வெள்ளி, 5 டிசம்பர், 2008

சென்னை சட்டக்கல்லூரி மோதல் சம்பவம்: 26 மாணவர்களின் ஜாமீன் மனு தள்ளுபடி


சென்னை, டிச.6-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த மோதல் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 மாணவர்களின் ஜாமீன் மனுவையும் 3 மாணவர்களின் முன் ஜாமீன் மனுவையும் நேற்று சென்னை செசன்சு கோர்ட்டு தள்ளுபடி செய்தது.

சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் கடந்த மாதம் 12-ந் தேதி இருதரப்பு மாணவர்களிடையே மோதல் ஏற்பட்டது. இதில் பலர் காயம் அடைந்தனர். இதுதொடர்பாக சித்திரைசெல்வன் உள்பட 26 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 26 பேரும் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்தனர்.
இதுமட்டுமல்லாமல், சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மாணவர் பாரதி கண்ணன் மற்றும் ஆறுமுகம், அய்யாத்துரை ஆகியோர் முன்ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்தனர்.

இந்த மனுக்கள் சென்னை முதன்மை செசன்சு நீதிபதி தேவதாஸ் முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. 26 மாணவர்கள் சார்பில் வக்கீல் விஜயகுமாரும், 3 மாணவர்கள் சார்பில் வக்கீல் ரூபர்ட் பர்னபாசும், அரசு தரப்பில் வக்கீல் ஷாஜகானும் ஆஜராகி வாதாடினார்கள். கோர்ட்டில் நடந்த விவாதம் வருமாறு:-
வக்கீல் விஜயகுமார்:- 26 மாணவர்களுக்கு எதிராக எந்த குறிப்பிட்ட குற்றச்சாட்டும் முதல் தகவல் அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. அவர்களது பெயர்களும் இடம்பெறவில்லை. சித்திரை செல்வன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவருக்கு உதவியாக இருந்தவர்களையும் போலீசார் கைது செய்துள்ளனர். 12-ந் தேதி நடந்த சம்பவத்திற்கு மாணவர்களை காரணமாக கூற முடியாது. வெளியில் இருந்து செயல்படும் சாதி அமைப்புகள், மாணவர்களை ஒரு கருவியாக பயன்படுத்தியுள்ளன. ஆகவே, இவர்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
வக்கீல் ரூபர்ட் பர்னபாஸ்:- முன்ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த 3 மாணவர்களும் யாரையும் தாக்கியதாக ஆதாரம் கிடையாது. அப்படி யாரையும் தாக்கியிருந்தால் இவர்கள் மீது காயம் இருக்காது. இவர்களை தாக்க வந்தவர்கள் வைத்திருந்த கத்தியை தான் பறித்து பாரதி கண்ணன் தற்காப்புக்காக பயன்படுத்தினார். யாரையோ திருப்தி செய்ய சித்திரை செல்வனிடம் போலீசார் புகார் பெற்று முன்தேதியிட்டு பதிவு செய்துள்ளனர். ஒவ்வொரு மாணவரும் என்ன தவறு செய்தார்கள் என்பது பத்திரிகைகையில் வந்த படங்களும், டி.வி.யில் ஒளிபரப்பான படங்களுமே சாட்சியாகும்.

மாநகர அரசு வக்கீல் ஷாஜகான்:- இந்த சம்பவம் தொடர்பாக பல பொதுநல வழக்குகள் தொடரப்பட்டு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளன. இந்த மனுக்கள் மீது முதல் டிவிசன் பெஞ்ச் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் தேர்வுகள் அமைதியாக நடத்தப்பட வேண்டும் என்று தெரிவித்துள்ளது. மனுதாரர்களுக்கு ஜாமீன் மற்றும் முன்ஜாமீன் வழங்கினால் தேர்வு அமைதியாக நடக்காது. காரணம், தேர்வு சமயத்தில் தான் இந்த சம்பவம் ஏற்கனவே நடந்துள்ளது. ஒரு சிறிய கூட்டத்தினர் நடத்திய இந்த வன்முறை சம்பவத்தால் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வு எழுத முடியாமல் தவிக்கின்றனர். இவர்கள் சிறையில் இருந்தால்தான் தேர்வை அமைதியாக நடத்த முடியும்.
இவர்கள் கூறியபடி வெளியில் உள்ள அமைப்புதான் இந்த சம்பவத்துக்கு காரணம் என்றால், அதற்கு காரணம் யார் என்பதை கண்டறியும் விசாரணை முடியவில்லை. தாக்கப்பட்டவர்கள் உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருகிறார்கள். சித்திரை செல்வன் போன்ற பெரும்பான்மையான மாணவர்கள் மீது ஏற்கனவே கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளது. உதாரணமாக சித்திரை செல்வன், மணிமாறன் ஆகியோர் மீது மட்டும் தலா 4 வழக்குகள் நிலுவையில் உள்ளன. பாரதி கண்ணனை தாக்கிய சித்திரை செல்வனும் காயத்திற்கு சிகிச்சை பெற்று வருகிறார். அய்யாத்துரையை இந்த வழக்கில் குற்றவாளியாக சேர்க்கவில்லை.
இவ்வாறு வக்கீல்கள் விவாதம் நடைபெற்றது.

முதன்மை செசன்சு நீதிபதி தேவதாஸ், இந்த மனுக்களை நேற்றிரவு 9.50 மணிக்கு தள்ளுபடி செய்து தீர்ப்பு வழங்கினார். தீர்ப்பில் கூறியிருப்பதாவது:-
இந்த மாணவர்கள் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் இருப்பதாலும், சட்டம் ஒழுங்கை பாதிக்கும் வகையில் இவர்கள் ஈடுபட்டதால், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து சட்டக்கல்லூரிகளின் கல்வி பாதிக்கப்பட்டிருப்பதாலும், விசாரணை இன்னும் நிலுவையில் இருப்பதாலும் 26 மாணவர்களுக்கும் ஜாமீன் வழங்க முடியாது. இதே போல பாரதி கண்ணன் உள்பட 3 பேருக்கும் முன்ஜாமீன் வழங்க முடியாது.
இவ்வாறு தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதவிர, சட்டக்கல்லூரி முதல்வர் அலுவலகம் தாக்கப்பட்ட வழக்கில் கண்ணன் உள்பட 14 பேரின் ஜாமீன் மனுவையும், போலீஸ் உதவி கமிஷனர் தாக்கப்பட்ட வழக்கில் 18 மாணவர்களின் முன்ஜாமீன் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.

கருத்துகள் இல்லை: