடைந்த நிக்கோலா கணவர் பிரவீனுடன் சேர்ந்து வாழ சம்மதம் தெரிவித்தார்.

கடந்த நவம்பர் மாதம் நிக்கோலா, மீண்டும் பிரவீனுடன் சேர்ந்தார். டி.பி.சத்திரத்தில் உள்ள வீடு, வசதி குறைவாக இருந்ததால், வேறு வீடு கிடைக்கும் வரை லாட்ஜில் தங்கலாம் என்று நிக்கோலா, பிரவீனுக்கு யோசனை தெரிவித்தார். மனைவி சொல்லையே மந்திரமாக நினைத்த பிரவீனும் அதற்கு உடன்பட்டார். கடந்த 10 நாட்களுக்கு முன்பு, மனைவி மற்றும் குழந்தைகளுடன் பிரவீன், பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் அறை எண் 205-ல் தங்கினார்.



இந்த நிலையில், நேற்று முன்தினம் மாலை நிக்கோலா, லாட்ஜ் அறையில் இருந்து பதறியபடி வெளியே ஓடிவந்தார். அவரது கையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இந்த காட்சியைப் பார்த்ததும் லாட்ஜ் மானேஜர் என்னவோ ஏதோ என்று பதறியபடி அறைக்கு ஓடினார். அங்கு பிரவீன் ரத்த வெள்ளத்தில் படுகொலை செய்யப்பட்டு படுக்கையில் பிணமாக கிடந்தார். அவரது நெஞ்சில் உடைந்த கண்ணாடியால் குத்தப்பட்டிருந்தது.

மூன்று குழந்தைகளும் அவரைச்சுற்றி அழுதபடி நின்றனர். பெற்றோர், நண்பர்களின் பேச்சைக் கேட்காமல், எந்த மனைவி தன்னுடன் வாழ வேண்டும் என்று பிரவீன் ஆசைப்பட்டாரோ, அவரே நெஞ்சில் குத்தி கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டார்.



இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில், உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில், இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். பிரவீன் உடலை கைப்பற்றி கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில், நிக்கோலா கையில் செல்போன் வைத்திருப்பது தெரியவந்தது. அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது அது `சுவிட்ச் ஆப்' செய்யப்பட்டிருந்தது. இந்த சம்பவத்தில், நிக்கோலாவின் கள்ளக்காதலன் மணிமாறனுக்கும் தொடர்பு இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.



பிரவீனை கொலை செய்தபோது, அதை நேரில் பார்த்த அவரது குழந்தைகளிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அம்பத்தூரில் உள்ள ஆட்டோ டிரைவர் மணிமாறன் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். ஆனால் அங்கு மணிமாறன் இல்லை. தலைமறைவாகிவிட்டார். அதைத் தொடர்ந்து மணிமாறனின் தாயார் மற்றும் உறவினர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

நிக்கோலாவின் தந்தை பிளாடியிடமும் விசாரணை நடந்து வருகிறது. தலைமறைவாக உள்ள நிக்கோலாவையும், மணிமாறனையும் பிடிக்க 2 தனிப்படை போலீசார் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். சென்னை மற்றும் புறநகர்ப்பகுதிகளில் போலீசார் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள். இன்னும் ஓரிரு தினங்களில் நிக்கோலாவும், கள்ளக்காதலன் மணிமாறனும் பிடிபடுவார்கள் என்று போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். அவர்கள் கைதாகும்பட்சத்தில் இந்த வழக்கில் மேலும் பல உண்மைகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதன், 17 டிசம்பர், 2008

கிறிஸ்துமஸ் கொண்டட்டச் செய்திகள் -1


கையிலே கலை வண்ணம் கண்டான் !
பெர்லின்:
ஜெர்மனியைச் சேர்ந்த மரவேலைப்பாடு கலைஞர் இவர். தனது கடையில் கிறிஸ்துமஸ் கொண்டாட்டத்துக்காக கைகளால் சிறு உளி மூலம் மரத்துண்டுகளை துருவி தத்ரூபமாக ஏசுநாதர் பிறந்ததை சித்தரித்துள்ளார்.

ஜெர்மனியில் கிறிஸ்துமஸ் பண்டிகை விழாக்கள் முழுவேகம் பெற்று வரும் நிலையில், இவரது கைத்திறனால் உருவாக்கப்பட்ட மரச் சிற்பங்களைக் காண மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர்.

தெலுங்கு நடிகை பார்கவி கொலையில் மர்மம் நீடிக்கிறது!





சித்தூர், டிச.18:
தெலுங்கு நடிகை பார்கவி கொலை வழக்கில் மர்மம் நீடிக்கிறது.

ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பார்ட்மென்ட்டில் வசித்து வந்த பார்கவி, நேற்று முன்தினம் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் உடலில் 8 இடங்களில் கத்திக்குத்து காயங்களுடன் பிணமாக கிடந்தார். அவருடைய மடியில் பிரவீன் என்பவர் இறந்து கிடந்தார்.

அந்த அறையில் இருந்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர்.

அந்த கடிதத்தில், "லட்சுமி பார்கவியும் நானும் 2006, பிப்ரவரி 14ம் தேதி திருமணம் செய்து கொண்டோம். சினிமா நடிகையாக உயர்ந்த பிறகு பார்கவியின் தாயார் பானு பாரதி தனது மகளின் வளர்ச்சிக்காக என்னை அவமானப்படுத்தி, இருவரையும் பிரித்து விட்டார்" என பிரவீன் எழுதியுள்ளார்.

"தன்னுடன் சேர்ந்து வாழ மறுத்தால் பார்கவியை கொல்வதற்காக சயனைடு விஷம், கத்தியை பிரவீன் தயாராக கொண்டு சென்று இருக்கலாம்.

வீட்டில் பார்கவி கொடுத்த குளிர்பானத்தில் சயனைடு விஷத்தை கலந்து கொடுத்த பிறகு, அவர் உயிர் தப்பி விடக்கூடாது என்பதற்காக கத்தியால் கழுத்தை அறுத்தும், உடலில் பலமுறை பிரவீன் குத்தியும் இருக்கலாம்.

பின்னர், அதே சயனைடை சாப்பிட்டு பார்கவியின் மடியில் விழுந்து இறந்திருக்கலாம்" என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

சயனைடு கலந்த குளிர்பானம் கொடுத்து பார்கவி கொல்லப்பட்டதற்கான தடயம் எதுவும் கிடைக்கவில்லை என்றும் வேறு யாராவது கொலையில் சம்பந்தப்பட்டு இருக்கலாமோ என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திங்கள், 8 டிசம்பர், 2008

இன்று பக்ரீத் திருநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


சென்னை, டிச.9-
பக்ரீத் திருநாளையொட்டி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இறைவனின் கட்டளையை ஏற்று நபி இப்ராகிம் தனது மகன் நபி இஸ்மாயிலை இறைவனுக்காக பலிதர முன்வந்தார். அவரது தியாகத்தை மெச்சி இறைவன், மகனுக்கு பதிலாக ஆட்டை பலித்தந்த அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூர்கின்ற திருநாள்தான் பக்ரீத் திருநாள் ஆகும்.
அந்த பக்ரீத் திருநாளான இன்று (செவ்வாய்கிழமை) பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஹஜ் என்னும் புனிதப் பயணம், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது. நபிகளின் தந்தை என அழைக்கப்படும் ஹஜ்ரத் இப்ராஹிம் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் மார்க்க செயல்களாக விதிக்கப்பட்டு நினைவூட்டப்படும் திருநாளே பக்ரீத் எனும் தியாக திருநாள் ஆகும்.
உற்றார், உறவினர், ஏழைகள் என அனைவரும் இணையும் புனிதமான தியாக திருவிழாவாம் இந்த பக்ரீத் நன்னாளில், பகிர்ந்தளித்து மகிழ்ச்சியடையும் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வளர்த்திட நாம் உறுதி பூணுவோம்!.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து மீண்டும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பக்கத்து வீட்டுக்காரன் பட்டினி கிடக்கும் பொழுது, தான் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுகிறவனை இறை நம்பிக்கையாளனாக கொள்ள முடியாது என்பதும், ஈகை குணமற்ற அறிவாளியைவிட, கல்வி அறிவற்ற தர்மவானே இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைகள். அந்த கட்டளைகளை நிறைவேற்றி மகிழ்வதற்கு வாய்ப்பு அளிக்கின்ற இந்த திருநாளில் வறியவர்களுக்கு எல்லாம் உணவு அளித்து இறைத் தூதரின் கட்டளையை நிறைவேற்றுகின்ற இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் 2-வது நாடாக இந்திய நாடு திகழ்கிறது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தவர் காந்தியார். அந்த ஒற்றுமைக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்து வந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்தவும், ரத்தக்களரிகளை விளைவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களையும், சவாலையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளவும் சகோதரத்துவத்தை காத்து சமூக நல்லிணக்கத்தையும், சாந்தியும், சமாதானமும் தழைக்க செய்யவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
கே.வி.தங்கபாலு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இப்புனித நாளில் அண்ணல் நபிகள் நாயகம் சமுதாயத்திற்கு வகுத்தளித்த அறநெறிகளை குறிப்பாக மனித குலத்தில் பகை உணர்வு இன்றி வன்முறையை ஒழித்து அனைவரும் அமைதி, சமாதான வாழ்வு பெற வேண்டும் என்ற அவரது அரிய போதனையை நினைவில் கொண்டு நாட்டில் மதநல்லிணக்கம் மேம்பட்டிட சாதி, மத, இன, மொழிப் பிரிவுகள் கடந்து ஒற்றுமைக்கு வழிவகுப்போம். மகத்தான இவ்விழாநாளில் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
ஆர் .எம்.வீரப்பன்
எம்.ஜி.ஆர். கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமியப் பெருமக்கள் இறைவன் வழிகாட்டிய தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் உயர்ந்த நாள் இன்று. இந்த நன்னாளில் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் உணர்வோடு வாழ வேண்டும், மற்ற உயிர்களை மதித்துப் போற்ற வேண்டும் என்ற இறைவனின் வழிகாட்டுதலை உணர்ந்து நடந்துகொள்ள எல்லோரும் முயற்சித்து வெற்றிபெறுவோம் என்ற நல்வாழ்த்துக்களை எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
எஸ்.ஜெகத்ரட்சகன்
ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
`தியாக திருநாள் பக்ரீத்' இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கையில் ஓர் உன்னதத் திருநாள். `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்' என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில், இருப்பதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து, சேர்ந்து உண்ணுகின்ற வழக்கம் வாழ்க்கையில் மண்ணுயிர் ஓம்பும் என்ற மானுட தத்துவத்தை காப்பதாக அமைகின்றது.
இந்த தியாக திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுடைய தொண்டுகள் தொடர வேண்டும், மனித சமுதாய மேம்பாட்டிற்காக என்று ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்
பா.ஜ.க. தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சகிப்புத்தன்மை, மனிதநேயம், ஈகை, சகோதரத்துவம் ஆகிய மனித குலத்திற்கு தேவையான நற்பண்புகளை தொடர்ந்து பேணிக்காத்து, வளர்த்து அனைத்து தரப்பினரும் சகோதரர்களாய் ஒருங்கிணைந்து வாழ்ந்திட தியாகத் திருநாளாம் இந்த பக்ரீத் திருநாளில் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமியர்களின் பெயரால், மானுடத்திற்கெதிரான, மனிதநேயமற்ற வன்முறை செயல்களை சில பயங்கரவாதக் கும்பல் முன்னெடுப்பது, மனிதநேயத்தின் வடிவமான இஸ்லாத்தை பழிப்பதாக அமைந்து விடுவதை காண முடிகிறது. ஆகவே, இஸ்லாமிய சமூகத்தின் மீது திணிக்கப்படும் அவதூறுகளை துடைத்திட, மும்பையில் நடந்த பயங்கரவாத நடைமுறைகளை கண்டிப்பதும், அவற்றுக்கெதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டியதும் மிகமிக இன்றியமையாதது என்பதை இந்த ஈகைத்திருநாளில் உணர்வோம்; அதனை நடைமுறைப்படுத்த உறுதியேற்போம்!.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், இந்திய னியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் சையத் சத்தார், மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தேசியலீக் மாநில தலைவர் எம்.பஷீர்அகமது, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத், ஐக்கிய ஜனதாதளம் மாநில பொது செயலாளர் டி.ராஜகோபால், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ், தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மனித நீதிப்பாசறை மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா, அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் வீரைகறீம், தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளம் பொது செயலாளர் வி.பி.இதயவண்ணன், மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், அம்பேத்கார் மக்கள் முன்னணி மாநில தலைவர் கோ.வைரபாண்டியன், ராஜீவ் மக்கள் காங்கிரஸ் நிறுவன தலைவர் ஏ.ஜி.நரசிம்மன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மைப்பிரிவு தலைவர் ஏ.கனிபாய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

பர்னாலா பக்ரீத் வாழ்த்து


சென்னை, டிச.9-
கவர்னர் சுர்ஜித்சிங் பர்னாலா வெளியிட்டுள்ள பக்ரீத் வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இது ஒரு தியாக திருநாள். இந்த திருநாளையொட்டி தமிழகம் மற்றும் இந்தியா முழுவதும் உள்ள இஸ்லாமிய சகோதர, சகோதரிகளுக்கு என் இதயம் கனிந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இந்த தியாக திருநாள் நமது ஒற்றுமை உணர்வு, அன்பு, பரிவு ஆகிய குணங்களை மீண்டும் கிளர்ந்து எழச்செய்யும் ஒரு நன்னாளாக அமையட்டும். இதன் மூலம் நமது நாடு பிரகாசமான எதிர்காலத்தையும், அமைதியையும் பெற்று திகழட்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

எங்கும் மனித நேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம் கருணாநிதி பக்ரீத் வாழ்த்து


சென்னை, டிச.9-
`மனித நேயம் எங்கும் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம்' என்று பக்ரீத் பண்டிகைக்கு முதல்-அமைச்சர் கருணாநிதி வாழ்த்து கூறியுள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-

தியாகத் திருநாள் எனப் போற்றப்படும் பக்ரீத் பெருநாள், இஸ்லாமிய மக்களால் இன்று (9-ந் தேதி) எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. இந்நாளை கொண்டாடும் தமிழகத்தில் வாழும் இஸ்லாமிய சமுதாய மக்கள் அனைவர் வாழ்விலும் நலமும் வளமும் பெருகிட எனது இதயம் கனிந்த பக்ரீத் பெருநாள் நல்வாழ்த்துகளை தெரிவித்து மகிழ்கிறேன்.
ஈட்டிய பொருளில் ஒரு பகுதியை ஏழை எளியவர் இடர்தீர வழங்கி மகிழ்வதை "ஈத்துவக்கும் இன்பம்'' என்பார் அய்யன் திருவள்ளுவர். அந்த இன்பத்தை எய்திட இஸ்லாமிய பெருமக்களுக்கு வழிகாட்டுவது இந்த பக்ரீத் பெருநாள்.

நபிகள் நாயகத்திடம் ஒரு மனிதர், `இஸ்லாமில் சிறந்தது எது?' என்று கேட்டார். அதற்கு அவர், `ஏழைகளுக்கு உணவளித்தல், நீங்கள் அறிந்தவருக்கும், அறியாதவருக்கும் சலாம் கூறுதல்' என்றார். ஏழைகளுக்கு உணவளித்தல் மூலம் இரக்க உணர்வும், எளியோரை அரவணைக்கும் பெருந்தன்மையும் வளரும்.
சலாம் கூறுவதன் மூலம் இதயங்கள் இணையும், மனித மனங்களில் நேச ஊற்றுகள் பொங்கிப் பெருகும். அது தனிமனித வாழ்விலும், சமூகத்திலும் மனத்தூய்மையையும் நெருக்கத்தையும், சமுதாயத்தில் நல்லிணக்கத்தையும் ஏற்படுத்தும் என்கிறது இஸ்லாம் நெறி.

இந்த நெறி தழைக்க, எங்கும் மனித நேயம் செழிக்க, எளியோர் ஏற்றம் பெற உதவிடுவோம். எல்லாரிடமும் இன்முகம் காட்டி, இன்சொல் கூறி இதயங்கள் இணைந்து இன்புற ஏற்ற வழி சமைப்போம் என இத்திருநாளில் அனைவரும் உறுதி ஏற்போமாக.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ஞாயிறு, 7 டிசம்பர், 2008

வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது


மதுரை, டிச.8-
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்பட முக்கிய கோவில்களுக்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

மதுரை மாவட்ட கலெக்டரின் இ-மெயில் முகவரிக்கு கடந்த 4-ந் தேதி ஒரு மிரட்டல் தகவல் வந்தது. அதில், பிரசித்தி பெற்ற மதுரை மீனாட்சி அம்மன் கோவில், ராமநாதபுரம் ராமநாதசுவாமி கோவில் மற்றும் திருச்சி ஸ்ரீரங்கம் கோவில்களில் டிசம்பர் 6-ந் தேதி வெடிகுண்டுகள் வெடிக்கும். இதே போல் ஜனவரி 26-ந் தேதி குடியரசு தினத்தன்றும் 3 கோவில்களிலும் குண்டுகள் வெடிக்கும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.
இதைத்தொடர்ந்து மீனாட்சி அம்மன், ராமநாதசுவாமி கோவில்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது.
இந்த இ-மெயில் தகவல் குறித்து தல்லாகுளம் போலீசில் மாவட்ட நிர்வாகம் சார்பில் ஒரு புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். மிரட்டல் விடுத்த நபரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது.

தனிப்படை போலீசார் இ-மெயிலில் குறிப்பிடப்பட்டு இருந்த ஒரு செல்போன் நம்பரை வைத்து விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த செல்போன் நம்பர் சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள மிளகனூரை சேர்ந்த டீக்கடை நடத்தி வரும் ரத்தினம் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரிந்தது.
தனிப்படையினர் ரத்தினத்தை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், இ-மெயில் மிரட்டல் அவர் அனுப்பவில்லை என்றும், ஆனால் அவருக்கு எதிராக அதே ஊரை சேர்ந்த நாகராஜன் என்பவரது மகன் மணிமாறன் (வயது 30) என்பவர் திருப்பூரில் இருந்து அனுப்பி இருப்பதும் தெரியவந்தது.
இதைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் திருப்பூர் விரைந்தனர். அங்கு ஒரு நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் மணிமாறனை பிடித்து விசாரித்தனர். அப்போது ரத்தினத்துக்கு எதிராக, அவரை போலீசில் மாட்டி விடுவதற்காக இந்த இ-மெயில் மிரட்டலை அனுப்பியதாக ஒப்புக்கொண்டார். இதையடுத்து போலீசார் மணிமாறனை மதுரை தல்லாகுளம் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு வந்தனர்.

இதன் பின்னர் போலீசாரிடம் மணிமாறன் அளித்த வாக்கு மூலத்தில் கூறியதாவது:-
எனது சொந்த ஊர் மானாமதுரை அருகே உள்ள மிளகனூர் ஆகும். மதுரை தெப்பக்குளம் பகுதியில் உள்ள ஒரு கல்லூரியில் பி.பி.ஏ. படித்தேன். பிறகு ஓராண்டு கம்ப்ட்டர் பயிற்சியும் முடித்தேன். படிக்கிறபோதே அதே ஊரை சேர்ந்த ஹேமலதா என்ற பெண்ணை காதலித்து கலப்பு திருமணம் செய்துகொண்டேன்.
எங்களுக்கு நந்தீஸ்வரன் (8), பிரியதர்ஷனி, ரோகிணி ஆகிய 3 குழந்தைகள் உள்ளனர். மானாமதுரையில் ஒரு கம்ப்ட்டர் சென்டரில் டீச்சராக வேலை பார்த்தேன். குடும்பம் நடத்த சம்பளம் போதாததால் திருப்பூர் சென்றேன். அங்கு ஒரு நிறுவனத்தில் டிசைனிங் பிரிவில் வேலை பார்த்து வந்தேன். எனது மனைவி மற்றும் குழந்தைகள் மிளகனூரில் இருந்து வருகிறார்கள்.

கடந்த 2006-ம் ஆண்டு நடந்த உள்ளாட்சி தேர்தலில் எனது மனைவி ஹேமலதா காங்கிரஸ் கட்சி சார்பில் வார்டு உறுப்பினருக்கு போட்டியிட்டார். இந்த சமயத்தில் ரத்தினத்துக்கும், எனது மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது எனக்கு தெரியவந்து இருவரையும் கண்டித்தேன். ஆனாலும் அவர்களது பழக்கம் தொடர்ந்தது. இதனால் ஆத்திரத்தில் இருந்து வந்தேன். ரத்தினத்தை எப்படியாவது பழிவாங்கவேண்டும் என்று நினைத்து இருந்தேன்.
இந்த நிலையில் பாபர் மசூதி இடிப்பு தினமான டிசம்பர் 6-ந் தேதி எனக்கு ஞாபகத்துக்கு வந்தது. பாதுகாப்பு என்ற பெயரில் போலீசார் பரபரப்பாக இருக்கும், இந்த நேரத்தில் ரத்தினம் பெயரில் முக்கிய கோவில்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தால் அவரை போலீசார் கைது செய்து விடுவார்கள் என்று கருதினேன்.
இதற்கான திட்டத்தை நிறைவேற்ற ரத்தினம் பெயரில் இ-மெயில் முகவரியை தயார் செய்தேன். இதன் மூலம் மீனாட்சி அம்மன், ராமநாதசுவாமி, ஸ்ரீரங்கம் கோவிலுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்க முடிவு செய்தேன்.

இதற்காக உயர் போலீஸ் அதிகாரிகளின் இ-மெயில் முகவரிகளை தேடியபோது கிடைக்கவில்லை. அப்போது தான் முதல்-அமைச்சரின் தனிப்பிரிவு இ-மெயில் முகவரி கிடைத்தது. இதன் வழியாக ரத்தினம் பெயரில் வெடிகுண்டு மிரட்டல் குறித்த தகவலை அனுப்பினேன். அதில் இப்படிக்கு ரத்தினம், எம்.ஆர். `டெர்ரீஸ்ட்', மிளகனூர், சிவகங்கை மாவட்டம் என்பதோடு அவரது செல்போன் நம்பரை குறிப்பிட்டு இருந்தேன்.
இந்த தகவலின் அடிப்படையில் போலீசார் அவரை பிடித்துள்ளனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் என்னை கைது செய்தனர். நான் வேண்டும் என்று இந்த மிரட்டலை விடுக்கவில்லை. எனது எதிரியான ரத்தினத்தை போலீசில் சிக்க வைக்கவே இதை செய்தேன்.
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறி உள்ளார்.
இதைத்தொடர்ந்து போலீசார் மணிமாறனை கைது செய்தனர். அவர் மிரட்டல் விடுக்க பயன்படுத்திய கம்ப்ட்டர் கருவிகளை போலீசார் பறிமுதல் செய்தனர். ரத்தினத்திடம் போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

வெள்ளி, 5 டிசம்பர், 2008

இன்று பாபர் மசூதி இடிப்பு தினம்: சென்னை ரெயில் நிலையங்களில் வரலாறு காணாத பாதுகாப்பு


சென்னை, டிச.6-
பாபர் மசூதி இடிப்பு தினத்தையொட்டி, சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் வரலாறு காணாத அளவில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. ரெயில்களில் சரக்குபோக்குவரத்தும் 2 நாட்கள் தடை செய்யப்பட்டுள்ளது.

கடந்த வாரம் மும்பை சத்ரபதி சிவாஜி ரெயில் நிலையம் உள்பட பல இடங்களில் தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தினர். இதில், பொதுமக்கள் உள்பட பலர் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தை அடுத்து நாடு முழுவதும் உள்ள ரெயில் நிலையங்கள் மற்றும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.
சென்னையிலும், சென்டிரல்-எழும்பூர் ரெயில் நிலையம் உள்பட அனைத்து ரெயில் நிலையங்களிலும், கோயம்பேடு பஸ் நிலையத்திலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில், பாபர் மசூதி இடிப்பு தினம் இன்று (சனிக்கிழமை) வருவதையொட்டி, அசம்பாவித சம்பவங்கள் ஏதும் நிகழாமல் இருக்க கூடுதல் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களை பொறுத்தவரை, வழக்கத்தைவிட கூடுதலாக 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ரெயில்வே பாதுகாப்பு படை, ரெயில்வே போலீசாருடன் இணைந்து, கமாண்டோ படை வீரர்களும், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதற்காக, சிறப்பு காவல் படையினர் ஆவடி, திருச்சி, வீராபுரம் ஆகிய இடங்களில் இருந்து சென்னை வந்துள்ளனர். சென்னை சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையத்திற்குள் பயணிகள் கடும் சோதனைக்கு பிறகே, ஒருவழி பாதை வழியாக உள்ளே அனுமதிக்கப்படுகின்றனர். ரெயில்களில் வந்து இறங்கும் பயணிகளும் ஒரு வழி பாதை வழியாகவே வெளியேற்றப்படுகின்றனர்.

ரெயில் நிலையத்திற்குள் கமாண்டோ படை போலீசார் துப்பாக்கியுடன் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும், கன்னிவெடிகளை கண்டறியும் சோதனையில் மோப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. பயணிகளோடு பயணியாக போலீசாரும் மாறுவேடத்தில் நின்று கண்காணித்து வருகின்றனர்.
ரெயில்வே டி.எஸ்.பி., இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஆகியோர், தாங்கள் வைத்துள்ள துப்பாக்கிகளில் குண்டுகளை நிரப்பி தயார் நிலையில் வைத்துள்ளனர். மேலும், ரெயில்களில் சரக்கு போக்குவரத்திற்கும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால், ரெயில் நிலையங்களில் சரக்குகள் குவிந்துகிடைப்பதை காண முடிந்தது.

சென்டிரல் மற்றும் எழும்பூர் ரெயில் நிலையங்களில் எங்கு பார்த்தாலும், போலீஸ் தலைகளாகவே தெரிகின்றன. அந்த அளவுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளன. கடும் சோதனைக்கு பிறகே பயணிகள் ரெயில் நிலையத்திற்குள் செல்ல அனுமதிக்கப்படுவதால், ரெயில் புறப்படுவதற்கு 1 மணி நேரத்திற்கு முன்னதாகவே, ரெயில் நிலையத்திற்கு வந்துவிடுமாறு எழும்பூர் ரெயில்வே போலீஸ் இன்ஸ்பெக்டர் சின்னபாண்டி தெரிவித்தார்.

சென்னை சட்டக்கல்லூரி மோதல் சம்பவம்: 26 மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி


சென்னை, டிச.6-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 மாணவர்களின் ஜாமீன் மனுவையும் 3 மாணவர்களின் முன் ஜாமீன் மனுவையும் நேற்று சென்னை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் கடந்த மாதம் 12-ந் தேதி இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக சித்திரைசெல்வன் உள்பட 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இதுமட்டுமல்லாமல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் பாரதி கண்ணன் மற்றும் ஆறுமுகம், அய்யாத்துரை ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் சென்னை முதன்மை செசன்சு நீதிபதி தேவதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 26 மாணவர்கள் சார்பில் வக்கீல் விஜயகுமாரும், 3 மாணவர்கள் சார்பில் வக்கீல் ரூபர்ட் பர்னபாசும், அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகானும் ஆஜராகி வாதாடினார்கள். கோர்ட்டில் நடந்த விவாதம் வருமாறு:-
வக்கீல் விஜயகுமார்:- 26 மாணவர்களுக்கு எதிராக எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அவர்களது பெயர்களும் இடம்பெறவில்லை. சித்திரை செல்வன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 12-ந் தேதி நடந்த சம்பவத்திற்கு மாணவர்களை காரணமாக கூற முடியாது. வெளியில் இருந்து செயல்படும் சாதி அமைப்புகள், மாணவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளன. ஆகவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
வக்கீல் ரூபர்ட் பர்னபாஸ்:- முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 3 மாணவர்களும் யாரையும் தாக்கியதாக ஆதாரம் கிடையாது. அப்படி யாரையும் தாக்கியிருந்தால் இவர்கள் மீது காயம் இருக்காது. இவர்களை தாக்க வந்தவர்கள் வைத்திருந்த கத்தியை தான் பறித்து பாரதி கண்ணன் தற்காப்புக்காக பயன்படுத்தினார். யாரையோ திருப்தி செய்ய சித்திரை செல்வனிடம் போலீசார் புகார் பெற்று முன்தேதியிட்டு பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் என்ன தவறு செய்தார்கள் என்பது பத்திரிகைகையில் வந்த படங்களும், டி.வி.யில் ஒளிபரப்பான படங்களுமே சாட்சியாகும்.

மாநகர அரசு வக்கீல் ஷாஜகான்:- இந்த சம்பவம் தொடர்பாக பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது முதல் டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தேர்வுகள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கினால் தேர்வு அமைதியாக நடக்காது. காரணம், தேர்வு சமயத்தில் தான் இந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. ஒரு சிறிய கூட்டத்தினர் நடத்திய இந்த வன்முறை சம்பவத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் சிறையில் இருந்தால்தான் தேர்வை அமைதியாக நடத்த முடியும்.
இவர்கள் கூறியபடி வெளியில் உள்ள அமைப்புதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றால், அதற்கு காரணம் யார் என்பதை கண்டறியும் விசாரணை முடியவில்லை. தாக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சித்திரை செல்வன் போன்ற பெரும்பான்மையான மாணவர்கள் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. உதாரணமாக சித்திரை செல்வன், மணிமாறன் ஆகியோர் மீது மட்டும் தலா 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாரதி கண்ணனை தாக்கிய சித்திரை செல்வனும் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அய்யாத்துரையை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை.
இவ்வாறு வக்கீல்கள் விவாதம் நடைபெற்றது.

முதன்மை செசன்சு நீதிபதி தேவதாஸ், இந்த மனுக்களை நேற்றிரவு 9.50 மணிக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த மாணவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இவர்கள் ஈடுபட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாலும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும் 26 மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்க முடியாது. இதே போல பாரதி கண்ணன் உள்பட 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் கண்ணன் உள்பட 14 பேரின் ஜாமீன் மனுவையும், போலீஸ் உதவி கமிஷனர் தாக்கப்பட்ட வழக்கில் 18 மாணவர்களின் முன்ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.