திங்கள், 17 நவம்பர், 2008

சென்னை பெண் என்ஜினீயர் கொலை செய்யப்பட்டது எப்படி? கணவர் நடத்திய நாடகம் அம்பலம்


சென்னை, நவ.18-
சென்னையை சேர்ந்த பெண் என்ஜினீயர் ஒருவர் பெங்களூரில் கொடூரமாக கொலை செய்யப்பட்டது பற்றி திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மனைவியை கொன்றுவிட்டு நாடகமாடிய கணவர் கைது செய்யப்பட்டார்.

சினிமாவில் நடக்கும் திகில் சம்பவம் போன்று நடந்துள்ள இந்த கொடூர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-
சென்னை திருவல்லிக்கேணி தேரடி தெருவை சேர்ந்தவர் ரங்கன் (வயது 56). இவர் சொந்தமாக டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். அகில இந்திய வானொலியில் செய்தி வாசிப்பவராகவும் இவர் பணியாற்றியுள்ளார். இவரது மனைவி பெயர் மைதிலி.
இவர்களுக்கு லட்சுமி (24), சரஸ்வதி (22) என்ற 2 மகள்கள் இருந்தனர். லட்சுமி சாப்ட்வேர் என்ஜினீயரிங் படித்துவிட்டு பெங்களூரில் உள்ள ஐ.பி.எம். கம்ப்ட்டர் கம்பெனியில் பணியாற்றி வந்தார். அவருக்கு மாதம் ரூ.60 ஆயிரம் சம்பளம். 2-வது மகள் சரஸ்வதி சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் எம்.எஸ்சி., பட்டமேற்படிப்பு படித்து வருகிறார். ரங்கன் தனது 2 மகள்களையும் மிகவும் செல்லமாக பாசத்தை ஊட்டி வளர்த்து வந்தார்.
இந்த நிலையில், லட்சுமிக்கு திருமணம் செய்ய முடிவு செய்து மாப்பிள்ளை பார்த்தனர். திருமண இணையதளம் ஒன்றில் வந்த விளம்பரத்தை பார்த்து லட்சுமிக்கு மாப்பிள்ளையை முடிவு செய்தனர். மாப்பிள்ளையின் பெயர் மனோஜ்குமார் (27). இவர், சென்னை வேளச்சேரி விஜயநகரை சேர்ந்தவர். இவரது தந்தை சுரேஷ் வங்கி ஒன்றில் சீனியர் மானேஜராக பணியாற்றுகிறார். தாயார் பெயர் வைஜெயந்திமாலா. ரஞ்சனி என்ற ஒரு சகோதரி இருக்கிறார். மனோஜர்குமாரும் சாப்ட்வேர் என்ஜினீயராக லட்சுமி வேலைபார்த்த ஐ.பி.எம். கம்ப்ட்டர் நிறுவனத்தில் வேலை பார்த்தார். அவருக்கு மாதம் ரூ.2 லட்சம் சம்பளம் ஆகும். முறைப்படி ஜாதகம் பார்த்து மாப்பிள்ளையையும் நேரடியாக சந்தித்து இரு வீட்டு ஆசீர்வாதத்தோடு கடந்த ஆகஸ்டு மாதம் 26-ந் தேதி அன்று திருமணம் ஜாம், ஜாம் என்று நடந்தது.
ரங்கனும் லட்சக்கணக்கில் பணத்தை செலவழித்து திருமணத்தை வெகு விமரிசையாக நடத்தினார். திருமணத்துக்கு பிறகு மனோஜ்குமாரும், லட்சுமியும் பெங்களூர் முருகேஷ்பாலையா பகுதியில் வாடகை வீட்டில் குடி அமர்ந்தார்கள். இருவரும் இல்லற வாழ்க்கையை இனிதாக நடத்தி வந்தனர். லட்சுமி, சென்னையில் இருக்கும் தன்னுடைய பெற்றோரிடம் தினமும் போன் செய்து பேசுவார். கணவரோடு மகிழ்ச்சியாக குடும்பம் நடத்துவதாக பெற்றோரிடம் சொல்லி பெருமைப்படுவார். கடந்த தீபாவளி பண்டிகை அன்று லட்சுமியும், மனோஜ்குமாரும் சென்னை வந்தனர். தீபாவளி பண்டிகையை சென்னையில் கொண்டாடிவிட்டு மீண்டும் பெங்களூர் சென்றனர்.

இந்த நேரத்தில் கடந்த நவம்பர் மாதம் 7-ந் தேதி அன்று லட்சுமி பெங்களூரிலிருந்து சென்னையில் உள்ள தனது தாயார் மைதிலியோடு போனில் பேசிக்கொண்டிருந்தார். தனது மாமனார் தனக்கு `ஸ்கூட்டி' வாங்கி தருவதற்காக பெங்களூர் வர உள்ளார் என்றும், அவருக்கு விருப்பமான கேழ்வரகு தோசை சுட்டு கொடுக்கப்போகிறேன் என்றும் லட்சுமி தனது தாயாரிடம் போனில் மகிழ்ச்சி பொங்க பேசிக்கொண்டிருந்தார். அப்போது பிற்பகல் 1 மணி இருக்கும். போனில் பேசிக்கொண்டிருக்கும்போதே கதவை யாரோ தட்டுகிறார்கள் என்றும், அப்புறம் பேசுகிறேன் என்றும் லட்சுமி திடீரென்று போனை வைத்துவிட்டார்.
இதற்கிடையில் லட்சுமி ஏன் போனை திடீரென்று வைத்தாள் என்று பலமுறை பெங்களூருக்கு தொடர்புகொண்டு அவர் பெற்றோர் பேசினார்கள். ஆனால் போனை எடுத்து யாரும் பேசவில்லை. இதனால் லட்சுமியின் பெற்றோர் பதட்டம் அடைந்தனர். இந்த நிலையில் இரவு 7.30 மணியளவில் மனோஜ்குமார் அழுதுகொண்டே போனில் பேசினார். லட்சுமி வீட்டில் தனியாக இருக்கும்போது யாரோ மர்ம மனிதர்கள் புகுந்து அவளை அடித்து போட்டுவிட்டு நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று கூறிவிட்டு போனை வைத்துவிட்டார்.

போனில் வந்த செய்தியை கேட்டு லட்சுமியின் பெற்றோர் நடுங்கி போனார்கள். மீண்டும் பெங்களூருக்கு போனில் தொடர்பு கொண்டு பேசியபோது லட்சுமியை படுகொலை செய்துவிட்டு கொள்ளையர்கள் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்றுவிட்டனர் என்று மனோஜ்குமார் கூறினார். இந்த துயர செய்தியை கேட்டு லட்சுமியின் பெற்றோர் மயங்கி விழுந்தார்கள். அலறி அடித்துக்கொண்டு பெங்களூர் விரைந்தனர்.
பெங்களூருக்கு போய் மகளின் பிணத்தை பார்த்து கதறி அழுதனர். பிரேத பரிசோதனைக்கு பிறகு லட்சுமியின் பிணம் சென்னை கொண்டுவரப்பட்டது. லட்சுமிக்கு இறுதி சடங்குகளும் நடந்தன. அந்த நிமிடம் வரை மனோஜ்குமார் மீது லட்சுமியின் பெற்றோருக்கு எந்த வித சந்தேகமும் இல்லை. தனது மகள் கொள்ளையர்களால் கொடூரமாக கொலை செய்யப்பட்டுவிட்டாள் என்று லட்சுமியின் பெற்றோர் நினைத்தனர்.

லட்சுமியின் கொலை தொடர்பாக பெங்களூர் எச்.ஏ.எல். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். போலீஸ் விசாரணையில் கொள்ளையர்கள் யாரும் வீட்டுக்கு வந்த தடயம் இல்லை. அக்கம் பக்கத்தினரும் கொள்ளையர்கள் யாரும் வந்ததாக தெரிவிக்கவில்லை. லட்சுமி அணிந்திருந்த மோதிரத்தில் தலைமுடி இருந்தது.
மேலும் மனோஜ்குமாரின் நடவடிக்கை மீதும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது. லட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்தது பிற்பகல் 1 மணியிலிருந்து மாலை 4 மணிக்குள் என்று பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டிருந்தது. மனோஜ்குமார் இரவு 8.30 மணிக்கு மேல்தான் போலீசில் புகார் கொடுத்தார். புகாரில் அவர் கூறும்போது இரவு 7.30 மணிக்கு வீட்டுக்கு வந்தபோது லட்சுமி கொலை செய்யப்பட்டு கிடப்பதை பார்த்ததாக கூறினார். அவர் கொடுத்த புகாரிலும் போலீசாருக்கு சந்தேகம் எழுந்தது.

மனோஜ்குமாரிடம் விசாரித்தபோது கம்பெனியில் வேலைபார்க்கும்போது இடையில் வெளியில் எங்கும் போகவில்லை என்றும், இரவு 7 மணிக்குமேல் தான் கம்பெனியை விட்டு புறப்பட்டதாகவும் கூறியிருந்தார். அவர் வேலைபார்த்த கம்ப்ட்டர் நிறுவனத்துக்கு சென்று போலீசார் விசாரித்தனர். அங்கு கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. கண்காணிப்பு கேமராவில் பதிவாகியுள்ள காட்சிகளை போலீசார் பரிசோதித்து பார்த்தனர்.
அதில், மனோஜ்குமார் பிற்பகல் 12.30 மணியளவில் கம்பெனியை விட்டு வெளியில் செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. நாங்கள் விசாரித்தபோது வெளியே போகவில்லை என்றும் சொன்னீர்கள், ஆனால் கண்காணிப்பு கேமராவில் நீங்கள் 12.30 மணிக்கு வெளியே சென்ற காட்சி பதிவாகியுள்ளது என்று மனோஜ்குமாரிடம் போலீசார் கிடுக்கிபிடி போட்டனர். இதற்கு பதில் சொல்ல முடியாமல் மனோஜ்குமார் திணறினார்.

இதற்கிடையில், லட்சுமியின் மோதிரத்தில் சிக்கியிருந்த முடி, மனோஜ்குமாரின் தலை முடி என்று தடயஅறிவியல் துறையினர் உறுதி செய்தனர். இவற்றையெல்லாம் வைத்து லட்சுமியை கொன்ற மாபாதக கொலைகாரன் மனோஜ்குமார்தான் என்று போலீசார் முடிவு செய்தனர். ஆதாரத்தோடு சிக்கிக்கொண்டதால் மனோஜ்குமாரும், லட்சுமியை நான் தான் கொலை செய்தேன் என்று உண்மையை ஒப்புக்கொண்டுவிட்டார்.
மனோஜ்குமாரின் வாக்குமூலத்தை கேட்டு போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். மனோஜ்குமார் உடனடியாக கைது செய்யப்பட்டார். 15 நாள் நீதிமன்ற காவலில் பெங்களூர் ஜெயிலில் அடைக்கப்பட்டார்.

லட்சுமி கொலை செய்யப்பட்ட சோகத்தை தாங்கமுடியாமல் இருந்த அவரது பெற்றோருக்கு மருமகன் தான் கொலையாளி என்ற தகவல் தெரிந்ததும் ஒரேயடியாக இடிந்துபோனார்கள். பெங்களூர் போலீசார் சென்னை வந்து லட்சுமியின் பெற்றோரிடமும், மனோஜ்குமாரின் பெற்றோரிடமும் விசாரணை நடத்திவிட்டு சென்றனர்.

மனோஜ்குமாரின் கள்ளக்காதல் விவகாரம் தான் அவர் தனது மனைவியை கொலை செய்ய தூண்டுதலாக இருந்துள்ளது என்று போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது. திருமணம் நடந்த 75 நாளில் மனைவியை தீர்த்துக்கட்டிவிட்டு அவர் ஜெயிலுக்கும் போய்விட்டார். லட்சுமி கொலை செய்யப்பட்ட சம்பவம் பெங்களூர் நகர மக்களையே நெஞ்சை உருக வைத்துள்ளது.

கருத்துகள் இல்லை: