புதன், 19 நவம்பர், 2008

தைரியம் இருந்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பாருங்கள் கே.வி.தங்கபாலு பேச்சு



சென்னை, நவ.20-
தைரியம் இருந்தால் தடை செய்யப்பட்ட இயக்கத்தை அரசியல் கட்சிகள் ஆதரித்து பார்க்கலாம் என்றும், சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் கே.வி.தங்கபாலு பேசினார்.

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் 92-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் சார்பில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவுக்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.வி.தங்கபாலு தலைமை தாங்கினார். தொண்டர்கள் அனைவரும் வன்முறை எதிர்ப்பு உறுதிமொழியை எடுத்து கொண்டனர்.
விழாவில் கே.வி.தங்கபாலு பேசியதாவது:-

இலங்கை பிரச்சினை என்றால், காங்கிரஸ் கட்சியையும் அதன் நிலைப்பாட்டையும், மத்திய அரசையும் விமர்சிப்பவர்களுக்கு ஒன்று சொல்கிறேன். இந்தியாவில் இந்திரா காந்தி மட்டுமே இலங்கையில் இனப்படுகொலை நடக்கிறது என்று முதலில் கூறியவர். இலங்கையில் தமிழ் மக்கள் அழிக்கப்பட தொடங்கிய போது இந்திரா காந்தி விடுத்த கோரிக்கையை ஏற்று இலங்கைக்கு எதிராக உலகநாடுகள் திரண்டன.
இலங்கைத் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்று 1982-ல் ஜெயவர்த்தனேவை டெல்லிக்கு அழைத்த பெருமை ராஜீவ்காந்திக்கு உண்டு. அவரை மட்டுமல்ல அப்போதைய இலங்கை எதிர்க்கட்சி தலைவர் அமிர்தலிங்கத்தையும் அழைத்து தமிழர்களை காக்க முயற்சி எடுத்தார். இலங்கையில் வடகிழக்கு மாகாணங்களை ஒருங்கிணைத்து, ஜெயவர்த்தனே அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்தினார். ஆனால் அதற்கு விடுதலைப்புலிகள் இயக்க தலைவர் பிரபாகரன் ஒப்புக் கொள்ளவில்லை. ஜெயவர்த்தனே ஒப்பந்தம் அப்போதே நிறைவேற்றப்பட்டிருந்தால், இப்போது இலங்கையில் அமைதி ஏற்பட்டிருக்கும்.

நாம் தமிழக தலைவர்களின் உணர்வுகளை ஏற்கிறோம். ஆனால் மத்திய அரசை குறை கூறுவதால் ஒன்றும் நடக்காது. நாங்கள் விடுதலைப்புலிகளை ஆதரிக்க முடியாது. ஆதரிக்கவும் மாட்டோம். ஒருபோதும் அவர்களை மன்னிக்க மாட்டோம். மறக்கவும் மாட்டோம். பிரபாகரன் மட்டுமல்ல, ஆயிரம் பேர் வந்தாலும் அதைப்பற்றி கவலைப்பட மாட்டோம்.
இலங்கையில் விடுதலைப்புலிகள் இயக்கத்தினர் தமிழினத்தை கூறு கூறாக அழித்ததால்தான் இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதை அங்குள்ள தமிழர்களே சொல்கிறார்கள். இலங்கையில் தமிழ் மக்களின் விடுதலைக்காக போராடிய இயக்கங்களை அழித்தது விடுதலை புலிகள்தான்.

விடுதலை புலிகளை ஆதரிக்கும் அங்கீகாரம் பெற்ற அரசியல்கட்சிகளுக்கு நினைவிருக்கட்டும். தடை செய்யப்பட்ட இயக்கத்தை உங்களுக்கு ஆதரிப்பதற்கு தைரியம் இருந்தால் ஆதரித்து பாருங்கள். சட்டம் தன் கடமையை செய்யும். மத்திய அரசின் நடவடிக்கைகளில் அந்த தலைவர்கள் இருக்கமாட்டார்கள். வன்முறையை ஆதரிப்பவர்களை நாங்கள் தொடர்ந்து எதிர்ப்போம்.
இலங்கையில் போர் மூலம் அமைதி திரும்பாது. அங்கு அரசியல் தீர்வு ஏற்பட வேண்டும். இந்தியாவில் இருப்பது போல, இலங்கை அரசுக்கு உட்பட்டு அங்கு தமிழர்களுக்கு ஆட்சியுரிமை வழங்க வேண்டும்.

இவ்வாறு கே.வி.தங்கபாலு பேசினார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.வி.தங்கபாலுவுக்கு மிரட்டல் கடிதம் வந்ததை தொடர்ந்து அவருக்கு போலீஸ் பாதுகாப்பு கொடுக்கப்பட்டுள்ளது. துப்பாக்கி ஏந்திய போலீசார் ஒருவர் அவர் செல்லும் இடத்தில் எல்லாம் பின் தொடர்ந்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டார்.
மத்திய சென்னை மாவட்ட காங்கிரஸ் தலைவர் கோவிந்தசாமி அனைவரையும் வரவேற்றார். தமிழ்நாடு காங்கிரஸ் கட்சி பொதுசெயலாளர் தாமோதரன், முன்னாள் தலைவர் எம்.கிருஷ்ணசாமி, ஞானதேசிகன் எம்.பி, எம்.எல்.ஏ.க்கள் டி.சுதர்சனம், யசோதா, பீட்டர் அல்போன்ஸ் ஜெயகுமார், போளூர்வரதன், மகிளா காங்கிரஸ் தலைவி சாய்லட்சுமி, முன்னாள் எம்.பி. கலியபெருமாள்,முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் பொன்னம்மாள், பூவராகவன் மற்றும் நிர்வாகிகள் ஐஸ்அவுஸ் தியாகு, பிராங்கிளின் பிரகாஷ் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

முன்னதாக, யானைக்கவுனியில் உள்ள இந்திரா காந்தியின் சிலைக்கு மாலை அணிவித்தும், சத்திய மூர்த்தி பவனில் இந்திரா காந்தியின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவியும் கே.வி.தங்கபாலு மரியாதை செலுத்தினார்.

கருத்துகள் இல்லை: