வியாழன், 13 நவம்பர், 2008

சென்னையில் சட்டக்கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம்: நீதி விசாரணைக்கு உத்தரவு


சென்னையில் சட்டக் கல்லூரி மாணவர்கள் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக, கல்லூரி முதல்வர் மற்றும் போலீஸ் உதவி கமிஷனர், இன்ஸ்பெக்டர் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். போலீஸ் கமிஷனர் சேகரும் மாற்றப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக நீதி விசாரணை நடத்தவும் தமிழக அரசு உத்தரவிட்டது.
சென்னை, நவ.14-
சென்னையில் உள்ள டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரிக்குள் நேற்று முன்தினம் மாணவர்களுக்கு இடையே பயங்கர கோஷ்டி மோதல் ஏற்பட்டது.
மாணவர்களில் ஒரு தரப்பினர் இரும்பு கம்பி, உருட்டுக்கட்டை, டிப்லைட்டுகள் மண்வெட்டி ஆகியவற்றுடன் எதிர் தரப்பு மாணவர்களை ஓட, ஓட விரட்டி கொடூரமாக தாக்கினார்கள்.
ஆறுமுகம், பாரதிகண்ணன் என்ற 2 மாணவர்கள் மீது கொலை வெறி தாக்குதல் நடந்தது. தொலைகாட்சி மற்றும் பத்திரிகைகளில் வெளியான இந்த காட்சி ஒட்டு மொத்த தமிழகத்தையும் அதிர்ச்சியில் உறைய வைத்தது.

2 மாணவர்கள் ரத்தம் சொட்ட, சொட்ட உருட்டு கட்டைகளால் தாக்கப்பட்ட போது ஏராளமான போலீசார் கல்லூரி வாசலில் காவலுக்கு நின்று இருந்தனர். ஆனால் 10 அடி தூரத்தில் நடந்த தாக்குதலை அவர்கள் தடுக்கவில்லை.
போலீசாரின் இந்த அலட்சியம் பொது மக்கள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

சட்டக்கல்லூரி மாணவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பாக சட்டசபையில் நேற்று கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது.
``மாணவர்களின் மோதலை தடுக்க தவறிய போலீசார் மீதும், கல்லூரி முதல்வர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பல்வேறு கட்சி உறுப்பினர்களும் வலியுறுத்தி பேசினார்கள்.
இந்த விவாதத்திற்கு பதில் அளித்து அமைச்சர் துரைமுருகன் பேசியதாவது:-

அம்பேத்கார் அரசு சட்டக் கல்லூரியில் நடந்த சம்பவம் விரும்பத்தகாத நிகழ்வு என்பதை அனைவரும் ஒத்துக் கொள்கிறோம். இந்த செய்தி வந்தவுடன் முதல்-அமைச்சர், மக்கள் நல்வாழ்வு அமைச்சரை ஆஸ்பத்திரிக்கு அனுப்பி காயம் அடைந்த மாணவர்களுக்கு தகுந்த சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.
என்னுடனும், அமைச்சர்களுடனும், அதிகாரிகளுடனும் இரவு வெகுநேரம் முதல்-அமைச்சர் பேசிக் கொண்டிருந்தார். அவரே பதில் கூறுவதாகத் தான் இருந்தார். நீண்ட நேரம் அவர் விழித்திருந்ததால் சற்று உடல்நலக் குறைவு ஏற்பட்டு அவர் சார்பாக நான் பதில் வழங்குகிறேன்.
நாட்டின் நன்மைக்கும், தீமைக்கும் பொறுப்பேற்க போகிறவர்கள் மாணவர்கள். அதிலும் குறிப்பாக சட்டக் கல்லூரி மாணவர்கள் நீதிக்காக வாதாடப் போகிறவர்கள். அந்த சட்டக் கல்லூரியில் இரு பிரிவினருக்கிடையே மோதல் நடந்தது கண்டிக்கத்தக்கது தான். வருந்துகிறேன். நானும் அந்த சட்டக் கல்லூரி மாணவன் என்பதால் மிகுந்த வேதனை அடைகிறேன்.
இது முதல் முறை அல்ல. பல முறை அப்படி நடந்திருக்கிறது. வழக்கமாக எதிர்க்கட்சியினர் போலீசார் அத்துமீறி விட்டார்கள் என்று தான் பேசுவார்கள். இந்த முறை போலீசார் மெத்தனமாகி விட்டார்கள் என்று கூறுகிறார்கள்.

இந்த சம்பவத்திற்கு நான் வக்காலத்து வாங்கவில்லை. 2 பிரிவுக்கிடையே ஏற்பட்ட தகராறு காரணமாக நடந்த அடிதடியில் ஆறுமுகம், பாரதி கண்ணன், அய்யாத்துரை, சித்திரைச் செல்வன் ஆகிய 4 மாணவர்கள் காயமடைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு உரிய சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது.
காவல்துறையினர் உடனடி நடவடிக்கை எடுத்து பாலமணிகண்டன், கோவிந்தன், மற்றொரு கோவிந்தன், ஜெயக்குமார், திலீபன், பிரபாகரன், கோகுல்ராஜ் ஆகிய 7 மாணவர்கள் மீது கொலை முயற்சி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

போலீசார் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தார்கள் என்பதை யாரும் விரும்ப மாட்டார்கள். பொதுமக்கள் 10 பேர் கூடி நின்றாலே யாராவது தடுக்கலாமே என்று தான் சொல்வார்கள். ஆனால் போலீசாரே நிற்கிறார்கள் என்கிற போது தடுக்கும்படி கூறத்தான் செய்வார்கள். எங்கே தவறு நடந்தது என்று பார்க்க வேண்டும்.
எனவே உடனடியாக உத்தரவிடக் கூடிய உதவிக் கமிஷனர் நாராயணமூர்த்தி, எஸ்பிளனேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் சேகர்பாபு ஆகியோர் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்கள். சம்பவ இடத்தில் இருந்த சப்-இன்ஸ்பெக்டர்கள் கொடியராஜ், விஜயலட்சுமி, பெருமாள், துரைராஜ் ஆகியோர் சென்னைக்கு வெளியே மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

கல்லூரி முதல்வர் என்ன செய்தார், அவராவது முன்னால் வந்து நின்றிருக்க வேண்டும். எனவே கல்லூரி முதல்வர் ஸ்ரீதேவ் தற்காலிக பணி நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார்.
இந்த நிகழ்ச்சிகள் தொடராமல் இருக்க கல்லூரி விடுதி மூடப்பட்டுள்ளது. எல்லா சட்டக் கல்லூரிகளுக்கும் விடுமுறை விடப்பட்டுள்ளது. தற்போது தேர்வுகள் நடைபெற்றுக் கொண்டிருப்பதால், அந்த தேர்வுகள் அனைத்தும் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

போலீசாரின் மெத்தனத்திற்கு என்ன காரணம், கல்லூரி முதல்வர் செய்ய தவறியது என்ன என்பதை எல்லாம் ஆய்ந்து அறிக்கை தர ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி சண்முகம் தலைமையில் விசாரணை கமிஷன் போடப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக வருத்தப்படுகிறேன். நான் படிக்கும் போது பீட்டர் அல்போன்சுக்கும் எனக்கும் தகராறு ஏற்படும். அவர் தேர்தலில் வெற்றி பெறக்கூடாது என்பதில் தான் அரசியல் ரீதியாக மட்டுமே தகராறு இருக்கும். மற்றபடி சாதி ரீதியாக, மத ரீதியாக மோதல் இருந்ததில்லை.
சாதி ஒழிய வேண்டும், மதம் ஒழிய வேண்டும் என்று எல்லோரும் பேசிக் கொண்டு தானிருக்கிறோம். தலைவர்களும் வலியுறுத்தி வந்துள்ளனர். இது அரசால் மட்டுமே தடுத்துவிட முடியாது. சமுதாயத்தில் இந்த மாற்றம் ஏற்பட வேண்டும். அதற்கு நாம் அத்தனை பேரும் பாடுபடுவோம்.
இவ்வாறு அமைச்சர் துரைமுருகன் கூறினார்.
போலீஸ் கமிஷனர் மாற்றம்
இதற்கிடையே, சென்னை நகர போலீஸ் கமிஷனராக இருந்த சேகர் நேற்று திடீரென்று இடமாற்றம் செய்யப்பட்டார். அவர் சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக நியமிக்கப்பட்டார்.
சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி. கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த கே.ராதாகிருஷ்ணன் சென்னை நகர போலீஸ் கமிஷனராக நியமிக்கப்பட்டார். இதற்கான உத்தரவை தமிழக அரசு நேற்று இரவு பிறப்பித்தது.

கருத்துகள் இல்லை: