புதன், 19 நவம்பர், 2008

சென்னையில் நடந்த நெஞ்சை உருக்கும் சம்பவம்: அளவுக்கு அதிகமாக இன்சுலின் ஊசி போட்டு நர்சு தற்கொலை

சென்னை, நவ.20-
சென்னையில் காதலனை மணக்க முடியாத ஏக்கத்தில் நர்சு ஒருவர் இன்சுலின் ஊசியை அளவுக்கு அதிகமாக போட்டுக்கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.
நெஞ்சை உருக்கும் இந்த பரிதாப சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

சென்னை வடபழனி ஒத்தவாடை தெருவில் வசித்தவர் ஆஷா (வயது 25). கேரள மாநிலம் பாலக்காடை சேர்ந்த இவர், சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனை ஒன்றில் நர்சாக பணியாற்றி வந்தார். சிறு வயதிலேயே தாயாரை இழந்தவர். தந்தை மற்றும் 2 சகோதரர்களுடன் வாழ்ந்து வந்தார். அவர்களும் இவரை கவனிக்கவில்லை.
நர்சு வேலைக்கான டிப்ளமோ படித்திருந்த ஆஷா, சொந்த ஊரில் இருந்து ஈரோடு மாவட்டம் சென்னிமலைக்கு வந்தார். அங்கு ஒரு ஆஸ்பத்திரியில் பணியாற்றினார். அப்போது குமார் என்ற வாலிபரோடு காதல் ஏற்பட்டது. குமார் பட்டப்படிப்பு படித்துவிட்டு தனியார் வங்கி ஒன்றில் அதிகாரியாக பணியாற்றினார். குமாரும், ஆஷாவும் திருமணம் செய்துகொள்ள விரும்பினார்கள். குமாரின் பெற்றோரும் பச்சை கொடி காட்டினார்கள்.

பெற்றோர் ஆதரவு இல்லாத நிலையில், காதலனை மணந்து சந்தோஷமாக வாழலாம் என்று இன்ப கனவு கண்ட ஆஷாவின் வாழ்க்கையில் விதி விளையாடியது. குமாரை மணப்பதற்காக முறைப்படி ஜாதக பொருத்தம் பார்க்கப்பட்டது. ஆனால், ஜாதகத்தில் ஆஷாவுக்கு மாங்கல்ய தோஷம் இருப்பதாகவும், அவரை மணந்தால் மாப்பிள்ளையின் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
இதனால் ஆஷா, குமார் திருமணம் தடைபட்டது. இதனால் ஆஷாவும், குமாரும் சென்னை வடபழனிக்கு வந்து குடியேறினார்கள். சென்னையில் இருவரும் வேலை தேடிக்கொண்டனர். இருவரும் அண்ணன்-தங்கை என்று கூறிக்கொண்டு ஒரே வீட்டில் வாழ்ந்தனர்.

குமாரை முறைப்படி திருமணம் தான் செய்ய முடியவில்லை. அவரோடு சேர்ந்தாவது வாழலாம் என்ற ஆஷாவின் கடைசி கனவிலும் மண் விழுந்தது. ஆஷாவை திடீரென்று ஆஸ்துமா நோய் தாக்கியது. இதனால் அவர் இடிந்து போனார். இனிமேல் குமாரோடு வாழ்வதற்கு தனக்கு தகுதியில்லை என்று ஆஷா முடிவு செய்தார். அவரே குமாருக்கு பெண் பார்த்து திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் செய்தார். விரைவில் திருமணம் நடக்க இருந்தது. குமாரை மணக்க உள்ள பெண்ணும், ஆஷாவை பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார். கடைசி காலம் வரை ஆஷா தங்களோடு தங்கியிருக்க குமாரை மணக்க இருந்த பெண்ணும் சம்மதித்தார்.
இருந்தாலும், ஆஷா கடந்த 15 நாட்களாக மனம் உடைந்து காணப்பட்டார். தனது வாழ்க்கையே சூனியமாகி விட்டதாக உணர்ந்தார்.

இந்த நிலையில், நேற்று காலையில் வீட்டில் ஆஷா மயங்கிய நிலையில் கிடந்தார். இன்சுலின் ஊசி மருந்தை அளவுக்கு அதிகமாக உடலில் ஏற்றியது தெரிய வந்தது. சர்க்கரை நோயாளிகளுக்கு உயிர் காக்கும் அரிய மருந்தாக இருக்கும் இன்சுலின் ஊசி மருந்தை அளவுக்கு அதிகமாக உடம்பில் ஏற்றினால், அதுவே உயிரை குடிக்கும் எமனாகவும் மாறிவிடும் என்பது மருத்துவ உண்மை. ஆஷா இன்சுலின் ஊசி மருந்தை ஏற்றி உயிரை விட முடிவு செய்துள்ளார். அவரை ஆபத்தான நிலையில் அவர் வேலைபார்த்த மருத்துவமனையிலேயே சிகிச்சைக்கு சேர்த்தார்கள். ஆனால் ஆஷா பரிதாபமாக இறந்து போனார்.
அவரது உடலை பார்த்து குமார் கதறி அழுதார். இந்த சம்பவம் தொடர்பாக வடபழனி உதவி போலீஸ் கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் விமலன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். ஆஷாவின் வாழ்க்கையில் விதி விளையாடி அவரை விரட்டி, விரட்டி பல வகைகளிலும் தோல்வியை கொடுத்து இறுதியாக உயிரையும் குடித்துவிட்டது என்று அவர் வசித்த பகுதியை சேர்ந்த மக்கள் வேதனையோடு குறிப்பிட்டார்கள்.

கருத்துகள் இல்லை: