சனி, 15 நவம்பர், 2008

சென்னை சட்டக்கல்லூரி கலவரம்: மேலும் 3 மாணவர்கள் கைது


சென்னை, நவ.16-
சென்னை டாக்டர் அம்பேத்கார் சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம் தொடர்பாக மேலும் 3 மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் தலைமறைவாக உள்ள 19 மாணவர்களை கைது செய்ய தமிழகம் முழுவதும் 20 இடங்களில் தனிப்படை போலீசார் முகாமிட்டு தேடுதல் வேட்டை நடத்தி வருகிறார்கள்.

கடந்த 12-ந் தேதி அன்று சென்னை அம்பேத்கார் சட்டக்கல்லூரி வளாகத்தில் மாணவர்களின் இரு பிரிவினருக்கிடையே பெரிய கலவரம் வெடித்தது. கொலைவெறி தாக்குதலில் ஈடுபட்டனர். தாக்குதல் சம்பவத்தில் பாரதி கண்ணன், ஆறுமுகம், அய்யாத்துரை, சித்திரைசெல்வன் ஆகிய 4 மாணவர்கள் பலத்த காயம் அடைந்தனர். கலவரத்தில் சட்டக்கல்லூரி முதல்வரின் அலுவலகமும் தாக்கப்பட்டது.
இந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக சட்டக்கல்லூரி போலீசார் 3 வழக்குகள் பதிவு செய்துள்ளனர். 30 மாணவர்கள் மீது வழக்கில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சென்னை நகரின் புதிய போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் பதவி ஏற்றவுடன் சட்டக்கல்லூரி கலவரத்தில் சம்பந்தப்பட்ட மாணவர்களை கூண்டோடு கைது செய்ய உத்தரவிட்டார். இதையொட்டி, கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதனின் நேரடி மேற்பார்வையில், துணை கமிஷனர்கள் சாரங்கன், பன்னீர்செல்வம் ஆகியோர் தலைமையில் 5 உதவி கமிஷனர்கள், 20 இன்ஸ்பெக்டர்கள் அடங்கிய 20 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. தனிப்படை போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கி கோகுல்ராஜ், வி.கோவிந்தன், டி.கோவிந்தன், பிரபாகர், திலிபன், ஜெயக்குமார், பாலமணிகண்டன், சித்திரை செல்வன் ஆகிய 8 பேரை முதல்கட்டமாக கைது செய்தனர்.
இவர்களில் சித்திரை செல்வன் காயத்தோடு போலீஸ் பாதுகாப்பில் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மாணவர்கள் கொலை முயற்சி உள்பட 6 சட்டப்பிரிவுகளின் கீழ் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு நீதிமன்ற காவலில் ஜெயிலில் அடைக்கப்பட்டனர். இந்த நிலையில் நேற்று காலையில் சிவகதிரவன் என்ற மாணவர் மதுரையில் கைது செய்யப்பட்டார். இவர், சென்னை சட்டக்கல்லூரியில் 2-வது ஆண்டு படிக்கும் மாணவர். மதுரை மாடங்குளத்தை சேர்ந்தவர். கைதான மாணவர் சிவகதிரவனை தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்கர் குருவார் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நேற்று இரவு சென்னை அழைத்து வந்தார்.
இதற்கிடையில் நேற்று இரவு கடலூர் மாவட்டம் குறிஞ்சிபாடியில் ராஜா என்ற மாணவரும், தஞ்சாவூரில் பிரேம்நாத் என்ற மாணவரும் கைதானார்கள். ராஜா சென்னை சட்டக்கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் ஆவார். கைதான மாணவர்கள் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது.

இந்த வழக்கில் மணிமாறன், ரவீந்திரன் உள்பட மேலும் 19 மாணவர்களை கைது செய்ய 20 தனிப்படைகளும் களத்தில் இறக்கப்பட்டுள்ளனர். தனிப்படை போலீசார் கள்ளக்குறிச்சி, கடலூர், பண்ருட்டி, திட்டக்குடி, மேலகோட்டையம், கரூர், தஞ்சை, குடவாசல், காஞ்சி, நெல்லை, சிவகிரி, மதுரை, விழுப்புரம், தூத்துக்குடி ஆகிய இடங்கள் உள்பட 20 இடங்களில் முகாமிட்டு தலைமறைவு மாணவர்களை தேடி வருகிறார்கள்.
சட்டக்கல்லூரியில் ஏற்கனவே பல்வேறு சமயங்களில் நடந்த தாக்குதல் சம்பவங்கள் தொடர்பாக சட்டக்கல்லூரி போலீசில் 12 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு நிலுவையில் உள்ளது. இதேபோல, சட்டக்கல்லூரி மாணவர்கள் விடுதியிலும் நடந்த மோதல் சம்பவங்கள் தொடர்பாகவும் கீழ்ப்பாக்கம் போலீசில் 8 வழக்குகள் நிலுவையில் இருக்கின்றன. மொத்தம் சட்டக்கல்லூரி மாணவர்கள் மீது ஏற்கனவே 20 வழக்குகள் நிலுவையில் உள்ளன. 20 வழக்குகளிலும் தொடர்புள்ளவர்களை வேட்டையாடி பிடிக்கவும் போலீசார் நடவடிக்கை எடுத்து வருகிறார்கள்.

நேற்று மாலையில் சட்டக்கல்லூரி கலவரம் தொடர்பாக கமிஷனர் ராதாகிருஷ்ணன், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உள்ளிட்ட உயர் போலீஸ் அதிகாரிகளுடன் முக்கிய ஆலோசனை நடத்தினார். முதல்கட்டமாக தலைமறைவாக உள்ள மாணவர்களை விரைவாக கைது செய்யவும், அடுத்தக்கட்டமாக சட்டக்கல்லூரியில் எதிர்காலத்தில் முழு அமைதியை ஏற்படுத்த என்ன நடவடிக்கை எடுக்கலாம் என்பது குறித்தும் கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டது.
இதற்கிடையில் நேற்று இரவு சென்னை நகர் முழுக்க தலைமறைவு மாணவர்கள் பதுங்கி இருக்கிறார்களா? என்று பல்வேறு இடங்களில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அரசியல் புள்ளி ஒருவர் வீட்டையும் போலீசார் ரகசியமாக கண்காணித்தபடி உள்ளனர்.

கைதான சிவகதிரவன் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-
சென்னை சட்டக்கல்லூரி மாணவர்கள் 2 பிரிவாக செயல்பட்டு வந்தோம். கடந்த 30-ந் தேதி கல்லூரியில் கொண்டாடப்பட்ட தேவர் ஜெயந்தி விழாவுக்காக அச்சடிக்கப்பட்ட போஸ்டரில் டாக்டர் அம்பேத்கார் பெயர் இடம்பெற வில்லை. இதனால் 2 தரப்பினர் இடையே மீண்டும் மோதல் வெடித்தது. இதற்கிடையில் எங்கள் மோதலை தடுப்பதற்காக சமாதான கூட்டம் நடத்தப்பட்டது. அதில் எந்த உடன்பாடும் ஏற்படவில்லை. இதனால் ஒரு பிரிவினரை தாக்க நாங்கள் முடிவு செய்தோம். அவர்கள் தேர்வு எழுதி வெளியில் வரும் போது சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கம்பி, கட்டை போன்ற ஆயுதங்களுடன் காத்து இருந்தோம். அவர்கள் வந்தவுடன் தாக்குதலை தொடங்கினோம். அப்போது அந்த பிரிவை சேர்ந்த 2 பேர் கத்தியுடன் எங்களை தாக்க வந்தனர். இதனால் எங்களுக்கு ஆத்திரம் ஏற்பட்டு அவர்கள் மீது கடும் தாக்குதல் நடத்தினோம்."
இவ்வாறு அவர் வாக்குமூலத்தில் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை: