சனி, 20 டிசம்பர், 2008

கணவனை கொன்ற ஆங்கிலோ இந்திய பெண் கள்ளக்காதலனுடன் கைது!.



சென்னை, டிச.21-

சென்னை லாட்ஜில் கணவனை கொன்று விட்டு தப்பி ஓடிய ஆங்கிலோ இந்திய பெண் கள்ளக்காதலனுடன் ஆட்டோவில் சுற்றிய போது பொதுமக்கள் விரட்டிச் சென்று பிடித்தனர்.


சென்னை டி.பி. சத்திரம் மெயின் ரோடு 156-வது பிளாக்கை சேர்ந்தவர் பிரவீன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருடைய மனைவி நிக்கோலா (வயது 26). ஆங்கிலோ இந்திய பெண். இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த 10 தினங்களுக்கு முன்பு பிரவீன், குடும்பத்தினருடன் பூந்தமல்லி நெடுஞ்சாலை அமைந்தகரையில் உள்ள ஒரு லாட்ஜில் ரூம் எடுத்து தங்கியிருந்தார்.

இந்த நிலையில், 2 தினங்களுக்கு முன்பு லாட்ஜ் அறையில் பிரவீன் நெஞ்சில் குத்தப்பட்டு, ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தார். கணவரைக் கொன்று விட்டு நிக்கோலா தலைமறைவாகிவிட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக உடனே அமைந்தகரை போலீஸ் நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவல் அறிந்ததும் அண்ணாநகர் துணை கமிஷனர் பாண்டியன் உத்தரவின் பேரில் உதவி கமிஷனர் விஜயகுமார் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர் மோகன்ராஜ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்.

போலீஸ் விசாரணையில் நிக்கோலாவுக்கு, மணிமாறன் என்ற ஆட்டோ டிரைவருடன் கள்ளக்காதல் இருப்பது தெரியவந்தது. 2 முறை தன்னை விட்டு ஆட்டோ டிரைவர் மணிமாறனுடன் பிரிந்து சென்ற மனைவி நிக்கோலாவை பிரவீன் சமாதானப்படுத்தி வாழ்க்கையை நடத்தி வந்ததும் தெரியவந்தது. இதற்கிடையே மணிமாறனை தேடி போலீசார் அம்பத்தூர் சென்ற போது அவரும் தலைமறைவானது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து அவருக்கும் பிரவீன் கொலையில் சம்பந்தம் இருக்கலாம் என்ற கோணத்தில் போலீசார் தேடி வந்தனர்.
இந்த நிலையில், நேற்று மாலையில் நிக்கோலா, டிரைவர் மணிமாறனுடன் ஆட்டோவில் சுற்றிக் கொண்டிருந்தார். நிக்கோலாவின் பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடிப்பதற்காக விரட்டினர்.

சிறிது தூரம் விரட்டி சென்று நிக்கோலாவையும், கள்ளக்காதலன் மணிமாறனையும் சுற்றி வளைத்து பிடித்து, இருவரையும் அம்பத்தூர் போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன் பிறகு அவர்கள் இருவரும் திருமங்கலம் போலீஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

போலீசாரின் முதல் கட்ட விசாரணையில், பிரவீன் கொலை செய்யப்பட்ட போது, அந்த அறையில் மணிமாறனும் இருந்ததும், பிரவீன் கால்களை நிக்கோலா பிடித்துக் கொள்ள, மணிமாறன்தான் பிரவீனை குத்தி கொலை செய்துவிட்டு, லாட்ஜின் பின்புறமாக தப்பி ஓடியதும் தெரியவந்துள்ளதாக உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார். நிக்கோலா, மணிமாறன் ஆகிய இருவரிடமும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: