திங்கள், 24 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி மாணவர்கள் 26 பேர் ஜாமீன் கேட்டு கோர்ட்டில் மனு


சென்னை, நவ.25-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த வன்முறை சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட 26 மாணவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியை சேர்ந்த கே.சித்திரைசெல்வன் உள்பட 26 மாணவர்கள் ஜாமீன் கேட்டு சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர். அவர்கள் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-
சட்டக்கல்லூரி மாணவர் ஒருவர் போலீசில் புகார் ஒன்று கொடுத்துள்ளார். டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் தேவர் ஜெயந்தியை கொண்டாடுவதற்காக கடந்த மாதம் 29-ந் தேதி பாரதி கண்ணனும், அவரது ஆதரவு மாணவர்களும் சுவரொட்டி ஒட்டினார்கள் என்றும், அந்த சுவரொட்டியில் டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரி என்று குறிப்பிடாமல், அரசு சட்டக்கல்லூரி என்று குறிப்பிட்டிருந்ததாகவும் அந்த புகாரில் கூறியுள்ளார்.
இதன் தொடர்பாக மாணவர்களிடையே விரோதம் ஏற்பட்டது என்றும், இதனால் 12-ந் தேதி தேர்வு எழுதிவிட்டு வந்த மாணவர்களை பலர் தாக்கினார்கள் என்றும் அந்த புகாரில் கூறப்பட்டுள்ளது.

ஆனால், இந்த வன்முறைக்கு காரணம் அன்றையதினம் பாரதி கண்ணன் கத்தியை எடுத்துக்கொண்டு, சித்திரை செல்வனை தாக்கியுள்ளார். இதைத்தொடர்ந்து தான் வன்முறை சம்பவம் நடந்தது.
மாணவர்களிடையே முன்விரோதம் உள்ளது என்று தெரிந்தும், முன்னதாகவே கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க தவறிவிட்டது. இதன் காரணமாகத்தான் வன்முறை சம்பவம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக எங்களை போலீசார் கைது செய்துள்ளனர்.

கைது செய்யப்பட்ட நாங்கள் ஜெயிலில் இருந்து வருகிறோம். இந்த நிலையில், மாணவர்களிடையே ஏற்பட்ட மோதலை விசாரிக்க நீதிபதி சண்முகம் தலைமையிலான விசாரணை கமிஷன் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த கமிஷன் முன்பு உண்மை விவரத்தை எடுத்துக்கூற வேண்டியுள்ளது. தற்போது நாங்கள் ஜெயிலில் இருந்து வருவதால், இந்த கமிஷன் முன்பு உண்மை விவரத்தை எடுத்துக்கூறும் வாய்ப்பு எங்களுக்கு பறிபோய்விடும். ஆகவே, எங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியுள்ளனர்.
இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) முதன்மை செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னை பெரிய ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் பாரதி கண்ணன், அய்யாத்துரை, ஆறுமுகம் ஆகியோர் சட்டக்கல்லூரி வன்முறை தொடர்பாக தங்களை போலீசார் கைது செய்தால் முன்ஜாமீன் வழங்க வேண்டும் என்று சென்னை செசன்சு கோர்ட்டில் மனுதாக்கல் செய்துள்ளனர்.
இந்த மனு இன்று (செவ்வாய்க்கிழமை) விசாரணைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஞாயிறு, 23 நவம்பர், 2008

கோவையில் துணிகரம் கல்லூரி மாணவி-வாலிபரை கடத்தி சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டல் ரூ.5 லட்சம் கேட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது

கோவை, நவ.24-
கோவையில் கல்லூரி மாணவி-வாலிபரை ஒரு கும்பல் கடத்திச்சென்று நிர்வாண படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியது. இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கோவை ரெட்பீல்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த, 24-வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-வது ஆண்டு படித்து வந்தார். அவருக்கும், சாய்பாபா காலனியை சேர்ந்த வாலிபர் விஜய் ஆனந்த் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விஜய் ஆனந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும் மாணவியிடம் நெருங்கி பழகினார். இந்த நிலையில் விஜய் ஆனந்தும், கல்லூரி மாணவியும் ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க் பகுதியில் உள்ள `காபி பார்' அருகில் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், இந்த ஜோடியை சூழ்ந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிய, அந்த நபர்கள் ``போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே எங்களுடன் வருங்கள்'' என்று கூறினார்கள். இதனால் அந்த ஜோடியினர் அச்சம் அடைந்து அவர்கள் கூறியபடி தங்களது காரை ஓட்டிச்சென்றனர். அந்த காருக்குள் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரும் ஏறிக்கொண்டனர்.

பின்னர் 2 கார்களும் போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல், கோவை அருகே உள்ள சூலூரை நோக்கி சென்றது. அப்போது இதுகுறித்து கேட்ட, இளம் ஜோடியை ஆயுதங்களால் மிரட்ட தொடங்கினார்கள். பின்னர் அவர்களை சூலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். வாலிபர் விஜய் ஆனந்தையும், மாணவியையும் நிர்வாணமாக்கி செல்போன் மற்றும் வீடியோ மூலம் படம் பிடித்ததாக தெரிகிறது. இந்த படத்தை இருவரின் பெற்றோருக்கும் அனுப்பி வைக்கப்போவதாகவும், இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாகவும் மிரட்டினார்கள். மேலும் மாணவியிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
``உங்களை பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தரவேண்டும்'' என்று விஜய் ஆனந்திடம் அந்த கும்பல் மிரட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ஆனந்த், கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பணம் எடுத்து தருவதாகவும், எனவே தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த சிலர் ஹக்கீம்(30) என்பவன் தலைமையில் விஜய் ஆனந்தை அழைத்துக்கொண்டு, காரில் சாய்பாபாகாலனிக்கு வந்தனர். விஜய் ஆனந்த் தனது வீட்டுக்கு வந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து கடத்தப்பட்ட விவரத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து, வாலிபர் விஜய் ஆனந்தை கடத்தி வந்த, ஹக்கீமை மடக்கிப்பிடித்தனர். பின்னர் மாணவியை மீட்பதற்காக இரவோடு இரவாக சூலூருக்கு சென்றனர். போலீஸ் வந்ததை பார்த்ததும், அங்கிருந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கல்லூரி மாணவியை மீட்டு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

ஹக்கீமிடம் இருந்த செல்போனில் பதிவான போன் நம்பர்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கைதான ஹக்கீம் மீது கற்பழிப்பு, கத்தி முனையில் மிரட்டல், கடத்தல் உள்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் இந்த கடத்தலில் ஹக்கீமுக்கு உடந்தையாக இருந்ததாக, குனியமுத்தூரை சேர்ந்த மணிகண்டன் (27), ரத்தினபுரியை சேர்ந்த கார்த்தி என்ற கார்த்திகேயன் (24) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலைச் சேர்ந்த ஜார்ஜ், அனீஷ், ரமேஷ் ஆகிய 3 பேரை பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாகவும், அவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான ஹக்கீம் என்ற ஜிம் ஹக்கீம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏராளமான காதல் ஜோடிகளை கடத்தி, படம் பிடித்து பணம் சம்பாதிப்பதை தொழிலாக கொண்டு செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக சூலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பாதியில் விடப்பட்ட வீட்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கடத்தல் கும்பலுக்கு சொந்தமாக கார் மற்றும் வீடியோ காமிராக்கள், காமிரா செல்போன்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஹக்கீமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

சனி, 22 நவம்பர், 2008

அசோக்நகரில் 3 பேர் கொலையான சம்பவம்: சொத்து விற்பனையை விரும்பாதவர்கள் கொலை செய்தார்களா?. போலீசார் விசாரணை

சென்னை, நவ.23-
சென்னை அசோக் நகரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், சொத்து விற்பனையை விரும்பாத சிலரால் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அசோக் நகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன், அவர் மனைவி கஸ்தூரி, வேலைக்காரப் பெண் அன்பரசி ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கொலையாளி யார்? என்பதை துப்பறிய முடியவில்லை. ஆனாலும் விடா முயற்சியுடன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சரவணனுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. அவருக்கு வாரிசு இல்லை என்பதால், உறவினர்களின் போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. இதுதவிர சரவணனுக்கு மேலும் சில பெண்களுடன் நட்பு இருந்தது. அந்த நட்பு மூலமாக வந்த வாரிசு இருப்பதாக தெரிகிறது. அந்த வாரிசுக்குத்தான் அனைத்து சொத்துகளும் சேர வேண்டும் என்று சிலர் கருதியுள்ளனர்.
இது வேறு சிலருக்கு தெரிந்ததால் சொத்துக்கு பலரும் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். எந்த சொத்து யாருக்கு? என்ற போட்டியும் நடந்து இருக்கிறது. சொத்துக்காக நடைபெறும் போட்டி அனைத்தும் வேலைக்காரப் பெண் அன்பரசிக்கு தெரியும்.

சில சொத்துகள் பினாமி பெயரில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. சொத்துக்கு யார் வாரிசு? அல்லது எந்தெந்த சொத்து யாருக்குத் தரப்படும்? என்ற விவரங்கள் எதையும் சரவணன் வெளியிடாமல் இருந்தார்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


இந்த நிலையில் சரவணனின் வீட்டில் போலீசார் நேற்று மாலையில் திடீரென்று சோதனை நடத்தினர். இதற்காக உறவினர்கள் பலரை போலீசார் அழைத்து சென்றனர். அவரது வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதை உறவினர்கள் முன்னிலையில் போலீசார் திறந்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீசார் அள்ளிச் சென்றனர். என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதற்கான பட்டியலை உறவினர்களுக்கு போலீசார் வழங்கியுள்ளனர்.

சரவணனின் செல்போன் முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. இதற்கென்று உதவி கமிஷனர் தலைமையில் ஒரு தனிப்படை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த போனில் உள்ள எண்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு உள்ளன. அதில் எந்தெந்த எண்களுக்கு அவர் அதிகம் பேசி இருக்கிறார்? என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
அந்த எண்களுக்கான முகவரியை சம்பந்தப்பட்ட செல்போன் கம்பெனிகளிடம் இருந்து போலீசார் பெற்றுள்ளனர். அந்த முகவரியில் இருப்பவர்களை ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பல கைரேகைகள் தெளிவாக இல்லை. எனவே, கொலை நடந்த வீட்டுக்கு போலீசார் மீண்டும் சென்று கைரேகையை சேகரித்தனர். இவற்றில் பழைய ரவுடிகள், கூலிப் படையினர் போன்றவர்களின் கைரேகை சிக்குகிறதா? என்று சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 5 கைரேகைகள் ஒத்துப் போவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், மிளகாய் பொடியை கொலையாளிகள் பயன்படுத்தி இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. மோப்ப நாயின் செயல்பாட்டை தடுக்க முடியும் என்பதால், கொலையாளிகள் அந்த தடையத்தையும் விட்டு வைக்கவில்லை. எனவே, அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முதலில் சரவணன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து அன்பரசியும், கஸ்தூரியும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கஸ்தூரியை கொலை செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆபரேஷன் நடந்து இருந்ததால், கண்ணைத் திறக்க முடியாமல் படுத்துக் கிடந்த அவரை, எளிதாக கொலையாளிகள் கொலை செய்து விட்டனர்.
ஆனால் அன்பரசி கடுமையாகப் போராடி இருக்கிறார். இதனால் அவரது உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. முதலில் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். கையால் தடுத்த போது, கையை கத்தியால் வெட்டினர். தப்பித்து ஓடுவதற்காக அவர் திமிறிய போது 2 பக்க இடுப்பிலும் கத்தியை சொருகியுள்ளனர்.
நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கத்திக் குத்து காயங்கள் உள்ளன. அன்பரசிக்கு கஸ்தூரி மூலம் சில சொத்து விவரங்களும், அதனால் ஏற்பட்ட தகராறு பற்றியும், தகராறுக்கு காரணமாணவர்கள் பற்றியும் ஏற்கனவே தெரியும். இதனால் அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

வாரிசு இல்லாத பணக்காரர்கள், வாரிசுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருக்கும் பணக்கார பெற்றோர் போன்றவர்கள் கொள்ளையர்களால் குறிவைக்கப்படுவது இயல்பு. சென்னையில் நடந்த ஆதாயக் கொலைகளில் இப்படிப்பட்டவர்களே அதிகம் பலியாகி இருக்கின்றனர். அந்த வகையில் கொலையானோர் பட்டியலில் சரவணன் சேர்ந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர, ரியல் எஸ்டேட் தொழிலிலுள்ள நபர்களால் கொலை நடந்து இருக்கக் கூடுமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாரிசு இல்லாதவர்களின் சொத்துகளை எளிதில் வாங்கி விற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என்று தெரிகிறது. வாரிசுகள் வெளிநாடுகளில் இருந்தால், அவர்களுக்கு அந்த சொத்துகளால் லாபமில்லை என்ற பட்சத்தில் அவற்றை வாங்கி விற்பனை செய்ய பலர் முயற்சி செய்யக் கூடும்.

அந்த வகையில் சரவணனின் சொத்துகளை விற்பனை செய்வதிலோ அல்லது வேறு யாராவது வாங்குவதிலோ ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் யாருடனாவது அவருக்கு தகராறு இருந்ததா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சரவணன் யாருக்காவது தனது சொத்தை விற்பனை செய்ய முயன்று, அது பிடிக்காமல் யாராவது கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
ஆனாலும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் நண்பர்கள், உறவினர்கள் போலீசாரின் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ளனர். சரவணன் தங்கி இருந்த வீடு மிகவும் பெரியது என்பதால், அங்கு நடக்கும் சம்பவங்கள் பற்றி அருகில் வசிக்கும் நபர்களுக்கு சரிவர தெரியவில்லை.

வெள்ளி, 21 நவம்பர், 2008

பெண்ணை 1 வருடமாக அடைத்து வைத்து கொடுமை ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி சிகிச்சை மையம் நடத்தியவர் கைது




பெண்ணை 1 வருடமாக அடைத்து வைத்து கொடுமை ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி சிகிச்சை மையம் நடத்தியவர் கைது
தாம்பரம், நவ.22-
சென்னை அருகே, பெண்ணை 1 வருடமாக அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக, ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி, சிகிச்சை மையம் நடத்தி வந்தார்.

சென்னை அருகே உள்ள பம்மல் வ.உ.சி. தெருவில், பிறவி ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி, சிகிச்சை மையம் ஒன்றை, சக்தி வேலு என்பவர் நடத்தி வருகிறார். இவரது சிகிச்சை மையத்தில், 26 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சிகிச்சை மையத்தில் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலனியை சேர்ந்த ரெஜிகுமார் என்பவர், கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்தார்.


அப்போது அவரிடம், அங்கு இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவை சேர்ந்த அகிலா (29) என்ற பெண் கண்ணீருடன், "நானும் உன்னைப்போல இங்கு 1 ஆண்டுக்கு முன் வேலைக்கு சேர்ந்தேன். என்னை வெளியே விடுவது இல்லை. இங்கு தான் நான் இருக்க வேண்டும். நான் கொடுமைக்கு உள்ளாகி சிரமப்படுகிறேன்'' என்று தெரிவித்தார்.


இதுபற்றி ரெஜிகுமார், பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜனிடம் புகார் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, சப்-இன்ஸ்பெக்டர் அஸ்லம் பாஷா ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். போலீசார், அந்த சிகிச்சை மையத்துக்கு சென்று, அகிலாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், தான் படும் கஷ்டத்தை எடுத்துரைத்தார்.
மேலும் அந்த சிகிச்சை மையத்தில் குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து, பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் படி சக்தி வேலுவை போலீசார் கைது செய்தனர். அகிலா மீட்கப்பட்டார்.
பின்னர் சக்திவேலுவை, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள். சக்தி வேலுவை, காவலில் வைக்க, நீதிபதி முருகேசன் உத்தர விட்டார். அதன்படி சக்தி வேலு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

சென்னையில் நடந்த கொடூர சம்பவம்: ஒரே வீட்டில் 3 பேர் கொலையில் மர்மம் நீடிக்கிறது




சென்னை, நவ.22-
சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியும், அவரது மனைவியும், வேலைக்கார பெண்ணும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் பற்றி இன்னும் துப்பு கிடைக்கவில்லை. மர்மம் நீடிக்கிறது. கொலையாளிகள் யார்? என்று கண்டுபிடிக்க 4 கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகிய 3 பேரும் ஒரே வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கொலையாளிகள் யார் என்று துப்பு துலக்கி கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் குணசீலன் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், துணை கமிஷனர்கள் முத்துசாமி, ஸ்ரீதர், உதவி கமிஷனர் சேது ஆகியோருடைய தலைமையில் 10 தனிப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
3 பேரின் பிணங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி நள்ளிரவுக்கு பிறகு தான் 3 பேரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் 3 பேரும் இரவில் சாப்பிட்ட உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்து நள்ளிரவுக்கு மேல் இந்த படுகொலைகள் நடந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கொலை நடந்த வீட்டில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி கைப்பற்றப்பட்டது. அந்த கத்தியை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் அதை வைத்து தான் 3 பேருடைய கழுத்தும் அறுக்கப்பட்டு கொலைகள் நடந்துள்ளது என்றும் உறுதி செய்துள்ளனர். 3 பேரின் கழுத்தும் வலது பக்கமே அறுபட்டுள்ளது.
கொலையாளி இடது கையால் தலையை பிடித்துக்கொண்டு, வலது கையால் கத்தியை வைத்து கழுத்தை அறுத்துள்ளான்.


கொலை செய்யப்பட்ட சரவணனுக்கும், அவரது மனைவி கஸ்தூரிக்கும் இறுதி சடங்குகள் நேற்று நடந்தன. இறுதி சடங்கின்போது உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறுதி சடங்குகள் முடிந்துவிட்டதால், போலீஸ் விசாரணையும் நேற்று பிற்பகலில் இருந்து தீவிரமானது.
ஏற்கனவே தியாகராயநகரில் நடந்த மலர்விழி என்ற பெண்ணின் கொலை வழக்கிலும், கோடம்பாக்கத்தில் நடந்த சந்திரா என்ற பெண்ணின் கொலை வழக்கிலும், கே.கே.நகரில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடந்த பரிமளா என்ற பெண்ணின் கொலை வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நெருங்கிய உறவினர்களே அந்த படுகொலைகளை செய்திருந்தனர். 2004-ம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடாமலேயே மூடப்பட்டுவிட்டன.
அதுபோன்ற நிலைமை இந்த வழக்கிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும், குற்றவாளிகளை கண்டிப்பாக பிடித்தே தீரவேண்டும் என்றும் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கே.கே.நகர் போலீஸ் நிலையத்திலேயே முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை உறவினர்கள், நண்பர்கள், சந்தேக நபர்கள் போன்ற 100 பேரிடம் அவர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடந்துள்ளது. சொத்துக்காக கூலிப்படையை அனுப்பி இந்த கொலை நடந்ததா அல்லது உறவினர்களே இந்த படுபாதக கொலைகளை செய்தார்களா, தொழில் ரீதியாகவோ, முன்பகை காரணமாகவோ இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்ற 4 கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை நடந்த விசாரணையில் கொலையாளிகள் பற்றி ஒரு சிறு தடயம்கூட கிடைக்கவில்லை. தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சைதாப்பேட்டையில் அன்னபூரணி நடுநிலைப்பள்ளி என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்றை அறக்கட்டளை மூலம் சரவணன் நடத்தி வந்தார்.

இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக கொத்தவால்சாவடியில் பெரிய குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோன் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. குறைவான வாடகை கொடுத்ததால், வாடகைதாரரை காலி செய்யும்படி சரவணன் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் வாடகைதாரருக்கும், சரவணனுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலில் கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்றும், கண்டிப்பாக குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

போலி ஆவணங்களை காட்டி தனியார் மருத்துவ கல்லூரியை ரூ.1000 கோடிக்கு விற்க முயன்ற 7 பேர் கைது




ஆலந்தூர், நவ.21-
போலி ஆவணங்களை காட்டி தனியார் மருத்துவ கல்லூரியை ரூ.1000 கோடிக்கு அதன் நிர்வாகியிடமே விற்க முயன்ற பெண் உள்பட 7 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் ராஜகோபால். இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு தந்தார்.
அதில், ``புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி எனக்கு சொந்தமானது. போலி ஆவணங்களை காட்டி சிலர் என்னிடமே இந்த கல்லூரியை விற்க வந்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கோரியிருந்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.

போலீஸ் உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாஷம், தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாலினி, தேவி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் அந்த புரோக்கர் கும்பலுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள், ``புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 46 ஏக்கரில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1000 கோடி ஆகும்'' என்று தெரிவித்தனர். ``அந்த இடத்திற்கு அட்வான்ஸ் தொகை தருகிறோம். பரங்கிமலையில் உள்ள ஓட்டலுக்கு வாருங்கள்'' என்று போலீசார் கூறினார்கள்.

உடனே ஒரு பெண் உள்பட 4 பேர் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் புதுச்சேரி குமரன் நகரை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 54) என்பவர் தலைமையில் புரோக்கர் கும்பல் செயல்பட்டு போலி ஆவணங்களுடன் மருத்துவ கல்லூரியை விற்க முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து வெங்கட்ராமன் மற்றும் அவருடன் வந்த மற்ற புரோக்கர்கள் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பாக்கியராஜ் (60), புதுச்சேரி எழில் நகரை சேர்ந்த ரமேஷ் (50) மற்றும் புதுச்சேரி வில்லியனூர் வசந்த் நகரை சேர்ந்த பெண் அஸ்மத் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் ஸ்ரீபெரும்புதூரில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, ஆந்திரா காக்கிநாடாவில் உள்ள ஆனந்த கல்லூரி ஆகியவை விற்பனைக்கு உள்ளதாக கூறி அதன் போலியான ஆவணங்களை வைத்திருந்தனர். இவர்கள் இந்த இடங்களை விற்பனை செய்வதாக கூறி அட்வான்ஸ் தொகையாக லட்சக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுவார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் இந்த மோசடி கும்பலை சேர்ந்த மற்ற புரோக்கர்களான பிரபாகரன் (54), கோவை காரமடை ராஜகோபால் (57), திண்டுக்கல் கோவிந்தபுரம் பழனிச்சாமி (60) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மாருதி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

புதன், 19 நவம்பர், 2008

தைரியம் இருந்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பாருங்கள் கே.வி.தங்கபாலு பேச்சு



சென்னை, நவ.20-
தைரியம் இருந்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அரசியல் கட்சிகள் ஆதரித்து பார்க்கலாம் என்றும், சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் கே.வி.தங்கபாலு பேசினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 92-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். தொண்டர்கள் அனைவரும் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
விழாவில் கே.வி.தங்கபாலு பேசியதாவது:-

இலங்கை பிரச்சினை என்றால், காங்கிரஸ் கட்சியையும் அதன் நிலைப்பாட்டையும், மத்திய அரசையும் விமர்சிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்தியாவில் இந்திரா காந்தி மட்டுமே இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று முதலில் கூறியவர். இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட தொடங்கிய போது இந்திரா காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு எதிராக உலகநாடுகள் திரண்டன.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று 1982-ல் ஜெயவர்த்தனேவை டெல்லிக்கு அழைத்த பெருமை ராஜீவ்காந்திக்கு உண்டு. அவரை மட்டுமல்ல அப்போதைய இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தையும் அழைத்து தமிழர்களை காக்க முயற்சி எடுத்தார். இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து, ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒப்புக் கொள்ளவில்லை. ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அப்போதே நிறைவேற்றப்பட்டிருந்தால், இப்போது இலங்கையில் அமைதி ஏற்பட்டிருக்கும்.

நாம் தமிழக தலைவர்களின் உணர்வுகளை ஏற்கிறோம். ஆனால் மத்திய அரசை குறை கூறுவதால் ஒன்றும் நடக்காது. நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது. ஆதரிக்கவும் மாட்டோம். ஒருபோதும் அவர்களை மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம். பிரபாகரன் மட்டுமல்ல, ஆயிரம் பேர் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தமிழினத்தை கூறு கூறாக அழித்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை அங்குள்ள தமிழர்களே சொல்கிறார்கள். இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய இயக்கங்களை அழித்தது விடுதலை புலிகள்தான்.

விடுதலை புலிகளை ஆதரிக்கும் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சிகளுக்கு நினைவிருக்கட்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தை உங்களுக்கு ஆதரிப்பதற்கு தைரியம் இருந்தால் ஆதரித்து பாருங்கள். சட்டம் தன் கடமையை செய்யும். மத்திய அரசின் நடவடிக்கைகளில் அந்த தலைவர்கள் இருக்கமாட்டார்கள். வன்முறையை ஆதரிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
இலங்கையில் போர் மூலம் அமைதி திரும்பாது. அங்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். இந்தியாவில் இருப்பது போல, இலங்கை அரசுக்கு உட்பட்டு அங்கு தமிழர்களுக்கு ஆட்சியுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு மிரட்டல் கடிதம் வந்ததை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பின் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுசெயலாளர் தாமோதரன், முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, ஞானதேசிகன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் டி.சுதர்சனம், யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஜெயகுமார், போளூர்வரதன், மகிளா காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி, முன்னாள் எம்.பி. கலியபெருமாள்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னம்மாள், பூவராகவன் மற்றும் நிர்வாகிகள் ஐஸ்அவுஸ் தியாகு, பிராங்கிளின் பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, யானைக்கவுனியில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தும், சத்திய மூர்த்தி பவனில் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் கே.வி.தங்கபாலு மரியாதை செலுத்தினார்.

சென்னையில் நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்: அளவுக்கு அதிகமாக இன்சுலின் ஊசி போட்டு நர்சு தற்கொலை

சென்னை, நவ.20-
சென்னையில் காதலனை மணக்க முடியாத ஏக்கத்தில் நர்சு ஒருவர் இன்சுலின் ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெஞ்சை உருக்கும் இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை வடபழனி ஒத்தவாடை தெருவில் வசித்தவர் ஆஷா (வயது 25). கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த இவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். சிறு வயதிலேயே தாயாரை இழந்தவர். தந்தை மற்றும் 2 சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தார். அவர்களும் இவரை கவனிக்கவில்லை.
நர்சு வேலைக்கான டிப்ளமோ படித்திருந்த ஆஷா, சொந்த ஊரில் இருந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு வந்தார். அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றினார். அப்போது குமார் என்ற வாலிபரோடு காதல் ஏற்பட்டது. குமார் பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றினார். குமாரும், ஆஷாவும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். குமாரின் பெற்றோரும் பச்சை கொடி காட்டினார்கள்.

பெற்றோர் ஆதரவு இல்லாத நிலையில், காதலனை மணந்து சந்தோஷமாக வாழலாம் என்று இன்ப கனவு கண்ட ஆஷாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. குமாரை மணப்பதற்காக முறைப்படி ஜாதக பொருத்தம் பார்க்கப்பட்டது. ஆனால், ஜாதகத்தில் ஆஷாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், அவரை மணந்தால் மாப்பிள்ளையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
இதனால் ஆஷா, குமார் திருமணம் தடைபட்டது. இதனால் ஆஷாவும், குமாரும் சென்னை வடபழனிக்கு வந்து குடியேறினார்கள். சென்னையில் இருவரும் வேலை தேடிக்கொண்டனர். இருவரும் அண்ணன்-தங்கை என்று கூறிக்கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.

குமாரை முறைப்படி திருமணம் தான் செய்ய முடியவில்லை. அவரோடு சேர்ந்தாவது வாழலாம் என்ற ஆஷாவின் கடைசி கனவிலும் மண் விழுந்தது. ஆஷாவை திடீரென்று ஆஸ்துமா நோய் தாக்கியது. இதனால் அவர் இடிந்து போனார். இனிமேல் குமாரோடு வாழ்வதற்கு தனக்கு தகுதியில்லை என்று ஆஷா முடிவு செய்தார். அவரே குமாருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார். விரைவில் திருமணம் நடக்க இருந்தது. குமாரை மணக்க உள்ள பெண்ணும், ஆஷாவை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். கடைசி காலம் வரை ஆஷா தங்களோடு தங்கியிருக்க குமாரை மணக்க இருந்த பெண்ணும் சம்மதித்தார்.
இருந்தாலும், ஆஷா கடந்த 15 நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். தனது வாழ்க்கையே சூனியமாகி விட்டதாக உணர்ந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டில் ஆஷா மயங்கிய நிலையில் கிடந்தார். இன்சுலின் ஊசி மருந்தை அளவுக்கு அதிகமாக உடலில் ஏற்றியது தெரிய வந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அரிய மருந்தாக இருக்கும் இன்சுலின் ஊசி மருந்தை அளவுக்கு அதிகமாக உடம்பில் ஏற்றினால், அதுவே உயிரை குடிக்கும் எமனாகவும் மாறிவிடும் என்பது மருத்துவ உண்மை. ஆஷா இன்சுலின் ஊசி மருந்தை ஏற்றி உயிரை விட முடிவு செய்துள்ளார். அவரை ஆபத்தான நிலையில் அவர் வேலைபார்த்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு சேர்த்தார்கள். ஆனால் ஆஷா பரிதாபமாக இறந்து போனார்.
அவரது உடலை பார்த்து குமார் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி உதவி போலீஸ் கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆஷாவின் வாழ்க்கையில் விதி விளையாடி அவரை விரட்டி, விரட்டி பல வகைகளிலும் தோல்வியை கொடுத்து இறுதியாக உயிரையும் குடித்துவிட்டது என்று அவர் வசித்த பகுதியை சேர்ந்த மக்கள் வேதனையோடு குறிப்பிட்டார்கள்.

செவ்வாய், 18 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி கலவரத்தில் இதுவரை 26 மாணவர்கள் கைது


சென்னை, நவ.19-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம் தொடர்பாக மாணவர்களின் கைது எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ள மாணவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், துணை கமிஷனர் சாரங்கன் ஆகியோர் மேற்பார்வையில், 20 தனிப்படையினர் தமிழகம் முழுவதும் சென்று சட்டக்கல்லூரி கலவரத்தில் தொடர்புடைய மாணவர்களை தேடி பிடித்து கைது செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வரை 18 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 4 மாணவர்கள் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையொட்டி, பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள 4 மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
நேற்று கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களும், சரண் அடைந்த மாணவர்களின் பெயர் விவரமும் வருமாறு:-
1. மணிமாறன்- இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அக்கரைபாளையம்.
2. குபேந்திரன்- இவர் பண்ருட்டி அருகேயுள்ள வீரபெருமாள் நல்லூரை சேர்ந்தவர்.
3. ரவீந்திரன் என்ற மார்க்-பண்ருட்டி அருகேயுள்ள கீழ்கவரப்பேட்டை இவரது சொந்த ஊராகும்.
4. வெற்றிக்கொண்டான்- குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள விலாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்.
5. செல்வகுமார்-திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழரை சேர்ந்த இவர், விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
6. வேல்முருகன்- திட்டக்குடி அருகேயுள்ள கொரக்காவடி இவரது சொந்த ஊராகும். சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.
7. பொள்ளாச்சியை சேர்ந்த சிவராஜ், விழுப்புரத்தை சேர்ந்த மேகநாதன் என்ற 2 மாணவர்களும் கோயம்புத்தூர் கோர்ட்டில் நேற்று மாலை சரண் அடைந்தனர்.

சட்டக்கல்லூரி கலவரத்தில் காயம் அடைந்த அய்யாதுரை என்ற மாணவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் வந்தது. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் கொடுத்தவர் யார்? என்று போலீசார் விசாரித்தபோது, தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகேயுள்ள பனிக்கர்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் தான் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் அனுப்பியது தெரிய வந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் முத்துராமலிங்கத்தை பிடித்தனர்.
போலீஸ் விசாரணையில், முத்துராமலிங்கம் மாணவர் அய்யாதுரையின் நெருங்கிய நண்பர் என்று தெரிய வந்தது. விளையாட்டாக கொலை மிரட்டல் தகவல் அனுப்பியதாக முத்துராமலிங்கம் தெரிவித்தார். இதையொட்டி போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலைமிரட்டல் செய்தி அனுப்புவது, வீண் வதந்திகளை பரப்பி பீதியை உண்டாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கைதானவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், எதிர்காலத்தில் சட்டக்கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மோதல் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று கைதான மாணவர்களும், சரண் அடைந்த மாணவர்களும் தான் கலவரத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

திங்கள், 17 நவம்பர், 2008

சென்னை பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டது எப்படி? கணவர் நடத்திய நாடகம் அம்பலம்


சென்னை, நவ.18-
சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர் பெங்களூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

சினிமாவில் நடக்கும் திகில் சம்பவம் போன்று நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை திருவல்லிக்கேணி தேரடி தெருவை சேர்ந்தவர் ரங்கன் (வயது 56). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி பெயர் மைதிலி.
இவர்களுக்கு லட்சுமி (24), சரஸ்வதி (22) என்ற 2 மகள்கள் இருந்தனர். லட்சுமி சாப்ட்வேர் என்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஐ.பி.எம். கம்ப்ட்டர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவருக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம். 2-வது மகள் சரஸ்வதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., பட்டமேற்படிப்பு படித்து வருகிறார். ரங்கன் தனது 2 மகள்களையும் மிகவும் செல்லமாக பாசத்தை ஊட்டி வளர்த்து வந்தார்.
இந்த நிலையில், லட்சுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். திருமண இணையதளம் ஒன்றில் வந்த விளம்பரத்தை பார்த்து லட்சுமிக்கு மாப்பிள்ளையை முடிவு செய்தனர். மாப்பிள்ளையின் பெயர் மனோஜ்குமார் (27). இவர், சென்னை வேளச்சேரி விஜயநகரை சேர்ந்தவர். இவரது தந்தை சுரேஷ் வங்கி ஒன்றில் சீனியர் மானேஜராக பணியாற்றுகிறார். தாயார் பெயர் வைஜெயந்திமாலா. ரஞ்சனி என்ற ஒரு சகோதரி இருக்கிறார். மனோஜர்குமாரும் சாப்ட்வேர் என்ஜினீயராக லட்சுமி வேலைபார்த்த ஐ.பி.எம். கம்ப்ட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் ஆகும். முறைப்படி ஜாதகம் பார்த்து மாப்பிள்ளையையும் நேரடியாக சந்தித்து இரு வீட்டு ஆசீர்வாதத்தோடு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி அன்று திருமணம் ஜாம், ஜாம் என்று நடந்தது.
ரங்கனும் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினார். திருமணத்துக்கு பிறகு மனோஜ்குமாரும், லட்சுமியும் பெங்களூர் முருகேஷ்பாலையா பகுதியில் வாடகை வீட்டில் குடி அமர்ந்தார்கள். இருவரும் இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்தி வந்தனர். லட்சுமி, சென்னையில் இருக்கும் தன்னுடைய பெற்றோரிடம் தினமும் போன் செய்து பேசுவார். கணவரோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதாக பெற்றோரிடம் சொல்லி பெருமைப்படுவார். கடந்த தீபாவளி பண்டிகை அன்று லட்சுமியும், மனோஜ்குமாரும் சென்னை வந்தனர். தீபாவளி பண்டிகையை சென்னையில் கொண்டாடிவிட்டு மீண்டும் பெங்களூர் சென்றனர்.

இந்த நேரத்தில் கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி அன்று லட்சுமி பெங்களூரிலிருந்து சென்னையில் உள்ள தனது தாயார் மைதிலியோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். தனது மாமனார் தனக்கு `ஸ்கூட்டி' வாங்கி தருவதற்காக பெங்களூர் வர உள்ளார் என்றும், அவருக்கு விருப்பமான கேழ்வரகு தோசை சுட்டு கொடுக்கப்போகிறேன் என்றும் லட்சுமி தனது தாயாரிடம் போனில் மகிழ்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் 1 மணி இருக்கும். போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவை யாரோ தட்டுகிறார்கள் என்றும், அப்புறம் பேசுகிறேன் என்றும் லட்சுமி திடீரென்று போனை வைத்துவிட்டார்.
இதற்கிடையில் லட்சுமி ஏன் போனை திடீரென்று வைத்தாள் என்று பலமுறை பெங்களூருக்கு தொடர்புகொண்டு அவர் பெற்றோர் பேசினார்கள். ஆனால் போனை எடுத்து யாரும் பேசவில்லை. இதனால் லட்சுமியின் பெற்றோர் பதட்டம் அடைந்தனர். இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் மனோஜ்குமார் அழுதுகொண்டே போனில் பேசினார். லட்சுமி வீட்டில் தனியாக இருக்கும்போது யாரோ மர்ம மனிதர்கள் புகுந்து அவளை அடித்து போட்டுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

போனில் வந்த செய்தியை கேட்டு லட்சுமியின் பெற்றோர் நடுங்கி போனார்கள். மீண்டும் பெங்களூருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியபோது லட்சுமியை படுகொலை செய்துவிட்டு கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று மனோஜ்குமார் கூறினார். இந்த துயர செய்தியை கேட்டு லட்சுமியின் பெற்றோர் மயங்கி விழுந்தார்கள். அலறி அடித்துக்கொண்டு பெங்களூர் விரைந்தனர்.
பெங்களூருக்கு போய் மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு லட்சுமியின் பிணம் சென்னை கொண்டுவரப்பட்டது. லட்சுமிக்கு இறுதி சடங்குகளும் நடந்தன. அந்த நிமிடம் வரை மனோஜ்குமார் மீது லட்சுமியின் பெற்றோருக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. தனது மகள் கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுவிட்டாள் என்று லட்சுமியின் பெற்றோர் நினைத்தனர்.

லட்சுமியின் கொலை தொடர்பாக பெங்களூர் எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் யாரும் வீட்டுக்கு வந்த தடயம் இல்லை. அக்கம் பக்கத்தினரும் கொள்ளையர்கள் யாரும் வந்ததாக தெரிவிக்கவில்லை. லட்சுமி அணிந்திருந்த மோதிரத்தில் தலைமுடி இருந்தது.
மேலும் மனோஜ்குமாரின் நடவடிக்கை மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. லட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மனோஜ்குமார் இரவு 8.30 மணிக்கு மேல்தான் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறும்போது இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது லட்சுமி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்ததாக கூறினார். அவர் கொடுத்த புகாரிலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

மனோஜ்குமாரிடம் விசாரித்தபோது கம்பெனியில் வேலைபார்க்கும்போது இடையில் வெளியில் எங்கும் போகவில்லை என்றும், இரவு 7 மணிக்குமேல் தான் கம்பெனியை விட்டு புறப்பட்டதாகவும் கூறியிருந்தார். அவர் வேலைபார்த்த கம்ப்ட்டர் நிறுவனத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் பரிசோதித்து பார்த்தனர்.
அதில், மனோஜ்குமார் பிற்பகல் 12.30 மணியளவில் கம்பெனியை விட்டு வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. நாங்கள் விசாரித்தபோது வெளியே போகவில்லை என்றும் சொன்னீர்கள், ஆனால் கண்காணிப்பு கேமராவில் நீங்கள் 12.30 மணிக்கு வெளியே சென்ற காட்சி பதிவாகியுள்ளது என்று மனோஜ்குமாரிடம் போலீசார் கிடுக்கிபிடி போட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் மனோஜ்குமார் திணறினார்.

இதற்கிடையில், லட்சுமியின் மோதிரத்தில் சிக்கியிருந்த முடி, மனோஜ்குமாரின் தலை முடி என்று தடயஅறிவியல் துறையினர் உறுதி செய்தனர். இவற்றையெல்லாம் வைத்து லட்சுமியை கொன்ற மாபாதக கொலைகாரன் மனோஜ்குமார்தான் என்று போலீசார் முடிவு செய்தனர். ஆதாரத்தோடு சிக்கிக்கொண்டதால் மனோஜ்குமாரும், லட்சுமியை நான் தான் கொலை செய்தேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்.
மனோஜ்குமாரின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மனோஜ்குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் பெங்களூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

லட்சுமி கொலை செய்யப்பட்ட சோகத்தை தாங்கமுடியாமல் இருந்த அவரது பெற்றோருக்கு மருமகன் தான் கொலையாளி என்ற தகவல் தெரிந்ததும் ஒரேயடியாக இடிந்துபோனார்கள். பெங்களூர் போலீசார் சென்னை வந்து லட்சுமியின் பெற்றோரிடமும், மனோஜ்குமாரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.

மனோஜ்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தான் அவர் தனது மனைவியை கொலை செய்ய தூண்டுதலாக இருந்துள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருமணம் நடந்த 75 நாளில் மனைவியை தீர்த்துக்கட்டிவிட்டு அவர் ஜெயிலுக்கும் போய்விட்டார். லட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூர் நகர மக்களையே நெஞ்சை உருக வைத்துள்ளது.

ஞாயிறு, 16 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி கலவரத்தில் கைது. தூண்டி விட்ட அரசியல் புள்ளியும் சிக்குகிறார்.

சென்னை, நவ.17-
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 15-பேர் கைதாகி உள்ளனர். கலவரத்தை தூண்டி விட்ட அரசியல் புள்ளி ஒருவரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் கல்லூரியில் கடந்த 12-ந் தேதி அன்று மாணவர்களின் இருபிரிவினருக்கிடையே நடந்த மோதல் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க புதிய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்ட 30 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் வரை 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மேலும் 4 மாணவர்கள் கைதானார்கள். அவர்களில் ஒருவர் பெயர் கோபாலகிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்தவர். இன்னொருவர் பெயர் இளமுகில். இவர் சென்னை அண்ணாநகர் பாடி குப்பத்தை சேர்ந்தவர். மதுராந்தகத்தை சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவரும், உளுந்தூர் பேட்டையை சேர்ந்த இளையராஜா என்ற மாணவரும் நேற்று இரவு கைதானார்கள். இதன் மூலம் கைதான மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சிவகதிரவன், ராஜா, பிரேம்நாத் ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், இளமுகில் ஆகியோரும் மாஜிஸ்திரேட்டு பரமராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 15 மாணவர்களை கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.

சட்டக்கல்லூரியில் நடந்த கொலைவெறி கலவரத்திற்கு பின்னணியாக இருந்து ஆயுத சப்ளையும் செய்து தூண்டி விட்டது ஒரு முக்கிய அரசியல் புள்ளி என்று மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. அந்த அரசியல்புள்ளியின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு எதிரான ஆதாரங்களையும் திரட்டி வருகிறார்கள். முக்கிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் அந்த அரசியல் புள்ளி கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தான் கலவரத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தான் ஆயுதங்களை மாணவர்கள் எடுத்து வந்துள்ளனர். மாணவர்கள் விடுதியில் ஏராளமான வெளியாட்கள் வந்து தங்கி, கலவரத்திற்கு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது. மாணவர்கள் விடுதியிலும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் திடீரென்று கலவரம் நடந்த சட்டக்கல்லூரி வளாகத்தை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
நேற்று போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும், சட்டக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகை குறித்து அப்போது ஆலோசித்ததாகவும் பால்கனகராஜ் வெளியில் வந்து நிருபர்களிடம் தெரிவித்தார்.

சனி, 15 நவம்பர், 2008

சென்னை சட்டக்கல்லூரி கலவரம்: மேலும் 3 மாணவர்கள் கைது


சென்னை, நவ.16-
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 19 மாணவர்களை கைது செய்ய தமிழகம் முழுவதும் 20 இடங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 12-ந் தேதி அன்று சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் இரு பிரிவினருக்கிடையே பெரிய கலவரம் வெடித்தது. கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை, சித்திரைசெல்வன் ஆகிய 4 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். கலவரத்தில் சட்டக்கல்லூரி முதல்வரின் அலுவலகமும் தாக்கப்பட்டது.
இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டக்கல்லூரி போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 30 மாணவர்கள் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் புதிய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றவுடன் சட்டக்கல்லூரி கலவரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களை கூண்டோடு கைது செய்ய உத்தரவிட்டார். இதையொட்டி, கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் நேரடி மேற்பார்வையில், துணை கமிஷனர்கள் சாரங்கன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 5 உதவி கமிஷனர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி கோகுல்ராஜ், வி.கோவிந்தன், டி.கோவிந்தன், பிரபாகர், திலிபன், ஜெயக்குமார், பாலமணிகண்டன், சித்திரை செல்வன் ஆகிய 8 பேரை முதல்கட்டமாக கைது செய்தனர்.
இவர்களில் சித்திரை செல்வன் காயத்தோடு போலீஸ் பாதுகாப்பில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மாணவர்கள் கொலை முயற்சி உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிவகதிரவன் என்ற மாணவர் மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், சென்னை சட்டக்கல்லூரியில் 2-வது ஆண்டு படிக்கும் மாணவர். மதுரை மாடங்குளத்தை சேர்ந்தவர். கைதான மாணவர் சிவகதிரவனை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் குருவார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தார்.
இதற்கிடையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியில் ராஜா என்ற மாணவரும், தஞ்சாவூரில் பிரேம்நாத் என்ற மாணவரும் கைதானார்கள். ராஜா சென்னை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆவார். கைதான மாணவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

இந்த வழக்கில் மணிமாறன், ரவீந்திரன் உள்பட மேலும் 19 மாணவர்களை கைது செய்ய 20 தனிப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சி, கடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, மேலகோட்டையம், கரூர், தஞ்சை, குடவாசல், காஞ்சி, நெல்லை, சிவகிரி, மதுரை, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய இடங்கள் உள்பட 20 இடங்களில் முகாமிட்டு தலைமறைவு மாணவர்களை தேடி வருகிறார்கள்.
சட்டக்கல்லூரியில் ஏற்கனவே பல்வேறு சமயங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சட்டக்கல்லூரி போலீசில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியிலும் நடந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாகவும் கீழ்ப்பாக்கம் போலீசில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மொத்தம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது ஏற்கனவே 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 20 வழக்குகளிலும் தொடர்புள்ளவர்களை வேட்டையாடி பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நேற்று மாலையில் சட்டக்கல்லூரி கலவரம் தொடர்பாக கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். முதல்கட்டமாக தலைமறைவாக உள்ள மாணவர்களை விரைவாக கைது செய்யவும், அடுத்தக்கட்டமாக சட்டக்கல்லூரியில் எதிர்காலத்தில் முழு அமைதியை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று இரவு சென்னை நகர் முழுக்க தலைமறைவு மாணவர்கள் பதுங்கி இருக்கிறார்களா? என்று பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரசியல் புள்ளி ஒருவர் வீட்டையும் போலீசார் ரகசியமாக கண்காணித்தபடி உள்ளனர்.

கைதான சிவகதிரவன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பிரிவாக செயல்பட்டு வந்தோம். கடந்த 30-ந் தேதி கல்லூரியில் கொண்டாடப்பட்ட தேவர் ஜெயந்தி விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் டாக்டர் அம்பேத்கார் பெயர் இடம்பெற வில்லை. இதனால் 2 தரப்பினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதற்கிடையில் எங்கள் மோதலை தடுப்பதற்காக சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் ஒரு பிரிவினரை தாக்க நாங்கள் முடிவு செய்தோம். அவர்கள் தேர்வு எழுதி வெளியில் வரும் போது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் காத்து இருந்தோம். அவர்கள் வந்தவுடன் தாக்குதலை தொடங்கினோம். அப்போது அந்த பிரிவை சேர்ந்த 2 பேர் கத்தியுடன் எங்களை தாக்க வந்தனர். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினோம்."
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

வெள்ளி, 14 நவம்பர், 2008

கேளம்பாக்கம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர்கள் பயங்கர மோதல்

திருப்போரூர், நவ.15-
கேளம்பாக்கம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தமிழகம் மற்றும் வெளிமாநில மாணவர்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில், 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையொட்டி 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற கோஷ்டி மோதல் தமிழகத்தை உலுக்கிய நிலையில், சென்னை அருகே உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயும் பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னை, கேளம்பாக்கத்தை அடுத்த படூரில், பழைய மாமல்லபுரம் ராஜீவ்காந்தி சாலையில் இந்துஸ்தான் பல்கலைக்கழம் உள்ளது. இங்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து வந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணியில் கோழி இறைச்சிக்கு பதிலாக மாட்டு இறைச்சி இருந்ததாக கூறி, வெளி மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்கள் விடுதி வார்டனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களை தட்டிக்கேட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், "நாங்களும்தானே சாப்பிடுகிறோம். பிரியாணியில் மாட்டு இறைச்சி பயன்படுத்தப்படவில்லை'' என்று வார்டனுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்கள்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
நள்ளிரவு 12 மணி அளவில், வெளிமாநில மாணவர்கள் உருட்டுக்கட்டை, தடி போன்ற ஆயுதங்களுடன் கும்பலாக சென்று தமிழக மாணவர்களை தேடிப்பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவநாதன் (தகவல் தொழில்ட்ப பிரிவு), தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் (ஏரோநாட்டிக்கல்ஸ்), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங்) ஆகிய 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மூவரும் முதலாம் ஆண்டு மாணவர்கள். அவர்களை தாக்கியவர்களும் முதலாம் ஆண்டு மாணவர்கள்தான்.
தகவல் அறிந்ததும் போலீசார் கல்லூரி விடுதிக்கு சென்று படுகாயம் அடைந்த 3 மாணவர்களை மீட்டு, கேளம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர்களை தாக்கியதாக வெளி மாநிலங்களை சேர்ந்த ரோஹித் (வயது 18), பிரதீப்குமார் (18), நிதீஷ்குமார் (19), அபிலாஷ் (19) உள்பட 18 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதற்கு கண்டனம் தெரிவித்து வெளிமாநில மாணவர்கள் நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க கல்லூரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

வியாழன், 13 நவம்பர், 2008

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்: நீதி விசாரணைக்கு உத்தரவு


சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கல்லூரி முதல்வர் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். போலீஸ் கமிஷனர் சேகரும் மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை, நவ.14-
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
மாணவர்களில் ஒரு தரப்பினர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை, டிப்லைட்டுகள் மண்வெட்டி ஆகியவற்றுடன் எதிர் தரப்பு மாணவர்களை ஓட, ஓட விரட்டி கொடூரமாக தாக்கினார்கள்.
ஆறுமுகம், பாரதிகண்ணன் என்ற 2 மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான இந்த காட்சி ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

2 மாணவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட உருட்டு கட்டைகளால் தாக்கப்பட்ட போது ஏராளமான போலீசார் கல்லூரி வாசலில் காவலுக்கு நின்று இருந்தனர். ஆனால் 10 அடி தூரத்தில் நடந்த தாக்குதலை அவர்கள் தடுக்கவில்லை.
போலீசாரின் இந்த அலட்சியம் பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
``மாணவர்களின் மோதலை தடுக்க தவறிய போலீசார் மீதும், கல்லூரி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவம் விரும்பத்தகாத நிகழ்வு என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். இந்த செய்தி வந்தவுடன் முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வு அமைச்சரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி காயம் அடைந்த மாணவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
என்னுடனும், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் இரவு வெகுநேரம் முதல்-அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அவரே பதில் கூறுவதாகத் தான் இருந்தார். நீண்ட நேரம் அவர் விழித்திருந்ததால் சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் சார்பாக நான் பதில் வழங்குகிறேன்.
நாட்டின் நன்மைக்கும், தீமைக்கும் பொறுப்பேற்க போகிறவர்கள் மாணவர்கள். அதிலும் குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் நீதிக்காக வாதாடப் போகிறவர்கள். அந்த சட்டக் கல்லூரியில் இரு பிரிவினருக்கிடையே மோதல் நடந்தது கண்டிக்கத்தக்கது தான். வருந்துகிறேன். நானும் அந்த சட்டக் கல்லூரி மாணவன் என்பதால் மிகுந்த வேதனை அடைகிறேன்.
இது முதல் முறை அல்ல. பல முறை அப்படி நடந்திருக்கிறது. வழக்கமாக எதிர்க்கட்சியினர் போலீசார் அத்துமீறி விட்டார்கள் என்று தான் பேசுவார்கள். இந்த முறை போலீசார் மெத்தனமாகி விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. 2 பிரிவுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த அடிதடியில் ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை, சித்திரைச் செல்வன் ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பாலமணிகண்டன், கோவிந்தன், மற்றொரு கோவிந்தன், ஜெயக்குமார், திலீபன், பிரபாகரன், கோகுல்ராஜ் ஆகிய 7 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். பொதுமக்கள் 10 பேர் கூடி நின்றாலே யாராவது தடுக்கலாமே என்று தான் சொல்வார்கள். ஆனால் போலீசாரே நிற்கிறார்கள் என்கிற போது தடுக்கும்படி கூறத்தான் செய்வார்கள். எங்கே தவறு நடந்தது என்று பார்க்க வேண்டும்.
எனவே உடனடியாக உத்தரவிடக் கூடிய உதவிக் கமிஷனர் நாராயணமூர்த்தி, எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கொடியராஜ், விஜயலட்சுமி, பெருமாள், துரைராஜ் ஆகியோர் சென்னைக்கு வெளியே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் என்ன செய்தார், அவராவது முன்னால் வந்து நின்றிருக்க வேண்டும். எனவே கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் தொடராமல் இருக்க கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது. எல்லா சட்டக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் மெத்தனத்திற்கு என்ன காரணம், கல்லூரி முதல்வர் செய்ய தவறியது என்ன என்பதை எல்லாம் ஆய்ந்து அறிக்கை தர ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக வருத்தப்படுகிறேன். நான் படிக்கும் போது பீட்டர் அல்போன்சுக்கும் எனக்கும் தகராறு ஏற்படும். அவர் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதில் தான் அரசியல் ரீதியாக மட்டுமே தகராறு இருக்கும். மற்றபடி சாதி ரீதியாக, மத ரீதியாக மோதல் இருந்ததில்லை.
சாதி ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டு தானிருக்கிறோம். தலைவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். இது அரசால் மட்டுமே தடுத்துவிட முடியாது. சமுதாயத்தில் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு நாம் அத்தனை பேரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
போலீஸ் கமிஷனர் மாற்றம்
இதற்கிடையே, சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சேகர் நேற்று திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த கே.ராதாகிருஷ்ணன் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று இரவு பிறப்பித்தது.

புதன், 12 நவம்பர், 2008

இலங்கையில் போரை நிறுத்த வேண்டும் தமிழக சட்டசபையில் ஒரு மனதாக தீர்மானம்

சென்னை, நவ.13-
இலங்கையில் சிங்கள் ராணுவத்தின் ஈவு இரக்கமற்ற தாக்குதலால் அப்பாவி தமிழர்கள் தினமும் கொல்லப்படுகிறார்கள்.
ஒட்டுமொத்த கண்டனம்
சிங்கள ராணுவம் போர் நிறுத்தம் செய்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காணவேண்டும் என்று தமிழகத்தை சேர்ந்த அனைத்து கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றன.
விடுதலைப்புலிகள் தரப்பில் போர் நிறுத்தம் செய்ய தயார் என்று அறிவித்துள்ளபோதிலும், போரை நிறுத்த முடியாது என்று இலங்கை அரசு அடாவடியாக கூறி வருகிறது.
சட்டசபையில் தீர்மானம்
இந்தநிலையில் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும் முதல்-அமைச்சர் கருணாநிதி இலங்கை தமிழர் பிரச்சினை தொடர்பாக ஒரு அரசினர் தீர்மானத்தை கொண்டு வந்து வாசித்தார். அதன் விவரம் வருமாறு:-
இந்த உதவிகள் போதுமானதல்ல
``ஏறத்தாழ நாற்பதாண்டு காலத்திற்கு மேலாக இலங்கைத் தமிழர்களின் பிரச்சினை; பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டும் முடிவுக்கு வராமல், அந்த மண்ணின் மைந்தர்களாம் தமிழின மக்களின் உயிர், உடைமைகள் எதற்கும் உத்திரவாதமில்லாமல்; அவர்களின் குடும்பங்கள், குழந்தை குட்டிகள் என லட்சக்கணக்கானோர் அகதிகளாக அயல்நாடுகளுக்கு ஓடியவர்கள் போக எஞ்சியிருப்போர், எந்த நேரத்திலும் மரணத்தை எதிர்பார்த்துத் துடித்துத் தவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்நிலை குறித்து முடிவெடுக்க அக்டோபர் 14-ம் தேதி நடத்தப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் தீர்மானத்திற்கிணங்க; கடலில் எல்லை வகுக்கப்பட்டு ஓர் உடன்பாட்டின் மூலம் தமிழக மீனவர்களின் உயிருக்கும் உடைமைக்கும் உரிமைக்கும் பாதுகாப்பு வழங்கும் ஏற்பாடு செய்யப்பட்டாலும் நமது பக்கத்து நாட்டிலேயே நமது உடன்பிறந்த தமிழ் மக்கள், நித்த நித்தம் சிந்தும் ரத்தமும் வடிக்கும் கண்ணீரும் நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சிகளாகி விட்ட கொடுமைக்கிடையே; இந்தியப் பேரரசின் உதவியுடன் இலங்கைத் தமிழர்களுக்கான உணவு, உடை, மருந்து போன்ற அத்யாவசியப் பொருள்களை, தமிழகத்திலிருந்து, செஞ்சிலுவைச் சங்கம் போன்ற சர்வதேச அமைப்புகளின் வாயிலாக அனுப்பி வைக்கிறோம் எனினும்; அவர்களுக்கு இந்த உதவிகள் மட்டும் போதுமானதல்ல.
சமநிலை வாழ்வு
அவர்களின் உயிர், உடைமை, ஆகியவற்றுக்குப் பாதுகாப்பு, இலங்கையில் அமைய வேண்டிய அமைதி நிறைந்த சமநிலை வாழ்வு, இவை அங்குள்ள தமிழர்களுக்கு உறுதி செய்யப்பட வேண்டும். அதற்கான அழுத்தமான நடவடிக்கையை நமது இந்திய மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும்.
இலங்கைத் தமிழர்களின் இந்த அவல நிலை உலகெங்கிலும் வாழும் தமிழர்களிடையே பெரும் கொந்தளிப்பையும், ஆத்திரத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. குறிப்பாக வரலாற்று ரீதியாகவும், கலாசாரம் மற்றும் பண்பாடு ரீதியாகவும் ஒன்றாக உள்ள ஏழு கோடி இந்தியத் தமிழர்களின் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதன் விளைவாகத் தமிழகத்தில் அனைத்து அரசியல் இயக்கங்களும், அரசியல் சார்பற்ற அமைப்புகளும் ஆர்ப்பாட்டங்களையும், பேரணிகளையும் நடத்தி, இலங்கை அரசுக்குத் தங்களது எதிர்பைத் தெரிவித்து வருகின்றன.
போரை நிறுத்த வேண்டும்
மாணவர்கள், வணிகர்கள், திரைப்படக் கலைஞர்கள், திரைப்படத் தொழில் ட்பக் கலைஞர்கள், சின்னத்திரை கலைஞர்கள், தொழிலாளர்கள், தமிழ் ஆர்வலர்கள் என எல்லாத் தரப்பினரும் இலங்கைத் தமிழர்களுக்காகக் குரல் கொடுத்து வருகிறார்கள். அரசு சார்பில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இலங்கையில் உடனடியாக போர் நிறுத்தம் செய்யப்பட வேண்டும் என்றும், இலங்கைத் தமிழர்களின் துயர் துடைக்கப்பட வேண்டும் என்றும் வலியுத்தி ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டிருக்கின்றது. அதைத் தொடர்ந்து சென்னையில்; வரலாறு படைத்த மனிதச் சங்கிலி அணிவகுப்பு நடத்தி ஈழத் தமிழர்களுக்கு ஆதரவுக் கரம் நீட்டிய மாபெரும் நிகழ்ச்சி மறக்கவொண்ணாதது.
இலங்கைத் தமிழர்களின் இன்னல்கள் நீங்க வேண்டுமானால் அங்கு உடனடியாகப் போர் நிறுத்தம் மேற்கொள்ளப்பட வேண்டும். இது உலகத் தமிழர்களின் ஏகோபித்த விருப்பமாகும். போர் நிறுத்தம் என்பது இரு தரப்பினராலும் ஒப்புக் கொள்ளப்பட்டு நிறைவேற்றப்பட வேண்டிய ஒன்று என தமிழக முதல்-அமைச்சர் வெளியிட்ட கருத்தைத் தொடர்ந்து, போர் நிறுத்தம் மேற்கொள்வதற்கு நாங்கள் தயார் என்று மற்றொரு தரப்பில் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இலங்கை அரசும் போர் நிறுத்த அறிவிப்பை வெளியிட்டு உடனடியாக படைகளைப் பழைய நிலைக்கு விலக்கிக் கொள்ள வேண்டும். அத்துடன் தமிழர்களின் கோரிக்கைகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி அரசியல் தீர்வு காண்பதற்கான முயற்சிகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்துகிறது.
மத்திய அரசை வலியுறுத்தி
இந்தியப் பேரரசு தனது செல்வாக்கைப் பயன்படுத்தி இலங்கை அரசை போர் நிறுத்தத்திற்கு இணங்க வைத்து தமிழர் பகுதிகளில் நிலையான அமைதியும், சக வாழ்வும் ஏற்படுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென்று தமிழ்நாடு சட்டப் பேரவை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது''
இவ்வாறு தீர்மானத்தை முதல்-அமைச்சர் கருணாநிதி முன்மொழிந்து வாசித்தார்.
ஒருமனதாக நிறைவேறியது
இந்த தீர்மானத்தை ஆதரித்து ரவிக்குமார் (விடுதலை சிறுத்தைகள்), மு.கண்ணப்பன் (ம.தி.மு.க.), வை.சிவபுண்ணியம் (இந்திய கம்னிஸ்டு), பாலபாரதி (மார்க்சிஸ்ட் கம்னிஸ்டு), ஜி.கே.மணி (பா.ம.க.), பீட்டர் அல்போன்ஸ் (காங்கிரஸ்), ஓ.பன்னீர்செல்வம் (அ.தி.மு.க.) ஆகியோர் பேசினார்கள். நிறைவாக முதல்-அமைச்சர் கருணாநிதி அனைவருக்கும் நன்றி தெரிவித்து பேசினார்.
பின்னர் இந்த தீர்மானம் குரல் ஓட்டெடுப்பு மூலம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து பல கோடிரூபாய் தப்பியது



சென்னை, நவ.12-
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தக்க சமயத்தில் தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால் இதில் பல கோடிரூபாய் தப்பியது.
7 மாடி கட்டிடம்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கி செயல்படுகிறது. சென்னை பாரிமுனை ராஜாஜி சாலை சந்திப்பு ஜாபர் சராங் தெருவில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. இது 7 மாடி கட்டிடம் ஆகும். இதன் தரை தளத்தில் பணப்பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளன. முதல் மாடியில் இருந்து 5-வது மாடி வரையில் வங்கியின் பிற அலுவலகங்கள் உள்ளன.
6 மற்றும் 7-வது மாடிகளில் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அலுவலகம் உள்பட உயர் அதிகாரிகளின் அறைகளும், அவர்களுக்கான உணவு விடுதிகளும் (மெஸ்) உள்ளன. இந்த 7 மாடிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்றனர்.
தீ விபத்து
நேற்று மாலை 6 மணி அளவில் வழக்கம்போல் அனைத்து ஊழியர்களும் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். வங்கியின் அறைகள் பூட்டப்பட்டன. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியது.
இதை அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் பார்த்தார். உடனே அவசர அவசரமாக வங்கியில் உள்ள லிப்ட் மூலம் 5-வது மாடிக்குச் சென்று பார்த்தார்.
அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
ராட்சத ஏணி
உடனே 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 5-வது மாடியில் தீ எரிந்ததால், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து ராட்சத தீயணைப்பு வண்டி (ஸ்கை லிப்ட்) வரவழைக்கப்பட்டது. அதில் ஏறி தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. தீயணைப்புப் பணியில் ஏறக்குறைய 50 வீரர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ 6-வது மாடிக்கு மளமளவென்று பரவியது.
போராடி அணைத்தனர்
தீயணைப்பு வீரர்கள் அங்கும் இங்கும் ஓடிச்சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு பகுதியில் அணைக்கும் சமயத்தில் மற்றொரு பகுதியில் தீ பிடித்தது. எனவே, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துக்கொண்டிருந்தனர்.
தீ விபத்து நடந்த தகவல் அறிந்ததும், இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மட்டுமின்றி வங்கி தீபிடித்து எரிவதைக் கேள்விப்பட்ட வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தீ பிடித்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ராஜாஜி சாலை முழுவதும் மக்கள் அங்கு கூடத்தொடங்கினார்கள். அவர்களை போலீசார் ஒதுங்கிச் செல்லும்படி கூறினார்கள்.
ஊழியர்களின் தஸ்தாவேஜூகள்
தீ பிடித்து எரிந்த மாடியில், இந்தியன் வங்கியில் அகில இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சர்வீஸ் ரிஜிஸ்டர் மற்றும் அவர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும், மேலும் நூற்றுக்கணக்கான கம்ப்ட்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. தீ விபத்தில், இவை அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
6-வது மாடியிலும் முக்கிய தஸ்தாவேஜூகள் வைக்கப்பட்டு இருந்தன. அவைகளும் தீக்கு இரையாயின. தீவிபத்து நடந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இந்த புகை மூட்டத்துக்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
7-வது மாடிக்கும் தீ பரவியது
இரவு 9 மணிக்குப்பின் 6-வது மாடியில் பிடித்த தீ 7-வது மாடிக்குப்பரவியது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு அறைக்குள் செல்ல முயன்ற போது, கண்ணாடி உடைந்து காயம் ஏற்பட்டது. உடனே, அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

2009-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிப்பு

சென்னை, நவ.12-
2009-ம் ஆண்டுக்கான அரசு விடுமுறை நாட்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. அடுத்த வருடத்தில் 2 தினங்கள் முகரம் பண்டிகை வருகிறது.
விடுமுறை தினங்கள்
தமிழக அரசு 2009-ம் ஆண்டுக்கான விடுமுறை நாட்களை அறிவித்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-
புத்தாண்டு தினம் 1.1.2009 (வியாழக்கிழமை), முகரம் 8.1.2009 (வியாழக்கிழமை), தமிழ் புத்தாண்டு - பொங்கல் 14.1.2009 (புதன்கிழமை), திருவள்ளுவர் தினம் 15.1.2009 (வியாழக்கிழமை), உழவர் திருநாள் 16.1.2009 (வெள்ளிக்கிழமை), குடியரசு தினம் 26.1.2009 (திங்கட்கிழமை)
மிலாதுநபி 10.3.2009 (செவ்வாய்க்கிழமை), தெலுங்கு புத்தாண்டு 27.3.2009 (வெள்ளிக்கிழமை), வங்கிகள் ஆண்டு கணக்கு நிறைவு நாள் 1.4.2009 (புதன்கிழமை), மகாவீர் ஜெயந்தி 7.4.2009 (செவ்வாய்க் கிழமை),
ஆயுத பூஜை
பெரிய வெள்ளி 10.4.2009 (வெள்ளிக்கிழமை), அம்பேத்கார் பிறந்த நாள் 14.4.2009 (செவ்வாய்க்கிழமை), மே தினம் 1.5.2009 (வெள்ளிக்கிழமை), கிருஷ்ண ஜெயந்தி 13.8.2009 (வியாழக்கிழமை), சுதந்திரதினம் 15.8.2009 (சனிக்கிழமை), விநாயகர் சதுர்த்தி 23.8.2009 (ஞாயிற்றுக்கிழமை), ரம்ஜான் 21.9.2009 (திங்கட்கிழமை), ஆயுதபூஜை 27.9.2009 (ஞாயிற்றுக்கிழமை), விஜயதசமி 28.9.2009 (திங்கட்கிழமை), வங்கிகள் அரையாண்டு கணக்கு நிறைவு 30.9.2009 (புதன்கிழமை),
காந்தி ஜெயந்தி 2.10.2009 (வெள்ளிக்கிழமை), தீபாவளி 17.10.2009 (சனிக்கிழமை), பக்ரித் 28.11.2009 (சனிக்கிழமை), கிறிஸ்துமஸ் 25.12.2009 (வெள்ளிக்கிழமை), முகரம் 28.12.2009 (திங்கட்கிழமை)
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

செவ்வாய், 11 நவம்பர், 2008

"க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழ்

அன்புசால் தமிழருக்கு....வணக்கம்.கம்யூனிகேஷன்(ஸ்) பாயிண்ட்" - தமிழ் வார செய்திதாள்,மற்றும் "க்ரைம் பாயிண்ட்" புலனாய்வு வாரஇதழின் இணையதளம் இது.2008, நவம்பர் 27-ம், தேதி முதல் தமிழகமெங்கும் அச்சில் ஒரே பதிப்பாக வெளிவரவிருக்கிறது. விலை ரூபாய் 8 /-. உலக நிகழ்வுகள் அனைத்தையும் அறிய... . .தினம் இந்த இணையதளத்தை பார்க்கவும்