ஞாயிறு, 21 டிசம்பர், 2008

``உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் கணவரை கொன்றோம்'' - கள்ளக்காதலனுடன் கைதான ஆங்கிலோ இந்திய பெண் வாக்குமூலம்!.


சென்னை, டிச.22-
உல்லாச வாழ்க்கைக்கு தடையாக இருந்ததால் கள்ளக் காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்றதாக ஆங்கிலோ இந்திய பெண் போலீசில் வாக்குமூலம் அளித்துள்ளார்.

சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 756-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். எல்.ஐ.சி. ஏஜெண்டாகவும் இருந்தார். இவருடைய மனைவி நிக்கோலா (வயது 26). ஆங்கிலோ இந்திய பெண். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.

அமைந்தகரையில் உள்ள லாட்ஜ் ஒன்றில் குடும்பத்தினருடன் தங்கியிருந்த பிரவீன் கடந்த 18-ந் தேதி நெஞ்சில் கத்தியால் குத்தப்பட்டு அறைக்குள் பிணமாக கிடந்தார். கணவரைக் கொன்று விட்டு நிக்கோலா தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக அண்ணாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். அப்போது, நிக்கோலாவுக்கு, அம்பத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் மணிமாறன் என்பவருடன் கள்ளக்காதல் இருந்தது தெரியவந்தது. 2 முறை மணிமாறனுடன் ஓடிப் போன நிக்கோலாவை, பிரவீன் சமாதானப்படுத்தி அழைத்து வந்தார். பிரவீன் கொலை செய்யப்பட்ட நாளில் இருந்து ஆட்டோ டிரைவர் மணிமாறனும் தலைமறைவாகிவிட்டார்.


இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு நிக்கோலா மற்றும் மணிமாறனை போலீசார் பிடித்தனர். அவர்களின் விசாரணையில், நிக்கோலா, மணிமாறன் ஆகிய இருவரும் சேர்ந்து பிரவீனை கொலை செய்த அதிர்ச்சி தகவல் தெரியவந்தது. அவர்கள் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.
நிக்கோலா போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
"நான் சைதாப்பேட்டையில் கால் சென்டரில் வேலைக்கு செல்ல மணிமாறன் ஆட்டோவில்தான் செல்வேன். அப்போது அவருடன் ஏற்பட்ட பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. எங்களுடைய விவகாரம் தெரியவந்ததும், எனது கணவர் எதிர்ப்பு தெரிவித்தார்.

மணிமாறனுடன் நான் வாழப்போகிறேன். என்னை விட்டு விடுங்கள் என்று என் கணவரிடம் நேரடியாகவே தெரிவித்து விட்டு மணிமாறனுடன் சென்றேன். ஆனால் அவர் போலீஸ் உதவியுடன் மணிமாறனிடம் இருந்து என்னை பிரித்தார். மீண்டும் அவருடன் சென்றேன். ஆனால் மறுபடியும் என் கணவர் என்னை பிரித்து டி.பி.சத்திரத்தில் உள்ள வீட்டுக்கு அழைத்து வந்துவிட்டார்.

இதனால் பிரவீனை தீர்த்துக்கட்டிவிடலாம் என்ற முடிவுக்கு நானும், மணிமாறனும் வந்தோம். முதலில் அவரது குடும்பத்தில் இருந்து பிரிக்க வேண்டும் என்பதற்காக அவர்களிடம் சண்டை போட்டேன். இங்கிருந்து சென்றுவிடலாம் என்று நான் கூறிய யோசனைக்கு பிரவீன் சம்மதித்தார். அதைத் தொடர்ந்து அமைந்தகரையில் உள்ள லாட்ஜில் அறை எடுத்து தங்கினோம்.

அங்கிருந்து மணிமாறனுக்கு போன் செய்து வரவழைத்தேன். அவர் என் கணவரிடம், என்னை விட்டு விடும்படி கேட்டார். ஆனால் அவரை கொன்றுவிடுவேன் என்று சொல்லி மிரட்டி விரட்டி அடித்தார். அதைத் தொடர்ந்து கடந்த 18-ந் தேதி பிரவீன் தூங்கி கொண்டிருந்த போது மணிமாறன் வந்தார். கத்தியால் நெஞ்சு, தொண்டையில் குத்தினார்.
அப்போது பிரவீன் சத்தம் போடாமல் இருக்க அவரது வாயை நான் பொத்தினேன். அவர் இறந்ததை உறுதி செய்து விட்டு அங்கிருந்து ஆட்டோவில் ஏறி தப்பி ஓடினோம். எங்கு செல்வது என தெரியாமல் சென்னைக்குள் ஆட்டோவில் சுற்றிய போது போலீசாரிடம் சிக்கிக் கொண்டோம்.

இவ்வாறு நிக்கோலா வாக்குமூலத்தில் கூறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நேற்று மாலை மணிமாறன், நிக்கோலா ஆகிய இருவரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

கருத்துகள் இல்லை: