புதன், 12 நவம்பர், 2008

இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் பயங்கர தீ விபத்து பல கோடிரூபாய் தப்பியது



சென்னை, நவ.12-
சென்னை ராஜாஜி சாலையில் உள்ள இந்தியன் வங்கி தலைமை அலுவலகத்தில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தக்க சமயத்தில் தீ அணைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டதால் இதில் பல கோடிரூபாய் தப்பியது.
7 மாடி கட்டிடம்
இந்தியாவில் உள்ள மிகப்பெரிய வங்கிகளில் ஒன்றாக இந்தியன் வங்கி செயல்படுகிறது. சென்னை பாரிமுனை ராஜாஜி சாலை சந்திப்பு ஜாபர் சராங் தெருவில் இந்தியன் வங்கியின் தலைமை அலுவலகம் உள்ளது. இது 7 மாடி கட்டிடம் ஆகும். இதன் தரை தளத்தில் பணப்பாதுகாப்பு பெட்டகங்கள் உள்ளன. முதல் மாடியில் இருந்து 5-வது மாடி வரையில் வங்கியின் பிற அலுவலகங்கள் உள்ளன.
6 மற்றும் 7-வது மாடிகளில் இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அலுவலகம் உள்பட உயர் அதிகாரிகளின் அறைகளும், அவர்களுக்கான உணவு விடுதிகளும் (மெஸ்) உள்ளன. இந்த 7 மாடிகளிலும் ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் பணியாற்றிவருகின்றனர்.
தீ விபத்து
நேற்று மாலை 6 மணி அளவில் வழக்கம்போல் அனைத்து ஊழியர்களும் வேலையை முடித்துக்கொண்டு வீடு திரும்பினர். வங்கியின் அறைகள் பூட்டப்பட்டன. இந்த நிலையில் இரவு 8 மணி அளவில் கட்டிடத்தின் 5-வது மாடியில் இருந்து திடீரென்று கரும்புகை கிளம்பியது.
இதை அந்தப்பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்ட போலீஸ்காரர் ஒருவர் பார்த்தார். உடனே அவசர அவசரமாக வங்கியில் உள்ள லிப்ட் மூலம் 5-வது மாடிக்குச் சென்று பார்த்தார்.
அங்கு தீ கொழுந்துவிட்டு எரிந்து கொண்டிருந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் உடனடியாக தீயணைப்புத் துறைக்குத் தகவல் கொடுத்தார்.
ராட்சத ஏணி
உடனே 7 தீயணைப்பு வண்டிகளில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். 5-வது மாடியில் தீ எரிந்ததால், சென்னை கீழ்ப்பாக்கத்தில் இருந்து ராட்சத தீயணைப்பு வண்டி (ஸ்கை லிப்ட்) வரவழைக்கப்பட்டது. அதில் ஏறி தீயணைப்புத்துறை வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
மேலும் ஆம்புலன்ஸ்களும் வரவழைக்கப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டன. தீயணைப்புப் பணியில் ஏறக்குறைய 50 வீரர்கள் ஈடுபட்டனர். அதற்குள் தீ 6-வது மாடிக்கு மளமளவென்று பரவியது.
போராடி அணைத்தனர்
தீயணைப்பு வீரர்கள் அங்கும் இங்கும் ஓடிச்சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். ஒரு பகுதியில் அணைக்கும் சமயத்தில் மற்றொரு பகுதியில் தீ பிடித்தது. எனவே, தீயணைப்பு வீரர்கள் போராடி தீயை அணைத்துக்கொண்டிருந்தனர்.
தீ விபத்து நடந்த தகவல் அறிந்ததும், இந்தியன் வங்கியின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் சுந்தர்ராஜன் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தார். அவர் மட்டுமின்றி வங்கி தீபிடித்து எரிவதைக் கேள்விப்பட்ட வங்கியின் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களும் தீ பிடித்த இடத்துக்கு விரைந்து வந்தனர்.
ராஜாஜி சாலை முழுவதும் மக்கள் அங்கு கூடத்தொடங்கினார்கள். அவர்களை போலீசார் ஒதுங்கிச் செல்லும்படி கூறினார்கள்.
ஊழியர்களின் தஸ்தாவேஜூகள்
தீ பிடித்து எரிந்த மாடியில், இந்தியன் வங்கியில் அகில இந்திய அளவிலும், வெளிநாடுகளிலும் பணியாற்றும் அதிகாரிகள் மற்றும் ஊழியர்களின் சர்வீஸ் ரிஜிஸ்டர் மற்றும் அவர்கள் தொடர்பான அனைத்து ஆவணங்களும், மேலும் நூற்றுக்கணக்கான கம்ப்ட்டர்களும் வைக்கப்பட்டு இருந்தன. தீ விபத்தில், இவை அனைத்தும் எரிந்து சாம்பலாயின.
6-வது மாடியிலும் முக்கிய தஸ்தாவேஜூகள் வைக்கப்பட்டு இருந்தன. அவைகளும் தீக்கு இரையாயின. தீவிபத்து நடந்த பகுதி முழுவதும் கரும்புகை மூட்டமாக காட்சி அளித்தது.
இந்த புகை மூட்டத்துக்கு மத்தியில் தீயணைப்பு வீரர்கள் தொடர்ந்து போராடி தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர்.
7-வது மாடிக்கும் தீ பரவியது
இரவு 9 மணிக்குப்பின் 6-வது மாடியில் பிடித்த தீ 7-வது மாடிக்குப்பரவியது. தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த வீரர்கள் கண்ணாடி ஜன்னல்களை உடைத்துக்கொண்டு அறைக்குள் செல்ல முயன்ற போது, கண்ணாடி உடைந்து காயம் ஏற்பட்டது. உடனே, அவர்களுக்கு முதல் உதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. தீ விபத்துக்கான காரணம் உடனடியாகத் தெரியவில்லை. இது பற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: