வெள்ளி, 21 நவம்பர், 2008

சென்னையில் நடந்த கொடூர சம்பவம்: ஒரே வீட்டில் 3 பேர் கொலையில் மர்மம் நீடிக்கிறது




சென்னை, நவ.22-
சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரியும், அவரது மனைவியும், வேலைக்கார பெண்ணும் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில், கொலையாளிகள் பற்றி இன்னும் துப்பு கிடைக்கவில்லை. மர்மம் நீடிக்கிறது. கொலையாளிகள் யார்? என்று கண்டுபிடிக்க 4 கோணங்களில் போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

சென்னையில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன், அவரது மனைவி கஸ்தூரி, வேலைக்கார பெண் அன்பரசி ஆகிய 3 பேரும் ஒரே வீட்டில் கொடூரமாக கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் கொலையாளிகள் யார் என்று துப்பு துலக்கி கைது செய்ய 10 தனிப்படைகள் அமைத்து கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். கூடுதல் கமிஷனர் விஸ்வநாதன், இணை கமிஷனர் குணசீலன் ஆகியோருடைய நேரடி மேற்பார்வையில், துணை கமிஷனர்கள் முத்துசாமி, ஸ்ரீதர், உதவி கமிஷனர் சேது ஆகியோருடைய தலைமையில் 10 தனிப்படையினரும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர்.
3 பேரின் பிணங்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. பிரேத பரிசோதனை அறிக்கையின்படி நள்ளிரவுக்கு பிறகு தான் 3 பேரும் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
ஏனென்றால் 3 பேரும் இரவில் சாப்பிட்ட உணவு வயிற்றுக்குள் ஜீரணமாகி இருந்தது. அதை அடிப்படையாக வைத்து நள்ளிரவுக்கு மேல் இந்த படுகொலைகள் நடந்திருக்கலாம் என்று டாக்டர்கள் கூறியுள்ளனர்.
கொலை நடந்த வீட்டில் கொலையாளிகள் பயன்படுத்திய கத்தி கைப்பற்றப்பட்டது. அந்த கத்தியை ஆராய்ந்து பார்த்த டாக்டர்கள் அதை வைத்து தான் 3 பேருடைய கழுத்தும் அறுக்கப்பட்டு கொலைகள் நடந்துள்ளது என்றும் உறுதி செய்துள்ளனர். 3 பேரின் கழுத்தும் வலது பக்கமே அறுபட்டுள்ளது.
கொலையாளி இடது கையால் தலையை பிடித்துக்கொண்டு, வலது கையால் கத்தியை வைத்து கழுத்தை அறுத்துள்ளான்.


கொலை செய்யப்பட்ட சரவணனுக்கும், அவரது மனைவி கஸ்தூரிக்கும் இறுதி சடங்குகள் நேற்று நடந்தன. இறுதி சடங்கின்போது உறவினர்கள் கதறி அழுத காட்சி நெஞ்சை உருக்குவதாக இருந்தது. இறுதி சடங்குகள் முடிந்துவிட்டதால், போலீஸ் விசாரணையும் நேற்று பிற்பகலில் இருந்து தீவிரமானது.
ஏற்கனவே தியாகராயநகரில் நடந்த மலர்விழி என்ற பெண்ணின் கொலை வழக்கிலும், கோடம்பாக்கத்தில் நடந்த சந்திரா என்ற பெண்ணின் கொலை வழக்கிலும், கே.கே.நகரில் மத்திய அரசு ஊழியர்கள் குடியிருப்பில் நடந்த பரிமளா என்ற பெண்ணின் கொலை வழக்கிலும் குற்றவாளிகள் கைது செய்யப்படவில்லை. நெருங்கிய உறவினர்களே அந்த படுகொலைகளை செய்திருந்தனர். 2004-ம் ஆண்டு நடந்த இந்த கொலை வழக்குகளில் குற்றவாளிகள் பிடிபடாமலேயே மூடப்பட்டுவிட்டன.
அதுபோன்ற நிலைமை இந்த வழக்கிலும் ஏற்பட்டுவிடக்கூடாது என்றும், குற்றவாளிகளை கண்டிப்பாக பிடித்தே தீரவேண்டும் என்றும் கமிஷனர் ராதாகிருஷ்ணன் கண்டிப்பான உத்தரவு போட்டுள்ளார். இதனால் உயர் போலீஸ் அதிகாரிகள் கே.கே.நகர் போலீஸ் நிலையத்திலேயே முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

இதுவரை உறவினர்கள், நண்பர்கள், சந்தேக நபர்கள் போன்ற 100 பேரிடம் அவர்களின் கைரேகைகளை பதிவு செய்து விசாரணை நடந்துள்ளது. சொத்துக்காக கூலிப்படையை அனுப்பி இந்த கொலை நடந்ததா அல்லது உறவினர்களே இந்த படுபாதக கொலைகளை செய்தார்களா, தொழில் ரீதியாகவோ, முன்பகை காரணமாகவோ இந்த கொலை சம்பவம் நிகழ்ந்ததா? என்ற 4 கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இதுவரை நடந்த விசாரணையில் கொலையாளிகள் பற்றி ஒரு சிறு தடயம்கூட கிடைக்கவில்லை. தொடர்ந்து மர்மம் நீடிக்கிறது. சைதாப்பேட்டையில் அன்னபூரணி நடுநிலைப்பள்ளி என்ற பெயரில் அரசு உதவி பெறும் பள்ளிக்கூடம் ஒன்றை அறக்கட்டளை மூலம் சரவணன் நடத்தி வந்தார்.

இந்த அறக்கட்டளைக்கு சொந்தமாக கொத்தவால்சாவடியில் பெரிய குடோன் ஒன்று உள்ளது. அந்த குடோன் வாடகைக்கு விடப்பட்டிருந்தது. குறைவான வாடகை கொடுத்ததால், வாடகைதாரரை காலி செய்யும்படி சரவணன் வற்புறுத்தி வந்துள்ளார்.
இதனால் வாடகைதாரருக்கும், சரவணனுக்கும் மோதல் இருந்து வந்துள்ளது. இந்த மோதலில் கொலை நடந்துள்ளதா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரித்து வருகிறார்கள். விசாரணை சரியான பாதையில் செல்கிறது என்றும், கண்டிப்பாக குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என்றும் உயர் போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: