வெள்ளி, 21 நவம்பர், 2008

பெண்ணை 1 வருடமாக அடைத்து வைத்து கொடுமை ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி சிகிச்சை மையம் நடத்தியவர் கைது




பெண்ணை 1 வருடமாக அடைத்து வைத்து கொடுமை ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி சிகிச்சை மையம் நடத்தியவர் கைது
தாம்பரம், நவ.22-
சென்னை அருகே, பெண்ணை 1 வருடமாக அடைத்து வைத்து கொடுமை படுத்தியதாக, ஒருவர் கைது செய்யப்பட்டார். அவர், ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி, சிகிச்சை மையம் நடத்தி வந்தார்.

சென்னை அருகே உள்ள பம்மல் வ.உ.சி. தெருவில், பிறவி ஊமை குழந்தைகளை பேச வைப்பதாக கூறி, சிகிச்சை மையம் ஒன்றை, சக்தி வேலு என்பவர் நடத்தி வருகிறார். இவரது சிகிச்சை மையத்தில், 26 குழந்தைகள் சிகிச்சையில் உள்ளனர்.
இந்த சிகிச்சை மையத்தில் கூடுவாஞ்சேரி நந்தீஸ்வரர் காலனியை சேர்ந்த ரெஜிகுமார் என்பவர், கடந்த மாதம் வேலைக்கு சேர்ந்தார்.


அப்போது அவரிடம், அங்கு இருந்த சேலம் மாவட்டம் ஓமலூர் தாலுகாவை சேர்ந்த அகிலா (29) என்ற பெண் கண்ணீருடன், "நானும் உன்னைப்போல இங்கு 1 ஆண்டுக்கு முன் வேலைக்கு சேர்ந்தேன். என்னை வெளியே விடுவது இல்லை. இங்கு தான் நான் இருக்க வேண்டும். நான் கொடுமைக்கு உள்ளாகி சிரமப்படுகிறேன்'' என்று தெரிவித்தார்.


இதுபற்றி ரெஜிகுமார், பரங்கிமலை துணை கமிஷனர் வரதராஜனிடம் புகார் கொடுத்தார். உடனே இன்ஸ்பெக்டர் தெய்வசிகாமணி, சப்-இன்ஸ்பெக்டர் அஸ்லம் பாஷா ஆகியோர் நடவடிக்கை எடுத்தனர். போலீசார், அந்த சிகிச்சை மையத்துக்கு சென்று, அகிலாவிடம் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர், தான் படும் கஷ்டத்தை எடுத்துரைத்தார்.
மேலும் அந்த சிகிச்சை மையத்தில் குழந்தைகள் சரியாக பராமரிக்கப்படுவது இல்லை என்றும் தெரிவித்தார்.


இதைத்தொடர்ந்து, பெண்கள் மீதான வன்கொடுமை சட்டத்தின் படி சக்தி வேலுவை போலீசார் கைது செய்தனர். அகிலா மீட்கப்பட்டார்.
பின்னர் சக்திவேலுவை, தாம்பரம் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினார்கள். சக்தி வேலுவை, காவலில் வைக்க, நீதிபதி முருகேசன் உத்தர விட்டார். அதன்படி சக்தி வேலு, புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.

கருத்துகள் இல்லை: