வெள்ளி, 26 டிசம்பர், 2008

பாகிஸ்தானுடன் போர் மேகம்". - பிரதமர் மன்மோகன் சிங்குடன் முப்படை தளபதிகள் ஆலோசனை!.


புதுடெல்லி, டிச.27-

பாகிஸ்தானுடன் போர் பதற்றம் அதிகரித்து வருவதைத் தொடர்ந்து பிரதமர் மன்மோகன் சிங்குடன் முப்படை தளபதிகள் நேற்று ஆலோசனை நடத்தினார்கள்.

மும்பை தாக்குதலுக்கு காரணமான தீவிரவாதிகள் மீது நடவடிக்கை எடுக்க பாகிஸ்தானுக்கு இந்தியா ஒரு மாத `கெடு' விதித்திருந்தது.

ஆனால், தாக்குதல் நடத்தியவர்கள் தங்கள் நாட்டைச் சேர்ந்தவர்கள் அல்ல என்று பாகிஸ்தான் பிடிவாதமாக கூறி வருகிறது. பாகிஸ்தான் தீவிரவாதிகளின் தொடர்பை நிரூபிக்க இந்தியா போதுமான ஆதாரங்களை அளிக்கவில்லை என்று பாகிஸ்தான் சாக்கு போக்கு சொல்கிறது. உலக நாடுகள் எச்சரிக்கை விடுத்தும், தீவிரவாதிகள் மீது பெரிய அளவில் நடவடிக்கை எடுக்காமல் விட்டு விட்டது.

இந்நிலையில், இந்தியா விதித்த ஒரு மாத `கெடு' நேற்றுடன் முடிவடைந்தது. இதனால் இந்தியா எந்த நேரமும் அதிரடி தாக்குதலை தொடங்கலாம் என்று பாகிஸ்தான் பீதியில் உள்ளது. அதை சமாளிப்பதற்காக, பாகிஸ்தான் ராணுவத்தினர், இந்தியாவுடனான எல்லை கட்டுப்பாட்டு கோட்டு பகுதியிலும், சர்வதேச எல்லைப் பகுதியிலும் குவிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி, ஒரு லட்சத்து 20 ஆயிரம் பேர் குவிக்கப்பட்டுள்ளனர்.அவர்கள் போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் விமானப்படை விமானங்களும் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. விடுமுறையில் சென்ற ராணுவத்தினரை உடனே பணிக்குத் திரும்புமாறு பாகிஸ்தான் ராணுவம் உத்தரவிட்டுள்ளது.

இந்தியா போரை விரும்பவில்லை என்று பிரதமர் மன்மோகன்சிங் ஏற்கனவே தெரிவித்துள்ளார். இருப்பினும், பாகிஸ்தான் ராணுவம் தயார்நிலையில் இருப்பதால், இந்தியாவின் முப்படைகளும் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

போருக்கு தயார்நிலை பற்றி விவாதிப்பதற்காக, முப்படை தளபதிகளுடனான உயர்மட்ட அவசர ஆலோசனை கூட்டத்தை பிரதமர் மன்மோகன்சிங் கூட்டினார். டெல்லியில் பிரதமர் அலுவலகத்தில் இந்த ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இதில், ராணுவ தளபதி தீபக் கபூர், கடற்படை தளபதி அட்மிரல் சுரேஷ் மேத்தா, விமானப்படை தளபதி ஏர் மார்ஷல் பாலி எஸ்.மேஜர் ஆகியோர் கலந்து கொண்டனர். தேசிய பாதுகாப்பு ஆலோசகர் எம்.கே.நாராயணனும் பங்கேற்றார். இக்கூட்டத்தில், நாட்டின் பாதுகாப்பு நிலவரம் பற்றி பொதுவாக ஆலோசனை நடத்தப்பட்டது. குறிப்பாக, போரை சந்திக்க முப்படைகள் எந்த அளவுக்கு தயார் நிலையில் உள்ளன என்பது பற்றி விவாதிக்கப்பட்டது.

தத்தமது படைகள் தயார்நிலையில் இருப்பது பற்றி முப்படை தளபதிகளும் பிரதமரிடம் தனித்தனியாக எடுத்துரைத்தனர். பாகிஸ்தானின் அச்சுறுத்தல் பற்றியும், எதிர் நடவடிக்கைக்கு எல்லைப் பகுதியில் இந்தியா செய்துள்ள ஏற்பாடுகள் பற்றியும் பிரதமர் கேட்டறிந்தார். ராணுவத்தினருக்கான சம்பள கமிஷன் சிபாரிசில் நிலவும் அதிருப்தி குறித்தும் இக்கூட்டத்தில் ஆலோசனை நடத்தப்பட்டது.

இந்த கூட்டம் வழக்கமானதுதான் என்று ராணுவ அமைச்சக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இருப்பினும், பாகிஸ்தானுடனான பதற்றம் அதிகரித்துள்ள நிலையில் நடைபெற்றதால், இக்கூட்டம் முக்கியத்துவம் பெறுகிறது.

இந்த கூட்டத்தை தொடர்ந்து, பாதுகாப்புக்கான மந்திரிசபை கமிட்டி கூட்டம், பிரதமர் மன்மோகன்சிங் தலைமையில் நடைபெற்றது. அதிலும், போருக்கான தயார்நிலை பற்றி விரிவாக விவாதிக்கப்பட்டது.

இதனால் இந்தியா-பாகிஸ்தான் இடையே எந்த நேரமும் போர் மூளும் அபாயம் நிலவுகிறது. ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள மக்கள், போர் மூண்டால் உயிரை காத்துக்கொள்வதற்காக, தங்கள் வீடுகளில் பதுங்கு குழிகளை தோண்டி வருகிறார்கள்.

நாடு முழுவதும் உள்ள விமான தளங்கள் உஷார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. டெல்லியில் விமான தாக்குதல் நடத்தப்படும் ஆபத்து இருப்பதால், அதை முறியடிப்பதற்காக, டெல்லி அருகே உள்ள ஹிண்டன் விமான தளத்தில் மிக்-29 ரக போர் விமானங்கள் தயார்நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

பாகிஸ்தானின் விமான ஒத்திகை மீதும் இந்திய விமானப்படை ஒரு கண் வைத்துள்ளது. பாகிஸ்தான் விமானங்கள், இந்திய வான்பகுதிக்குள் ஊடுருவுகின்றனவா? என்று கண்காணித்து வருகிறது.

எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. கடந்த 23-ந் தேதி ராணுவ தளபதி தீபக் கபூர், சியாச்சின் பனிமலைச் சிகரம் உள்ளிட்ட இடங்களுக்கு சென்று நேரில் ஆய்வு செய்தார். இந்திய விமானப்படை விமானங்கள், பொக்ரானில் குண்டு வீசி ஒத்திகையில் ஈடுபட்டன.

ஆனால், பாகிஸ்தானைப் போல், இந்தியா படையினர் எண்ணிக்கையை அதிகரிக்கவில்லை. எல்லைக்கு அப்பால், பாகிஸ்தான் ராணுவத்தின் நடமாட்டம் அதிகரித்து இருப்பதாக எல்லை பாதுகாப்பு படை டைரக்டர் ஜெனரல் எம்.எல்.குமாவத் தெரிவித்தார். இருப்பினும், இது வழக்கமானதுதான், பயப்பட தேவையில்லை என்றும் அவர் கூறினார்.

இதுவரை இந்தியா-பாகிஸ்தான் இடையே 3 தடவை போர் நடந்துள்ளது. தற்போது பாகிஸ்தானின் அடாவடிப் போக்கால், 4-வது தடவையாக போர் மூளும் சூழ்நிலை நிலவுகிறது.

கருத்துகள் இல்லை: