சனி, 22 நவம்பர், 2008

அசோக்நகரில் 3 பேர் கொலையான சம்பவம்: சொத்து விற்பனையை விரும்பாதவர்கள் கொலை செய்தார்களா?. போலீசார் விசாரணை

சென்னை, நவ.23-
சென்னை அசோக் நகரில் 3 பேர் கொலை செய்யப்பட்ட சம்பவம், சொத்து விற்பனையை விரும்பாத சிலரால் நடந்ததா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

சென்னை அசோக் நகரில் ஓய்வு பெற்ற அரசு அதிகாரி சரவணன், அவர் மனைவி கஸ்தூரி, வேலைக்காரப் பெண் அன்பரசி ஆகிய 3 பேரும் கொலை செய்யப்பட்டனர். இந்த வழக்கில் தனிப்படை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இதுவரை கொலையாளி யார்? என்பதை துப்பறிய முடியவில்லை. ஆனாலும் விடா முயற்சியுடன் விசாரணை துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து போலீஸ் அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

சரவணனுக்கு கோடிக்கணக்கில் சொத்து இருக்கிறது. அவருக்கு வாரிசு இல்லை என்பதால், உறவினர்களின் போக்குவரத்து அதிக அளவில் இருந்தது. இதுதவிர சரவணனுக்கு மேலும் சில பெண்களுடன் நட்பு இருந்தது. அந்த நட்பு மூலமாக வந்த வாரிசு இருப்பதாக தெரிகிறது. அந்த வாரிசுக்குத்தான் அனைத்து சொத்துகளும் சேர வேண்டும் என்று சிலர் கருதியுள்ளனர்.
இது வேறு சிலருக்கு தெரிந்ததால் சொத்துக்கு பலரும் நெருக்கடி கொடுக்க தொடங்கினர். எந்த சொத்து யாருக்கு? என்ற போட்டியும் நடந்து இருக்கிறது. சொத்துக்காக நடைபெறும் போட்டி அனைத்தும் வேலைக்காரப் பெண் அன்பரசிக்கு தெரியும்.

சில சொத்துகள் பினாமி பெயரில் இருப்பதாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. அதுபற்றிய பட்டியலும் தயார் செய்யப்பட்டு வருகிறது. சொத்துக்கு யார் வாரிசு? அல்லது எந்தெந்த சொத்து யாருக்குத் தரப்படும்? என்ற விவரங்கள் எதையும் சரவணன் வெளியிடாமல் இருந்தார்.
இவ்வாறு அந்த அதிகாரி கூறினார்.


இந்த நிலையில் சரவணனின் வீட்டில் போலீசார் நேற்று மாலையில் திடீரென்று சோதனை நடத்தினர். இதற்காக உறவினர்கள் பலரை போலீசார் அழைத்து சென்றனர். அவரது வீட்டில் ஒரு அறை பூட்டப்பட்டு இருந்தது. அதை உறவினர்கள் முன்னிலையில் போலீசார் திறந்தனர். அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட ஆவணங்கள் இருந்தன. அவை அனைத்தையும் போலீசார் அள்ளிச் சென்றனர். என்னென்ன ஆவணங்கள் எடுத்துச் செல்லப்படுகின்றன என்பதற்கான பட்டியலை உறவினர்களுக்கு போலீசார் வழங்கியுள்ளனர்.

சரவணனின் செல்போன் முழுமையாக சோதனை செய்யப்படுகிறது. இதற்கென்று உதவி கமிஷனர் தலைமையில் ஒரு தனிப்படை ஒதுக்கப்பட்டு உள்ளது. அந்த போனில் உள்ள எண்கள் அனைத்தும் பட்டியலிடப்பட்டு உள்ளன. அதில் எந்தெந்த எண்களுக்கு அவர் அதிகம் பேசி இருக்கிறார்? என்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு உள்ளன.
அந்த எண்களுக்கான முகவரியை சம்பந்தப்பட்ட செல்போன் கம்பெனிகளிடம் இருந்து போலீசார் பெற்றுள்ளனர். அந்த முகவரியில் இருப்பவர்களை ரகசியமாக கண்காணிக்கவும் உத்தரவிடப்பட்டு உள்ளது.

இந்த நிலையில் ஏற்கனவே எடுக்கப்பட்ட பல கைரேகைகள் தெளிவாக இல்லை. எனவே, கொலை நடந்த வீட்டுக்கு போலீசார் மீண்டும் சென்று கைரேகையை சேகரித்தனர். இவற்றில் பழைய ரவுடிகள், கூலிப் படையினர் போன்றவர்களின் கைரேகை சிக்குகிறதா? என்று சரிபார்க்கும் பணி நடந்து வருகிறது. 5 கைரேகைகள் ஒத்துப் போவதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
மேலும், மிளகாய் பொடியை கொலையாளிகள் பயன்படுத்தி இருப்பதும் கண்டறியப்பட்டு உள்ளது. மோப்ப நாயின் செயல்பாட்டை தடுக்க முடியும் என்பதால், கொலையாளிகள் அந்த தடையத்தையும் விட்டு வைக்கவில்லை. எனவே, அனைத்தும் ஏற்கனவே திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டு இருப்பதாக போலீசார் சந்தேகிக்கின்றனர்.

முதலில் சரவணன் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். அதைத் தொடர்ந்து அன்பரசியும், கஸ்தூரியும் கொலை செய்யப்பட்டு உள்ளனர். கஸ்தூரியை கொலை செய்வதில் எந்த பிரச்சினையும் இல்லை. ஆபரேஷன் நடந்து இருந்ததால், கண்ணைத் திறக்க முடியாமல் படுத்துக் கிடந்த அவரை, எளிதாக கொலையாளிகள் கொலை செய்து விட்டனர்.
ஆனால் அன்பரசி கடுமையாகப் போராடி இருக்கிறார். இதனால் அவரது உடலில் பல இடங்களில் கத்திக் குத்துக் காயங்கள் காணப்பட்டன. முதலில் அவரது கழுத்தை நெரித்துள்ளனர். கையால் தடுத்த போது, கையை கத்தியால் வெட்டினர். தப்பித்து ஓடுவதற்காக அவர் திமிறிய போது 2 பக்க இடுப்பிலும் கத்தியை சொருகியுள்ளனர்.
நெஞ்சு, கழுத்து உள்ளிட்ட இடங்களிலும் கத்திக் குத்து காயங்கள் உள்ளன. அன்பரசிக்கு கஸ்தூரி மூலம் சில சொத்து விவரங்களும், அதனால் ஏற்பட்ட தகராறு பற்றியும், தகராறுக்கு காரணமாணவர்கள் பற்றியும் ஏற்கனவே தெரியும். இதனால் அவரும் கொல்லப்பட்டுள்ளார்.

வாரிசு இல்லாத பணக்காரர்கள், வாரிசுகளை வெளிநாடுகளுக்கு அனுப்பி இருக்கும் பணக்கார பெற்றோர் போன்றவர்கள் கொள்ளையர்களால் குறிவைக்கப்படுவது இயல்பு. சென்னையில் நடந்த ஆதாயக் கொலைகளில் இப்படிப்பட்டவர்களே அதிகம் பலியாகி இருக்கின்றனர். அந்த வகையில் கொலையானோர் பட்டியலில் சரவணன் சேர்ந்து இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.
இதுதவிர, ரியல் எஸ்டேட் தொழிலிலுள்ள நபர்களால் கொலை நடந்து இருக்கக் கூடுமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வாரிசு இல்லாதவர்களின் சொத்துகளை எளிதில் வாங்கி விற்று அதிக லாபம் ஈட்ட முடியும் என்று தெரிகிறது. வாரிசுகள் வெளிநாடுகளில் இருந்தால், அவர்களுக்கு அந்த சொத்துகளால் லாபமில்லை என்ற பட்சத்தில் அவற்றை வாங்கி விற்பனை செய்ய பலர் முயற்சி செய்யக் கூடும்.

அந்த வகையில் சரவணனின் சொத்துகளை விற்பனை செய்வதிலோ அல்லது வேறு யாராவது வாங்குவதிலோ ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் யாருடனாவது அவருக்கு தகராறு இருந்ததா? என்பதையும் போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும், சரவணன் யாருக்காவது தனது சொத்தை விற்பனை செய்ய முயன்று, அது பிடிக்காமல் யாராவது கொலை செய்திருக்கலாமா? என்ற கோணத்திலும் போலீசார் விசாரணையை முடுக்கியுள்ளனர்.
ஆனாலும் அவரது வீட்டுக்கு அடிக்கடி சென்று வரும் நண்பர்கள், உறவினர்கள் போலீசாரின் சந்தேக வளையத்தில் சிக்கியுள்ளனர். சரவணன் தங்கி இருந்த வீடு மிகவும் பெரியது என்பதால், அங்கு நடக்கும் சம்பவங்கள் பற்றி அருகில் வசிக்கும் நபர்களுக்கு சரிவர தெரியவில்லை.

கருத்துகள் இல்லை: