புதன், 24 டிசம்பர், 2008

"தீவிரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் நடவடிக்கை எடுக்குமா"?. - இந்தியாவின் `கெடு' நாளை முடிகிறது.





தீவிரவாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்த `கெடு' நாளையுடன் முடிவடைகிறது. எனவே பாகிஸ்தான் அடுத்து என்ன செய்யப்போகிறது? என்பது ஆவலுடன் எதிர்பார்க்கப்படுகிறது.

புதுடெல்லி, டிச.25-

மும்பையில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் நடத்திய கொலைவெறி தாக்குதலை தொடர்ந்து, இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டு உள்ளது.

பாகிஸ்தானில் இருந்து கடல் மார்க்கமாக கடந்த 26-ந் தேதி மும்பை வந்த 10 தீவிரவாதிகள் அங்கு நட்சத்திர ஓட்டல்கள், ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் நடத்திய தாக்குதலில் 180-க்கும் மேற்பட்டவர்கள் பலி ஆனார்கள்.

அவர்களில் உயிருடன் பிடிபட்ட ஒரே தீவிரவாதியான அஜ்மலிடம் நடத்திய விசாரணையில், தீவிரவாதிகள் அனைவரும் பாகிஸ்தானில் இருந்து அனுப்பி வைக்கப்பட்டது உறுதி செய்யப்பட்டது.

இதைத்தொடர்ந்து, மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது ஒரு மாதத்திற்குள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாகிஸ்தானுக்கு `கெடு' விதித்த இந்தியா, தீவிரவாதிகளின் பட்டியலையும் கொடுத்தது.

இதேபோல், தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு அமெரிக்காவும் பாகிஸ்தானை வற்புறுத்தியது. அத்துடன் தனது மண்ணை பாதுகாத்துக் கொள்வதற்காக தீவிரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தும் உரிமை இந்தியாவுக்கு உண்டு என்றும் கூறியது.

ஆனால் பாகிஸ்தானோ, `முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்க முயற்சிப்பது போல்', மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகள் பாகிஸ்தானியர்கள் அல்ல என்று கூறுவதோடு, `தீவிரவாத இயக்கங்கள் மீது உறுதியான எந்த நடவடிக்கையையும் எடுக்காமல், இன்னும் ஆதாரங்களை கொடுங்கள்' என்று கேட்டு வருகிறது. அத்துடன் இந்திய எல்லையை யொட்டிய பகுதியில் தனது படைகளை குவிப்பதோடு, `இந்தியா போர் தொடுத்தால் சந்திக்க தயார்' என்றும் சவால் விடுத்து வருகிறது.

பாகிஸ்தானின் இந்த நடவடிக்கையை தொடர்ந்து, இந்திய எல்லைப்பகுதியில் உள்ள நமது ராணுவமும் `உஷார்' படுத்தப்பட்டு உள்ளது.

இந்த நிலையில், பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்த ஒரு மாத `கெடு' நாளையுடன் (வெள்ளிக்கிழமை) முடிகிறது.

இதுபற்றி அமெரிக்க புலனாய்வு துறை நிபுணர் ஸ்டாட்போர் கூறுகையில்; தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தானுக்கு இந்தியா விதித்துள்ள `கெடு' 26-ந் தேதியுடன் முடிவடைவதாகவும், பாகிஸ்தானுக்கு எதிரான ராணுவ நடவடிக்கைக்காக இந்தியா கடந்த ஒரு மாதமாக தயாராகி வருகிறது என்றும் தெரிவித்தார். ராணுவ நடவடிக்கை தொடர்பான திட்டங்கள் தயார் நிலையில் இருப்பதாக இந்திய ராணுவ வட்டாரங்கள் தெரிவிப்பதாகவும் அவர் கூறி உள்ளார்.

இந்தியாவின் கோரிக்கையை ஏற்று தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்குமாறு கடந்த ஒரு மாதமாக பாகிஸ்தானை தாங்கள் வற்புறுத்தி வருவதாகவும், அதன்படி நடவடிக்கை எடுக்காவிட்டால், பாகிஸ்தானுக்கு எதிராக இந்தியா எடுக்கும் நடவடிக்கைக்கு நாங்கள் குறுக்கே நிற்க மாட்டோம் என்றும் அமெரிக்கா பாகிஸ்தானிடம் கூறி விட்டதாக தெரிகிறது.

பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள தீவிரவாத இயக்கங்களின் அலுவலகங்கள் மற்றும் பயிற்சி முகாம்கள் மீது தாக்குதல் நடத்துவது குறித்து இந்திய அரசு ஆலோசித்து வருவதாகவும் அமெரிக்க வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன.


இதற்கிடையே, கட்டளை வந்தால் தாக்குதல் நடத்த எந்த நேரமும் தயார் நிலையில் இருப்பதாக இந்திய விமானப்படையின் மேற்கு மண்டல தளபதி பி.கே.போர்போரா கூறி உள்ளார்.

இதுகுறித்து அசாம் மாநிலம் கவுகாத்தியில் நேற்று நிருபர்களிடம் அவர் கூறியதாவது:-

உலகிலேயே இந்திய விமானப்படை 4-வது பெரிய விமானப்படை ஆகும். நமது ராணுவ பலத்துக்கு பாகிஸ்தானின் ராணுவ பலம் ஈடாகாது. எந்த சவாலையும் சந்திக்க நாம் தயாராக இருக்கிறோம். இந்திய விமானப்படையின் பலத்தை பார்த்து பாகிஸ்தான் அஞ்சுகிறது. போரை அந்த நாடு தவிர்க்க நினைப்பதற்கு இதுவும் ஒரு காரணம்.

கட்டளை பிறப்பிக்கப்பட்ட 4 முதல் 6 மணி நேரத்திற்குள் பாகிஸ்தானில் உள்ள நிலைகளை நம்மால் தாக்க முடியும். தாக்குதல் இலக்காக 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்களை குறித்து வைத்து இருக்கிறோம். மேலும் ஆபத்து குறித்த தகவல் வந்த 2 மணி நேரத்திற்குள் மேற்கு மண்டலத்தில் உள்ள நமது அனைத்து விமானப்படை தளங்களையும் நம்மால் பாதுகாத்துக் கொள்ள முடியும்.

என்றாலும் போர் என்பது கடைசி கட்ட நடவடிக்கைதான். பாகிஸ்தானுடனான பிரச்சினைகளுக்கு பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணப்பட வேண்டும். அது முடியாத பட்சத்தில் சர்வதேச சமுதாயத்தின் உதவியுடன் தீர்வு காண முயற்சிக்க வேண்டும். எல்லா முயற்சிகளுமே தோல்வி அடைந்தால்தான் போர் நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும்.
போரினால் ஏற்படும் விளைவுகளை நமது பொருளாதாரம் தாங்கிக் கொள்ளும். ஆனால் பாகிஸ்தான் பெரிதும் பாதிக்கப்படும். ஒரு மாதத்துக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை கூட பாகிஸ்தானால் இறக்குமதி செய்ய முடியாது. அந்த அளவுக்கு அங்கு பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது.

இவ்வாறு பி.கே.போர்போரா கூறினார்.
மும்பை தாக்குதல் சம்பவம் பற்றி சமீபத்தில் கருத்து தெரிவித்த பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்; மும்பை தாக்குதல் சம்பவத்தின் போது பிடிபட்ட தீவிரவாதி அஜ்மல் பாகிஸ்தானைச் சேர்ந்தவன்தான் என்று கூறினார்.

இப்போது, அவர் திடீரென்று `பல்டி' அடித்து உள்ளார்.

மும்பையில் தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கும் பாகிஸ்தானுக்கும் சம்பந்தம் இல்லை என்றும் அவர்கள் பாகிஸ்தானியர்கள் என்பதற்கான ஆதாரத்தை இந்தியா கொடுத்தால், தாக்குதலுக்கு காரணமானவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிபர் சர்தாரியை சந்தித்து கூறுவேன் என்றும் அவர் கூறி உள்ளார்.

அப்படி இந்தியாவால் ஆதாரங்களை கொடுக்க முடியாவிட்டால், உண்மைக்கு மாறான புகார்களை கூறி பதற்றத்தை ஏற்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என்றும் நவாஸ் ஷெரீப் கூறினார்.

இதற்கிடையே, ராணுவ உயர் அதிகாரி தாரிக் மஜித்துடன் பாகிஸ்தான் அதிபர் சர்தாரி ஆலோசனை நடத்தினார். அப்போது அவர் கூறுகையில்; பாகிஸ்தான் ராணுவத்தை குறைத்து மதிப்பிடக்கூடாது என்றும் எந்த தாக்குதலையும் முறியடிக்கும் சக்தி அதற்கு உண்டு என்றும் கூறினார்.

கருத்துகள் இல்லை: