ஞாயிறு, 23 நவம்பர், 2008

கோவையில் துணிகரம் கல்லூரி மாணவி-வாலிபரை கடத்தி சென்று நிர்வாண படம் எடுத்து மிரட்டல் ரூ.5 லட்சம் கேட்ட கும்பலைச் சேர்ந்த 3 பேர் கைது

கோவை, நவ.24-
கோவையில் கல்லூரி மாணவி-வாலிபரை ஒரு கும்பல் கடத்திச்சென்று நிர்வாண படம் எடுத்து ரூ.5 லட்சம் கேட்டு மிரட்டியது. இந்த கும்பலைச் சேர்ந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
இந்த துணிகர சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

கோவை ரெட்பீல்டு, வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த, 24-வயது மாணவி ஒருவர் தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. 2-வது ஆண்டு படித்து வந்தார். அவருக்கும், சாய்பாபா காலனியை சேர்ந்த வாலிபர் விஜய் ஆனந்த் (34) என்பவருக்கும் பழக்கம் ஏற்பட்டது. விஜய் ஆனந்துக்கு ஏற்கனவே திருமணம் ஆகிவிட்டது. இருந்தாலும் மாணவியிடம் நெருங்கி பழகினார். இந்த நிலையில் விஜய் ஆனந்தும், கல்லூரி மாணவியும் ரேஸ்கோர்ஸ், தாமஸ் பார்க் பகுதியில் உள்ள `காபி பார்' அருகில் காரில் உட்கார்ந்து பேசிக்கொண்டு இருந்தனர்.

அப்போது ஒரு காரில் வந்த 7 பேர் கொண்ட கும்பல், இந்த ஜோடியை சூழ்ந்தனர். தங்களை போலீஸ் என்று கூறிய, அந்த நபர்கள் ``போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச் சென்று உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும். எனவே எங்களுடன் வருங்கள்'' என்று கூறினார்கள். இதனால் அந்த ஜோடியினர் அச்சம் அடைந்து அவர்கள் கூறியபடி தங்களது காரை ஓட்டிச்சென்றனர். அந்த காருக்குள் கடத்தல் கும்பலை சேர்ந்த சிலரும் ஏறிக்கொண்டனர்.

பின்னர் 2 கார்களும் போலீஸ் நிலையத்துக்கு செல்லாமல், கோவை அருகே உள்ள சூலூரை நோக்கி சென்றது. அப்போது இதுகுறித்து கேட்ட, இளம் ஜோடியை ஆயுதங்களால் மிரட்ட தொடங்கினார்கள். பின்னர் அவர்களை சூலூர் பகுதியில் உள்ள ஒரு வீட்டுக்கு அழைத்துச் சென்று அடைத்து வைத்தனர். வாலிபர் விஜய் ஆனந்தையும், மாணவியையும் நிர்வாணமாக்கி செல்போன் மற்றும் வீடியோ மூலம் படம் பிடித்ததாக தெரிகிறது. இந்த படத்தை இருவரின் பெற்றோருக்கும் அனுப்பி வைக்கப்போவதாகவும், இன்டர்நெட்டில் வெளியிடப்போவதாகவும் மிரட்டினார்கள். மேலும் மாணவியிடமும் தவறாக நடக்க முயன்றுள்ளனர்.
``உங்களை பற்றிய விவரங்களை வெளியிடாமல் இருக்க வேண்டுமானால் ரூ.5 லட்சம் தரவேண்டும்'' என்று விஜய் ஆனந்திடம் அந்த கும்பல் மிரட்டியது.
இதனால் அதிர்ச்சி அடைந்த விஜய் ஆனந்த், கோவை சாய்பாபா காலனியில் உள்ள தனது வீட்டுக்கு சென்று பணம் எடுத்து தருவதாகவும், எனவே தன்னை அழைத்துச் செல்லுமாறும் கூறினார்.

இதைத்தொடர்ந்து அந்த கும்பலை சேர்ந்த சிலர் ஹக்கீம்(30) என்பவன் தலைமையில் விஜய் ஆனந்தை அழைத்துக்கொண்டு, காரில் சாய்பாபாகாலனிக்கு வந்தனர். விஜய் ஆனந்த் தனது வீட்டுக்கு வந்ததும், போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்து கடத்தப்பட்ட விவரத்தை தெரிவித்தார். இதைத்தொடர்ந்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து வந்து, வாலிபர் விஜய் ஆனந்தை கடத்தி வந்த, ஹக்கீமை மடக்கிப்பிடித்தனர். பின்னர் மாணவியை மீட்பதற்காக இரவோடு இரவாக சூலூருக்கு சென்றனர். போலீஸ் வந்ததை பார்த்ததும், அங்கிருந்த கடத்தல் கும்பலை சேர்ந்தவர்கள் தப்பி ஓடிவிட்டனர். பின்னர் கல்லூரி மாணவியை மீட்டு ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

ஹக்கீமிடம் இருந்த செல்போனில் பதிவான போன் நம்பர்களை வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
கைதான ஹக்கீம் மீது கற்பழிப்பு, கத்தி முனையில் மிரட்டல், கடத்தல் உள்பட 11 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதற்கிடையில் இந்த கடத்தலில் ஹக்கீமுக்கு உடந்தையாக இருந்ததாக, குனியமுத்தூரை சேர்ந்த மணிகண்டன் (27), ரத்தினபுரியை சேர்ந்த கார்த்தி என்ற கார்த்திகேயன் (24) ஆகிய 2 பேரை போலீசார் நேற்று மடக்கி பிடித்தனர். பெயிண்டராக வேலை பார்த்து வந்த இவர்கள் இருவர் மீதும் வழக்கு பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இவர்களிடம் நடத்திய விசாரணையில் இந்த கும்பலைச் சேர்ந்த ஜார்ஜ், அனீஷ், ரமேஷ் ஆகிய 3 பேரை பற்றிய தகவல் கிடைத்து இருப்பதாகவும், அவர்களை விரைவில் பிடித்து விடுவோம் என்றும் போலீஸ் அதிகாரிகள் தெரிவித்தனர்.

கைதான ஹக்கீம் என்ற ஜிம் ஹக்கீம் மீது பல்வேறு வழக்குகள் உள்ளன. ஏராளமான காதல் ஜோடிகளை கடத்தி, படம் பிடித்து பணம் சம்பாதிப்பதை தொழிலாக கொண்டு செயல்பட்டதும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதற்காக சூலூர் பகுதியில் புதிதாக கட்டப்பட்டு பாதியில் விடப்பட்ட வீட்டை பயன்படுத்தி வந்துள்ளனர். இந்த கடத்தல் கும்பலுக்கு சொந்தமாக கார் மற்றும் வீடியோ காமிராக்கள், காமிரா செல்போன்கள் இருப்பதும் தெரியவந்துள்ளது.
நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள, ஹக்கீமை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்கவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

கருத்துகள் இல்லை: