திங்கள், 8 டிசம்பர், 2008

இன்று பக்ரீத் திருநாள்: அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து


சென்னை, டிச.9-
பக்ரீத் திருநாளையொட்டி, ஜெயலலிதா, டாக்டர் ராமதாஸ், வைகோ உள்பட பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இறைவனின் கட்டளையை ஏற்று நபி இப்ராகிம் தனது மகன் நபி இஸ்மாயிலை இறைவனுக்காக பலிதர முன்வந்தார். அவரது தியாகத்தை மெச்சி இறைவன், மகனுக்கு பதிலாக ஆட்டை பலித்தந்த அந்த வரலாற்று நிகழ்வை நினைவு கூர்கின்ற திருநாள்தான் பக்ரீத் திருநாள் ஆகும்.
அந்த பக்ரீத் திருநாளான இன்று (செவ்வாய்கிழமை) பல்வேறு கட்சி தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
ஜெயலலிதா
அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதா வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
ஹஜ் என்னும் புனிதப் பயணம், இஸ்லாமியர்களின் ஐந்து கடமைகளில் உன்னதமானது. நபிகளின் தந்தை என அழைக்கப்படும் ஹஜ்ரத் இப்ராஹிம் குடும்பத்தினர் செய்த தியாகங்கள் மார்க்க செயல்களாக விதிக்கப்பட்டு நினைவூட்டப்படும் திருநாளே பக்ரீத் எனும் தியாக திருநாள் ஆகும்.
உற்றார், உறவினர், ஏழைகள் என அனைவரும் இணையும் புனிதமான தியாக திருவிழாவாம் இந்த பக்ரீத் நன்னாளில், பகிர்ந்தளித்து மகிழ்ச்சியடையும் சகோதரத்துவத்தையும், மனித நேயத்தையும் வளர்த்திட நாம் உறுதி பூணுவோம்!.
இஸ்லாமிய பெருமக்கள் அனைவரும் எல்லா நலமும், வளமும் பெற்று அமைதியுடன் வாழ வேண்டும் என்ற என்னுடைய அவாவினைத் தெரிவித்து மீண்டும் எனது இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.

டாக்டர் ராமதாஸ்
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
பக்கத்து வீட்டுக்காரன் பட்டினி கிடக்கும் பொழுது, தான் மட்டும் வயிறு நிறைய சாப்பிடுகிறவனை இறை நம்பிக்கையாளனாக கொள்ள முடியாது என்பதும், ஈகை குணமற்ற அறிவாளியைவிட, கல்வி அறிவற்ற தர்மவானே இறைவனுக்கு மிகவும் பிடிக்கும் என்பதும் நபிகள் நாயகத்தின் கட்டளைகள். அந்த கட்டளைகளை நிறைவேற்றி மகிழ்வதற்கு வாய்ப்பு அளிக்கின்ற இந்த திருநாளில் வறியவர்களுக்கு எல்லாம் உணவு அளித்து இறைத் தூதரின் கட்டளையை நிறைவேற்றுகின்ற இஸ்லாமிய சகோதரர்கள் வாழ்வில் அனைத்து நலன்களையும் பெற்றிட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் கூறியுள்ளார்.
வைகோ
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
உலகில் இஸ்லாமியர்கள் அதிகமாக வாழும் 2-வது நாடாக இந்திய நாடு திகழ்கிறது. இந்து-முஸ்லிம் ஒற்றுமைக்காக தன் இன்னுயிரை பலி கொடுத்தவர் காந்தியார். அந்த ஒற்றுமைக்கு முன்மாதிரியாக தமிழ்நாடு திகழ்ந்து வந்துள்ளது. சமூக நல்லிணக்கத்தை பாழ்படுத்தவும், ரத்தக்களரிகளை விளைவிக்கவும் திட்டமிட்டு நடத்தப்படும் தாக்குதல்களையும், சவாலையும் ஒற்றுமையுடன் எதிர்கொள்ளவும் சகோதரத்துவத்தை காத்து சமூக நல்லிணக்கத்தையும், சாந்தியும், சமாதானமும் தழைக்க செய்யவும் அனைவரும் உறுதி எடுத்துக்கொள்வோம்.
இவ்வாறு வைகோ கூறியுள்ளார்.
கே.வி.தங்கபாலு
தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இப்புனித நாளில் அண்ணல் நபிகள் நாயகம் சமுதாயத்திற்கு வகுத்தளித்த அறநெறிகளை குறிப்பாக மனித குலத்தில் பகை உணர்வு இன்றி வன்முறையை ஒழித்து அனைவரும் அமைதி, சமாதான வாழ்வு பெற வேண்டும் என்ற அவரது அரிய போதனையை நினைவில் கொண்டு நாட்டில் மதநல்லிணக்கம் மேம்பட்டிட சாதி, மத, இன, மொழிப் பிரிவுகள் கடந்து ஒற்றுமைக்கு வழிவகுப்போம். மகத்தான இவ்விழாநாளில் அனைத்து இஸ்லாமியப் பெருமக்களுக்கும் தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் என் இனிய பக்ரீத் நல்வாழ்த்துக்கள்.
இவ்வாறு கே.வி.தங்கபாலு கூறியுள்ளார்.
ஆர் .எம்.வீரப்பன்
எம்.ஜி.ஆர். கழகம் தலைவர் ஆர்.எம்.வீரப்பன் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமியப் பெருமக்கள் இறைவன் வழிகாட்டிய தியாகத் திருநாளாம் பக்ரீத் பண்டிகையை கொண்டாடும் உயர்ந்த நாள் இன்று. இந்த நன்னாளில் மனிதர்களின் உயிரைக் காப்பாற்றும் உணர்வோடு வாழ வேண்டும், மற்ற உயிர்களை மதித்துப் போற்ற வேண்டும் என்ற இறைவனின் வழிகாட்டுதலை உணர்ந்து நடந்துகொள்ள எல்லோரும் முயற்சித்து வெற்றிபெறுவோம் என்ற நல்வாழ்த்துக்களை எம்.ஜி.ஆர். கழகத்தின் சார்பில் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஆர்.எம்.வீரப்பன் கூறியுள்ளார்.
எஸ்.ஜெகத்ரட்சகன்
ஜனநாயக முன்னேற்றக்கழக நிறுவன தலைவர் எஸ்.ஜெகத்ரட்சகன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
`தியாக திருநாள் பக்ரீத்' இஸ்லாமிய சகோதரர்களின் வாழ்க்கையில் ஓர் உன்னதத் திருநாள். `பகுத்துண்டு பல்லுயிர் ஓம்புவோம்' என்ற உயர்ந்த தத்துவத்தின் அடிப்படையில், இருப்பதை இல்லாதவர்களுக்கும் கொடுத்து, சேர்ந்து உண்ணுகின்ற வழக்கம் வாழ்க்கையில் மண்ணுயிர் ஓம்பும் என்ற மானுட தத்துவத்தை காப்பதாக அமைகின்றது.
இந்த தியாக திருநாளில் இஸ்லாமிய சகோதரர்களுக்கு வாழ்த்தினை தெரிவித்துக்கொள்வதோடு, அவர்களுடைய தொண்டுகள் தொடர வேண்டும், மனித சமுதாய மேம்பாட்டிற்காக என்று ஜனநாயக முன்னேற்றக் கழகம் சார்பாக வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு ஜெகத்ரட்சகன் கூறியுள்ளார்.
திருநாவுக்கரசர்
பா.ஜ.க. தேசிய செயலாளர் சு.திருநாவுக்கரசர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
சகிப்புத்தன்மை, மனிதநேயம், ஈகை, சகோதரத்துவம் ஆகிய மனித குலத்திற்கு தேவையான நற்பண்புகளை தொடர்ந்து பேணிக்காத்து, வளர்த்து அனைத்து தரப்பினரும் சகோதரர்களாய் ஒருங்கிணைந்து வாழ்ந்திட தியாகத் திருநாளாம் இந்த பக்ரீத் திருநாளில் அனைவரும் உறுதியேற்போம். இஸ்லாமிய சகோதர, சகோதரிகள் அனைவருக்கும் எனது பக்ரீத் நல்வாழ்த்துக்களை அன்புடன் தெரிவித்துக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
திருமாவளவன்
விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் தொல்.திருமாவளவன் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-
இஸ்லாமியர்களின் பெயரால், மானுடத்திற்கெதிரான, மனிதநேயமற்ற வன்முறை செயல்களை சில பயங்கரவாதக் கும்பல் முன்னெடுப்பது, மனிதநேயத்தின் வடிவமான இஸ்லாத்தை பழிப்பதாக அமைந்து விடுவதை காண முடிகிறது. ஆகவே, இஸ்லாமிய சமூகத்தின் மீது திணிக்கப்படும் அவதூறுகளை துடைத்திட, மும்பையில் நடந்த பயங்கரவாத நடைமுறைகளை கண்டிப்பதும், அவற்றுக்கெதிராக அனைத்து ஜனநாயக சக்திகளும் அணிதிரள வேண்டியதும் மிகமிக இன்றியமையாதது என்பதை இந்த ஈகைத்திருநாளில் உணர்வோம்; அதனை நடைமுறைப்படுத்த உறுதியேற்போம்!.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
இதேபோல், இந்திய னியன் முஸ்லீம் லீக் மாநில பொதுச்செயலாளர் சையத் சத்தார், மாவட்ட தலைவர் எம்.ஜெய்னுல் ஆபிதீன், தேசியலீக் மாநில தலைவர் எம்.பஷீர்அகமது, தமிழ் மாநில முஸ்லீம் லீக் தலைவர் எஸ்.ஷேக்தாவூத், ஐக்கிய ஜனதாதளம் மாநில பொது செயலாளர் டி.ராஜகோபால், இந்திய தேசிய லீக் மாநில தலைவர் எஸ்.ஜே.இனாயத்துல்லாஹ், தலித் மக்கள் முன்னணி மாநில தலைவர் குமரி அருண், தமிழ்நாடு வக்பு வாரிய தலைவர் செ.ஹைதர் அலி.
தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக்கழக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லாஹ், மனித நீதிப்பாசறை மாநில தலைவர் முஹம்மது அலி ஜின்னா, அ.தி.மு.க. தென்சென்னை மாவட்ட சிறுபான்மையினர் நலப்பிரிவு தலைவர் வீரைகறீம், தமிழ்நாடு மதச்சார்பற்ற ஜனதா தளம் பொது செயலாளர் வி.பி.இதயவண்ணன், மதச்சார்பற்ற ஜனதா தளம் மாநில தலைவர் முஹம்மது இஸ்மாயில், அம்பேத்கார் மக்கள் முன்னணி மாநில தலைவர் கோ.வைரபாண்டியன், ராஜீவ் மக்கள் காங்கிரஸ் நிறுவன தலைவர் ஏ.ஜி.நரசிம்மன், தமிழக பாரதீய ஜனதா கட்சியின் மாநில சிறுபான்மைப்பிரிவு தலைவர் ஏ.கனிபாய் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: