வியாழன், 1 ஜனவரி, 2009

"மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி ரகுமான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு!.



இஸ்லாமாபாத், ஜன.1-

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜாகியுர் ரகுமான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.



மும்பையில் கடந்த நவம்பர் 26-ந் தேதி அன்று தீவிரவாதிகள் நடத்திய நேரடி யுத்தத்தில் மூளையாக செயல்பட்டவன், ஜாகியுர் ரகுமான் லக்வி. தாஜ் ஓட்டல் மற்றும் நரிமன் ஹவுசில் இருந்தபடி 60 மணி நேரத்துக்கும் மேலாக தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை போட்டபோது, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலமாக ரகுமான் லக்வி வழங்கினான்.

தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல்களை போலீசார் பதிவு செய்து சோதனை செய்தபோது இந்த தகவல் கிடைத்தது. இது குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா புகார் செய்தது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமும் இந்த ஆதாரங்களை தெரிவித்தது. இதையடுத்து, `லஷ்கர்-இ-தொய்பா' இயக்கத்தின் தளபதியான ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபரா பாத்தில் கடந்த 7-ந் தேதி அன்று அவனும் அவனுடைய கூட்டாளிகள் 20 பேரும் கைதாகினர். இந்த சூழ்நிலையில் தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல் பதிவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஒலிப்பதிவு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, 60 மணி நேர சண்டை நடந்த சமயத்தில் தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டு இருந்தது ரகுமான் லக்வி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. செல்போனில் இருப்பது தீவிரவாதி ரகுமான் லக்வி குரல் என்பதை கண்டு பிடித்தனர்.



இதையடுத்து அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர். இது தொடர்பான செய்தியை இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் `டான்' செய்தித்தாள் வெளியிட்டு இருக்கிறது.

மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட முகமது அஜ்மல் மற்றும் தீவிரவாதி ரகுமான் லக்வி இருவரும் பாகிஸ்தானில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. லக்வி தவிர யூசுப் முஜம்மில் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிக்கும் மும்பை தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளதை இந்தியா கண்டு பிடித்துள்ளது.


இதற்கிடையே, செல்போனில் பதிவாகி இருப்பது லக்வி குரல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய அதிகாரிகளின் நெருக்கடிக்கு பயந்து தீவிரவாதி முகமது அஜ்மல் வாக்குமூலம் அளித்து இருப்பான் என்பதால் அதையும் பாகிஸ்தான் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளாது' என்றும் கூறி இருக்கின்றனர்.

தீவிரவாதியை ஒப்படைப்பது மற்றும் மும்பை தாக்குதல் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளின் கருத்துகளுக்கும் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் கருத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேற்றுமை உள்ளது.

கருத்துகள் இல்லை: