செவ்வாய், 18 நவம்பர், 2008

சட்டக்கல்லூரி கலவரத்தில் இதுவரை 26 மாணவர்கள் கைது


சென்னை, நவ.19-
சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த கலவரம் தொடர்பாக மாணவர்களின் கைது எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும், 4 மாணவர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.

சென்னை டாக்டர் அம்பேத்கார் அரசு சட்டக்கல்லூரியில் நடந்த கலவரத்தில் தொடர்புள்ள மாணவர்களை போலீசார் வேட்டையாடி பிடித்து வருகிறார்கள். கமிஷனர் ராதாகிருஷ்ணன் உத்தரவின் பேரில், கூடுதல் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன், இணை கமிஷனர் பாலசுப்பிரமணியன், துணை கமிஷனர் சாரங்கன் ஆகியோர் மேற்பார்வையில், 20 தனிப்படையினர் தமிழகம் முழுவதும் சென்று சட்டக்கல்லூரி கலவரத்தில் தொடர்புடைய மாணவர்களை தேடி பிடித்து கைது செய்து வருகின்றனர்.
நேற்று முன்தினம் இரவு வரை 18 மாணவர்கள் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர். மேலும் 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர். 4 மாணவர்கள் கோர்ட்டில் சரண் அடைந்தனர். இதையொட்டி, பிடிபட்ட மாணவர்களின் எண்ணிக்கை 26 ஆக உயர்ந்துள்ளது. மேலும், தலைமறைவாக உள்ள 4 மாணவர்களை தனிப்படை போலீசார் தேடி வருகிறார்கள்.
நேற்று கைது செய்யப்பட்ட மாணவர்களின் பெயர்களும், சரண் அடைந்த மாணவர்களின் பெயர் விவரமும் வருமாறு:-
1. மணிமாறன்- இவரது சொந்த ஊர் கள்ளக்குறிச்சி அருகேயுள்ள அக்கரைபாளையம்.
2. குபேந்திரன்- இவர் பண்ருட்டி அருகேயுள்ள வீரபெருமாள் நல்லூரை சேர்ந்தவர்.
3. ரவீந்திரன் என்ற மார்க்-பண்ருட்டி அருகேயுள்ள கீழ்கவரப்பேட்டை இவரது சொந்த ஊராகும்.
4. வெற்றிக்கொண்டான்- குறிஞ்சிப்பாடி அருகேயுள்ள விலாம்பள்ளம் கிராமத்தை சேர்ந்தவர்.
5. செல்வகுமார்-திருக்கோவிலூர் அருகேயுள்ள கீழரை சேர்ந்த இவர், விழுப்புரம் கோர்ட்டில் சரண் அடைந்தார்.
6. வேல்முருகன்- திட்டக்குடி அருகேயுள்ள கொரக்காவடி இவரது சொந்த ஊராகும். சென்னை எழும்பூர் கோர்ட்டில் நேற்று சரண் அடைந்தார்.
7. பொள்ளாச்சியை சேர்ந்த சிவராஜ், விழுப்புரத்தை சேர்ந்த மேகநாதன் என்ற 2 மாணவர்களும் கோயம்புத்தூர் கோர்ட்டில் நேற்று மாலை சரண் அடைந்தனர்.

சட்டக்கல்லூரி கலவரத்தில் காயம் அடைந்த அய்யாதுரை என்ற மாணவர் சென்னை அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இவருக்கு செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் வந்தது. செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் கொடுத்தவர் யார்? என்று போலீசார் விசாரித்தபோது, தூத்துக்குடி மாவட்டம் கயத்தார் அருகேயுள்ள பனிக்கர்குளத்தை சேர்ந்த முத்துராமலிங்கம் என்பவர் தான் செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலை மிரட்டல் அனுப்பியது தெரிய வந்தது. உடனடியாக தனிப்படை போலீசார் முத்துராமலிங்கத்தை பிடித்தனர்.
போலீஸ் விசாரணையில், முத்துராமலிங்கம் மாணவர் அய்யாதுரையின் நெருங்கிய நண்பர் என்று தெரிய வந்தது. விளையாட்டாக கொலை மிரட்டல் தகவல் அனுப்பியதாக முத்துராமலிங்கம் தெரிவித்தார். இதையொட்டி போலீசார் அவரை எச்சரிக்கை செய்து அனுப்பி வைத்தனர். செல்போன் எஸ்.எம்.எஸ். மூலம் கொலைமிரட்டல் செய்தி அனுப்புவது, வீண் வதந்திகளை பரப்பி பீதியை உண்டாக்குவது போன்ற செயல்களில் ஈடுபடுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சென்னை நகர போலீஸ் கமிஷனர் ராதாகிருஷ்ணன் எச்சரித்துள்ளார்.
கலவரத்தில் ஈடுபட்ட மாணவர்கள் அனைவரும் கைதானவுடன் அடுத்தகட்ட நடவடிக்கை தொடங்கும் என்று போலீசார் தெரிவித்தனர். இதற்கிடையில், எதிர்காலத்தில் சட்டக்கல்லூரி உள்பட அனைத்து கல்லூரிகளிலும் மோதல் சம்பவங்கள் எதுவும் இல்லாமல் அமைதியான முறையில் நடைபெற தேவையான நடவடிக்கைகள் எடுக்கவும் அரசு தரப்பில் திட்டமிடப்பட்டுள்ளது. நேற்று கைதான மாணவர்களும், சரண் அடைந்த மாணவர்களும் தான் கலவரத்தில் தீவிரமாக ஈடுபட்டவர்கள் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: