வெள்ளி, 14 நவம்பர், 2008

கேளம்பாக்கம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் மாணவர்கள் பயங்கர மோதல்

திருப்போரூர், நவ.15-
கேளம்பாக்கம் அருகே என்ஜினீயரிங் கல்லூரி விடுதியில் தமிழகம் மற்றும் வெளிமாநில மாணவர்களுக்கு இடையே நடந்த கோஷ்டி மோதலில், 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இதையொட்டி 17 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

சென்னை, அம்பேத்கார் சட்டக்கல்லூரி மாணவர்களுக்கு இடையே சமீபத்தில் நடைபெற்ற கோஷ்டி மோதல் தமிழகத்தை உலுக்கிய நிலையில், சென்னை அருகே உள்ள என்ஜினீயரிங் கல்லூரி மாணவர்களுக்கு இடையேயும் பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது. அதுபற்றிய விவரம் வருமாறு:-
சென்னை, கேளம்பாக்கத்தை அடுத்த படூரில், பழைய மாமல்லபுரம் ராஜீவ்காந்தி சாலையில் இந்துஸ்தான் பல்கலைக்கழம் உள்ளது. இங்கு தமிழ்நாட்டில் மட்டுமின்றி வெளி மாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலும் இருந்து வந்த ஏராளமான மாணவ-மாணவிகள் தங்கி படித்து வருகிறார்கள்.
பல்கலைக்கழக வளாகத்தில் உள்ள விடுதி மாணவர்களுக்கு நேற்று முன்தினம் இரவு உணவாக சிக்கன் பிரியாணி வழங்கப்பட்டது. பிரியாணியில் கோழி இறைச்சிக்கு பதிலாக மாட்டு இறைச்சி இருந்ததாக கூறி, வெளி மாநிலங்களை சேர்ந்த சில மாணவர்கள் விடுதி வார்டனிடம் தகராறு செய்ததாக கூறப்படுகிறது.
அவர்களை தட்டிக்கேட்ட தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், "நாங்களும்தானே சாப்பிடுகிறோம். பிரியாணியில் மாட்டு இறைச்சி பயன்படுத்தப்படவில்லை'' என்று வார்டனுக்கு ஆதரவாக பரிந்து பேசினார்கள்.
இதனால் இரு தரப்பினருக்கும் இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டது. ஒருவரை ஒருவர் தாக்கி கைகலப்பில் ஈடுபட்டனர். பின்னர் ஒருவழியாக சமாதானம் ஏற்பட்டு மாணவர்கள் கலைந்து சென்றனர்.
நள்ளிரவு 12 மணி அளவில், வெளிமாநில மாணவர்கள் உருட்டுக்கட்டை, தடி போன்ற ஆயுதங்களுடன் கும்பலாக சென்று தமிழக மாணவர்களை தேடிப்பிடித்து சரமாரியாக தாக்கினார்கள்.
இதில் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தேவநாதன் (தகவல் தொழில்ட்ப பிரிவு), தேனி மாவட்டத்தை சேர்ந்த முருகேசன் (ஏரோநாட்டிக்கல்ஸ்), கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த சாமுவேல் (மெக்கானிக்கல் என்ஜினீயரிங்) ஆகிய 3 மாணவர்கள் படுகாயம் அடைந்தனர். இவர்கள் மூவரும் முதலாம் ஆண்டு மாணவர்கள். அவர்களை தாக்கியவர்களும் முதலாம் ஆண்டு மாணவர்கள்தான்.
தகவல் அறிந்ததும் போலீசார் கல்லூரி விடுதிக்கு சென்று படுகாயம் அடைந்த 3 மாணவர்களை மீட்டு, கேளம்பாக்கம் செட்டிநாடு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
அவர்களை தாக்கியதாக வெளி மாநிலங்களை சேர்ந்த ரோஹித் (வயது 18), பிரதீப்குமார் (18), நிதீஷ்குமார் (19), அபிலாஷ் (19) உள்பட 18 மாணவர்களை போலீசார் கைது செய்தனர்.
அதற்கு கண்டனம் தெரிவித்து வெளிமாநில மாணவர்கள் நேற்று காலை பல்கலைக்கழக வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். உள்ளிருப்பு போராட்டத்திலும் மாணவர்கள் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தினால் கேளம்பாக்கம் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
மாணவர்கள் போராட்டத்தை தொடர்ந்து, தாக்குதலில் ஈடுபட்ட முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு காலவரையற்ற விடுமுறை அளிக்கப்பட்டது. மேலும் மோதல் ஏற்படாமல் தடுக்க கல்லூரியை சுற்றி பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு உள்ளது.

கருத்துகள் இல்லை: