செவ்வாய், 23 டிசம்பர், 2008

பாகிஸ்தான் அதிபருடன் ராணுவ தளபதி சந்திப்பு!.- ``போருக்கு எந்த நிமிடமும் தயார்'' என்று அறிவிப்பு.(!.?)



இஸ்லாமாபாத், டிச.24-

பாகிஸ்தான் அதிபரை அந்த நாட்டு ராணுவ தளபதி சந்தித்தார். அப்போது ``போருக்கு எந்த நிமிடமும் தயார்'' என்று அவரிடம் கூறினார்.

``மும்பை மீது தாக்குதல் நடத்திய தீவிரவாத இயக்கத் தலைவர்களை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். பாகிஸ்தானில் செயல்படும் அந்த இயக்கங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அங்கு இயங்கும் தீவிரவாத பயிற்சி முகாம்களை மூட நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று இந்தியா பாகிஸ்தானை வலியுறுத்தி வருகிறது.

ஆனால் பாகிஸ்தான் இதற்கு சரியான பதில் அளிக்க வில்லை. சில தலைவர்களை கைது செய்வது போல செய்து, பின்னர் விட்டு விட்டது. தீவிரவாதிகள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லை என்றும், அதற்குரிய போதுமான ஆதாரங்களை ஒப்படைத்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பாகிஸ்தான் சப்பை கட்டு கட்டி வருகிறது. பாகிஸ்தானுக்கு அமெரிக்கா உள்பட பல நாடுகள் கண்டித்தும் பாகிஸ்தான் மசியவில்லை.



இதனால் பாகிஸ்தான் மீது இந்தியா எந்த நேரமும் போர் தொடுக்கலாம் என்று அந்த நாடு அச்சத்தில் உள்ளது. இதன் எதிரொலியாக இந்திய எல்லையில் பாகிஸ்தான் படைகளை குவித்து வைத்து இருக்கிறது. ஆப்கானிஸ்தான் பகுதியில் நிறுத்தி வைத்திருந்த படைகளையும் இந்திய பகுதிக்கு அனுப்பி உள்ளது.

பாகிஸ்தான் விமானப்படை தனது கண்காணிப்பை அதிகரித்து உள்ளது. தனது நகரங்கள் மீது இந்தியா வான்வெளி தாக்குதல் நடத்தக் கூடாது என்று கருதி, முன்னெச்சரிக்கையாக இஸ்லாமாபாத், ராவல்பிண்டி, லாகூர் ஆகிய முக்கிய நகரங்கள் மீது போர் விமானங்கள் பறந்து தீவிர கண்கணிப்பில் ஈடுபட்டு வருகின்றன.


பாகிஸ்தான் பிரதமர் ராஜா கிலானி கராச்சியில் பேசும்போது, ``நாட்டின் கிழக்கு பகுதியில் போர் தொடுக்கப்பட்டால் நாட்டு மக்கள் அதை ஒற்றுமையாக எதிர் கொள்வார்கள் என்று தெரிவித்தார்.

போர் விமானங்கள் கண்காணிப்பில் ஈடுபடத் தொடங்கிய சில மணி நேரத்தில், பாகிஸ்தான் அதிபர் ஆசிப் அலி சர்தாரியை அந்த நாட்டின் தலைமை தளபதி அஷ்பக் பர்வேஸ் கயானி சந்தித்துப் பேசினார். அப்போது பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் எத்தகைய பதிலடி கொடுக்கும் என்றும், போர் வியூகங்கள் குறித்தும் அவர் விளக்கினார்.

அவர் கூறியதாக அந்த நாட்டு பத்திரிகை `தி நியூஸ் டெய்லி' தெரிவித்து இருப்பதாவது:-

``இந்தியா போர் தொடுத்தால் அடுத்த சில நிமிடங்களிலேயே பாகிஸ்தான் படைகள் சரியான பதிலடி கொடுக்கும். எத்தகைய தாக்குதலையும் எதிர் கொள்ள நமது படைகள் முழு வீச்சில் தயாராக இருக்கின்றன. நாட்டுக்காக தங்களது உயிரைத் தியாகம் செய்ய நமது வீரர்கள் தயாராக இருக்கிறார்கள்.''

இவ்வாறு கயானி தெரிவித்தார்.
அப்போது சர்தாரி அவரிடம் கூறியதாவது:-

``அமைதி ஏற்பட நடவடிக்கைகளை முடுக்கி விடலாம் என்று நினைக்கிறேன். அதற்காக பாகிஸ்தானை பலவீனமாகக் கருதி விடக் கூடாது. பக்கத்து நாடுகளிடம் சமாதானத்துடனும், நல்லுறவுடனும் நீடிக்கவே பாகிஸ்தான் விரும்புகிறது. ஆனால் பாகிஸ்தானை மிரட்டும் வகையில் இந்திய தலைவர்கள் விடும் அறிக்கைகள் போர் சூழலை உருவாக்கும் வகையில் உள்ளன.

நாட்டின் முப்படைகள், அரசியல், தலைவர்கள் மற்றும் மக்கள் அனைவரும் நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏதும் ஏற்பட்டால் ஒற்றுமையாக சந்திக்க தயாராக இருக்கிறார்கள். எல்லைப் பகுதியில் அப்படி ஏதேனும் அச்சுறுத்தல் ஏற்படுமானால் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள முழு உரிமை உள்ளது.''

இவ்வாறு சர்தாரி கூறினார்.

நேற்று முன்தினம் இரவு அமெரிக்க முப்படைகளின் இணை தலைமை தளபதி அட்மிரல் மைக் முல்லன், பாகிஸ்தான் தலைமை தளபதி கயானி ஆகியோர் சந்தித்துப் பேசினார்கள். அப்போது அவரிடமும், ``இந்தியா, பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தினால், எங்களைப் பாதுகாத்துக் கொள்ள சரியான பதிலடி கொடுப்பதற்கு முழு உரிமை இருக்கிறது'' என்று தெரிவித்து இருக்கிறார்.

இந்த நிலையில், பாகிஸ்தான் மீது இந்தியா போர் தொடுத்தால் முழு ஆதரவு அளிக்கப் போவதாக தலீபான் இயக்கம் அறிவித்து உள்ளது.

இது தொடர்பாக, பாகிஸ்தானில் தடை செய்யப்பட்ட இயக்கமான தெஹ்ரிக்-இ-தலீபான் என்ற தீவிரவாத அமைப்பின் தலைவர் பைதுல்லா மெஹ்சூத், `தி டெய்லி நிïஸ்' என்ற ஆங்கிலப் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், ``பாகிஸ்தான் மீது போர் திணிக்கப்பட்டால், ராணுவத்துடன் இணைந்து போராட ஆயிரக்கணக்கான எங்களது வீரர்கள் தயாராக இருக்கிறார்கள். இந்தியா போர் தொடுத்தால் பாகிஸ்தான் படைகளுக்கு உதவியாக செல்ல ஆயிரக்கணக்கான தற்கொலைப் படையினருக்கு, வெடிகுண்டுகளுடன் கூடிய ஜாக்கெட்டுகள், வெடிகுண்டுகள் நிரப்பப்பட்ட வகானங்கள் அளித்து உள்ளோம்'' என்று தெரிவித்து உள்ளார்.

கருத்துகள் இல்லை: