சனி, 20 டிசம்பர், 2008

ஆப்பிள் இறக்குமதிக்கு லஞ்சம் கேட்டதாக சென்னை துறைமுக சுதாதார அதிகாரி கைது!.- ரூ.1 கோடி மதிப்புள்ள சொத்துகள் பறிமுதல்!.


சென்னை, டிச.21-

ஆப்பிள் இறக்குமதிக்கு லஞ்சம் கேட்ட சென்னை துறைமுக சுகாதார அதிகாரியை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர்.

இதுபற்றி சி.பி.ஐ. போலீசார் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை கோயம்பேட்டில் பழ ஏற்றுமதி, இறக்குமதி நிறுவனம் நடத்தி வருபவர் என்.சி.அலெக்சாண்டர். இவர் ஆஸ்திரேலியா, அமெரிக்கா, சீனா உட்பட பல வெளிநாடுகளில் இருந்து ஆப்பிள், ஆரஞ்சு பழங்களை இறக்குமதி செய்து அவற்றை விற்பனை செய்வது வழக்கம். இவை கப்பல் மூலம் சென்னை துறைமுகத்துக்கு அனுப்பி வைக்கப்படும்.

சென்னை துறைமுகத்துக்கு வந்ததும் இறக்குமதி செய்யப்படும் பழங்கள் அனைத்தையும் துறைமுக சுகாதார அதிகாரியை வைத்து சோதனையிட வேண்டும். மக்கள் பயன்பாட்டுக்கு இந்தப் பழங்கள் அனைத்தும் உகந்ததுதானா? என்பதை அந்த அதிகாரி சோதனை செய்து தகுதி சான்றிதழ் வழங்குவார்.

இந்த வகையில் 19-ந் தேதி அமெரிக்கா வாஷிங்டன் நகரில் இருந்து ஆப்பிள் பழங்களை அலெக்சாண்டர் இறக்குமதி செய்தார். அவை சென்னை துறைமுகத்துக்கு வந்திருந்தன. இவற்றை சோதனை செய்து சான்றிதழ் வழங்கும்படி துறைமுக சுகாதார அதிகாரி டாக்டர் வி.வி.சாய்ராம்பாபு-வை அலெக்சாண்டர் அணுகினார்.

இதற்கு ரூ.6 ஆயிரம் லஞ்சம் தர வேண்டும் என்று சாய்ராம்பாபு கேட்டுள்ளார். இதுபற்றி சி.பி.ஐ. போலீஸ் சூப்பிரண்டிடம் (லஞ்ச தடுப்புப் பிரிவு) அலெக்சாண்டர் புகார் கொடுத்தார்.


இதன் அடிப்படையில் சாய்ராம்பாபுவை ரூ.6 ஆயிரத்தை லஞ்சமாக பெறும்போது, சி.பி.ஐ. போலீசார் கையும் களவுமாகப் பிடித்தனர். இந்த பணத்தை அலெக்சாண்டரிடம் இருந்து சுங்கவரித்துறை ஏஜெண்ட் மணிசேகரன் மற்றும் பூபதி ஆகியோர் வாங்கி சாய்ராம்பாபுவிடம் கொடுத்துள்ளனர்.

அதைத்தொடர்ந்து சாய்ராம்பாபு, மணிசேகரன் ஆகியோரை சி.பி.ஐ. போலீசார் கைது செய்தனர். சாய்ராம்பாபுவின் அலுவலகம் மற்றும் வீட்டை சோதனையிட்டனர். பணம் மற்றும் பல்வேறு பத்திரங்களையும் சேர்த்து ரூ.1.20 கோடி மதிப்புள்ள ஆவணங்கள் சிக்கின.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: