ஞாயிறு, 16 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி கலவரத்தில் கைது. தூண்டி விட்ட அரசியல் புள்ளியும் சிக்குகிறார்.

சென்னை, நவ.17-
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் 15-பேர் கைதாகி உள்ளனர். கலவரத்தை தூண்டி விட்ட அரசியல் புள்ளி ஒருவரையும் கைது செய்ய போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் கல்லூரியில் கடந்த 12-ந் தேதி அன்று மாணவர்களின் இருபிரிவினருக்கிடையே நடந்த மோதல் சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இந்த சம்பவம் தொடர்பாக கடும் நடவடிக்கை எடுக்க புதிய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டார். கலவரத்தில் ஈடுபட்ட 30 மாணவர்களின் பெயர் பட்டியல் தயாரிக்கப்பட்டது. இதன் அடிப்படையில் நேற்று முன்தினம் வரை 11 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.
நேற்று மேலும் 4 மாணவர்கள் கைதானார்கள். அவர்களில் ஒருவர் பெயர் கோபாலகிருஷ்ணன். இவர் நெல்லை மாவட்டம், செங்கோட்டையை சேர்ந்தவர். இன்னொருவர் பெயர் இளமுகில். இவர் சென்னை அண்ணாநகர் பாடி குப்பத்தை சேர்ந்தவர். மதுராந்தகத்தை சேர்ந்த பிரேம்குமார் என்ற மாணவரும், உளுந்தூர் பேட்டையை சேர்ந்த இளையராஜா என்ற மாணவரும் நேற்று இரவு கைதானார்கள். இதன் மூலம் கைதான மாணவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்து உள்ளது.

நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட சிவகதிரவன், ராஜா, பிரேம்நாத் ஆகியோரும் நேற்று கைது செய்யப்பட்ட கோபாலகிருஷ்ணன், இளமுகில் ஆகியோரும் மாஜிஸ்திரேட்டு பரமராஜ் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு 15 நாள் நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
தலைமறைவாக உள்ள மேலும் 15 மாணவர்களை கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் தலைமையில் தனிப்படை போலீசார் வேட்டையாடி வருகின்றனர்.

சட்டக்கல்லூரியில் நடந்த கொலைவெறி கலவரத்திற்கு பின்னணியாக இருந்து ஆயுத சப்ளையும் செய்து தூண்டி விட்டது ஒரு முக்கிய அரசியல் புள்ளி என்று மாணவர்கள் தரப்பில் புகார் கூறப்பட்டுள்ளது. அந்த அரசியல்புள்ளியின் நடவடிக்கைகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். அவருக்கு எதிரான ஆதாரங்களையும் திரட்டி வருகிறார்கள். முக்கிய ஆதாரங்கள் கிடைத்தவுடன் அந்த அரசியல் புள்ளி கண்டிப்பாக கைது செய்யப்படுவார் என்று போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.
சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியில் தான் கலவரத்திற்கான திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து தான் ஆயுதங்களை மாணவர்கள் எடுத்து வந்துள்ளனர். மாணவர்கள் விடுதியில் ஏராளமான வெளியாட்கள் வந்து தங்கி, கலவரத்திற்கு ஆலோசனை வழங்கியதாக சொல்லப்படுகிறது. மாணவர்கள் விடுதியிலும் பல்வேறு சீர்திருத்தங்களை கொண்டு வர போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

இந்தநிலையில் நேற்று பிற்பகல் திடீரென்று கலவரம் நடந்த சட்டக்கல்லூரி வளாகத்தை கமிஷனர் ராதாகிருஷ்ணன் நேரடியாக சென்று பார்வையிட்டார்.
நேற்று போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணனை ஐகோர்ட்டு வக்கீல்கள் சங்க தலைவர் பால் கனகராஜ் சந்தித்து பேசினார். மரியாதை நிமித்தம் சந்தித்ததாகவும், சட்டக்கல்லூரியில் ஏற்பட்டுள்ள பிரச்சினையை தீர்ப்பதற்கான வழிவகை குறித்து அப்போது ஆலோசித்ததாகவும் பால்கனகராஜ் வெளியில் வந்து நிருபர்களிடம் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை: