புதன், 14 ஜனவரி, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி!.




புதுடில்லி :

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி குறித்து விசாரிக்கும் "பயங்கர மோசடி விசாரணைக்குழு' முடிவும், அறிக்கையும் அடுத்த மூன்று மாதங்களில் வெளிவரும். குறிப்பாக, சத்யத்தின் ஆடிட்டர் நிறுவனமான "பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் மீதும் இவ்விசாரணை இருக்கும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத், கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். மத்திய கம்பெனி விவகாரத்துறை விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே சத்யம் கம்ப்யூட் டர்சையும், அதன் துணை நிறுவனங்கள் எட்டையும் விசாரித்து, சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கின்றனர்.

சத்யத்தில் வேலைபார்க்கும் 53 ஆயிரம் ஊழியர் மற்றும் கம்பெனி சந்திக்கும் நிதி நெருக்கடி ஆகியவை பற்றியும் அதில் இடைஞ்சல் இல்லாத அணுகுமுறை ஏற்படுத்துவது பற்றியும் பிரதமர் மன்மோகன் சிங் விசாரித்ததாகத் தெரிகிறது.

அதே சமயம், சத்யம் நிர்வாகத்தை தற்போது மேற்கொண்டிருக்கும் தீபக் பரேக் மற்றும் மூவர் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடிப்படையில், அரசு உதவி அமையும் என்று அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்த சத்யம் ஆடிட்டிங் கம்பெனியான, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்சில் சி.பி.சிஐ.டி., சோதனை நடந்தது. அதில் ஆடிட்டர்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து தகவல்களைத் தந்தனர் என்று கூறப்பட்டது.

ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யா, "சத்யம் தொடர்புள்ள மாயதாஸ் என்ற கட்டுமான நிறுவனக் கம்பெனிக்கு ஆந்திர அரசு அளித்த கான்ட்ராக்ட்களில் ஏதும் முறைகேடு இல்லை என்றார். இது தொடர்பாக அரசிடம் உள்ள ஆவணங்களை தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டப்படி யார் வேண்டுமானாலும் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

தவிரவும், இந்திய சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் அமைப்பு சார்பில் துணைத் தலைவர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு சத்யம் கம்பெனி தணிக்கை நடைமுறைகளை முழுவதும் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராமலிங்க ராஜூவால் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, பின் மூவர் குழு நிர்வாகம் வந்த பின் பதவி பறிக்கப்பட்ட ராம் மைனாபதியிடம் விசாரணை முழுவீச்சில் நடந்தது என்று கூறப்படுகிறது.

மேலும், சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்று கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் ஆனது. இந்த மனுவைத் தாக்கல் செய்த சர்மா என்ற வக்கீல், அவசரமாக இம்மனுவை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.

மெகா மோசடி நடந்த சத்யம் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை இன்போசிஸ் வரவேற்றிருக்கிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தருவது பற்றி கவலை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இன்போசிஸ் தலைமை நிதி நிர்வாகி வி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சத்யம் போன்ற மெகா மோசடி விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது சரியானதே. ஆனால், சத்யத்துடன் மோசடி முடிந்த கதை அல்ல; மோசடிகள் தொடரும். அதேசமயம், ஒழுங்குமுறை அமைப்புகள் இவைகளைக் கண்டறிந்து எடுக்கும் நடவடிக்கைகள் மற்ற மோசடிகளைத் தடுக்க வேண்டும். சத்யம் விஷயத்தில் அதில் பணியாற்றும் 53 ஆயிரம் பணியாளர்களைக் காக்கும் அரசு முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த சம்பவத்தினால், இனி நம்பிக்கையான, பாதுகாப்பான ஐ.டி., நிறுவனங்களை மக்கள் நாடுவர். இனி எல்லாக் கம்பெனிகளும், தங்களைப்பற்றி அதிக தகவல்களைச் சொல்ல வேண்டிய காலம் வந்திருக்கிறது.
இவ்வாறு வி.பாலகிருஷ்ணன் கூறினார்.

கருத்துகள் இல்லை: