வெள்ளி, 21 நவம்பர், 2008

போலி ஆவணங்களை காட்டி தனியார் மருத்துவ கல்லூரியை ரூ.1000 கோடிக்கு விற்க முயன்ற 7 பேர் கைது




ஆலந்தூர், நவ.21-
போலி ஆவணங்களை காட்டி தனியார் மருத்துவ கல்லூரியை ரூ.1000 கோடிக்கு அதன் நிர்வாகியிடமே விற்க முயன்ற பெண் உள்பட 7 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

சென்னை மீனம்பாக்கத்தில் பெட்ரோல் விற்பனை நிலையம் நடத்தி வருபவர் ராஜகோபால். இவர் புறநகர் போலீஸ் கமிஷனர் எஸ்.ஆர்.ஜாங்கிட்டிடம் ஒரு புகார் மனு தந்தார்.
அதில், ``புதுச்சேரியில் உள்ள மகாத்மா காந்தி மருத்துவ கல்லூரி எனக்கு சொந்தமானது. போலி ஆவணங்களை காட்டி சிலர் என்னிடமே இந்த கல்லூரியை விற்க வந்தனர். அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும்'' என்று கோரியிருந்தார். இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க புறநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசுக்கு உத்தரவிட்டார்.

போலீஸ் உதவி கமிஷனர் நவநீதகிருஷ்ணன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ஆரோக்கிய பிரகாஷம், தேவேந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் ஷாலினி, தேவி கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.
இந்த தனிப்படையினர் அந்த புரோக்கர் கும்பலுடன் தொடர்பு கொண்டு பேசினார்கள். அவர்கள், ``புதுச்சேரியில் உள்ள மருத்துவ கல்லூரி மற்றும் மருத்துவமனை 46 ஏக்கரில் உள்ளது. இதன் மதிப்பு ரூ.1000 கோடி ஆகும்'' என்று தெரிவித்தனர். ``அந்த இடத்திற்கு அட்வான்ஸ் தொகை தருகிறோம். பரங்கிமலையில் உள்ள ஓட்டலுக்கு வாருங்கள்'' என்று போலீசார் கூறினார்கள்.

உடனே ஒரு பெண் உள்பட 4 பேர் ஓட்டலுக்கு வந்தபோது போலீசார் மடக்கி பிடித்தனர். விசாரணையில் புதுச்சேரி குமரன் நகரை சேர்ந்த வெங்கட்ராமன் (வயது 54) என்பவர் தலைமையில் புரோக்கர் கும்பல் செயல்பட்டு போலி ஆவணங்களுடன் மருத்துவ கல்லூரியை விற்க முயன்றதை போலீசார் கண்டுபிடித்தனர்.
இதைத்தொடர்ந்து வெங்கட்ராமன் மற்றும் அவருடன் வந்த மற்ற புரோக்கர்கள் புதுக்கோட்டை கந்தர்வகோட்டை பாக்கியராஜ் (60), புதுச்சேரி எழில் நகரை சேர்ந்த ரமேஷ் (50) மற்றும் புதுச்சேரி வில்லியனூர் வசந்த் நகரை சேர்ந்த பெண் அஸ்மத் (43) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இந்த கும்பல் ஸ்ரீபெரும்புதூரில் அறிஞர் அண்ணா பொறியியல் கல்லூரி, ஆந்திரா காக்கிநாடாவில் உள்ள ஆனந்த கல்லூரி ஆகியவை விற்பனைக்கு உள்ளதாக கூறி அதன் போலியான ஆவணங்களை வைத்திருந்தனர். இவர்கள் இந்த இடங்களை விற்பனை செய்வதாக கூறி அட்வான்ஸ் தொகையாக லட்சக்கணக்கான ரூபாயை பெற்றுக் கொண்டு தலைமறைவாகி விடுவார்கள் என்பது விசாரணையில் தெரிய வந்தது.
இவர்கள் அளித்த தகவலின் பேரில் இந்த மோசடி கும்பலை சேர்ந்த மற்ற புரோக்கர்களான பிரபாகரன் (54), கோவை காரமடை ராஜகோபால் (57), திண்டுக்கல் கோவிந்தபுரம் பழனிச்சாமி (60) ஆகியோரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து மாருதி காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

கருத்துகள் இல்லை: