ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அம்பத்தூரில் கைதான போலி டாக்டர் பிளஸ்-2 படித்தவர்.

பணத்திற்க்காக மலம் தின்பவர்களை பார்த்து உள்ளீர்களா?.
உதாரணத்திற்கு இதோ,

அம்பத்தூர் வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் மரியா ஆண்டனி (வயது 40). இவர் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகே உள்ள "டாக்டர் பட் கண் மற்றும் தோல் லேசர் சென்டர்" என்ற ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர் சியாமளா எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற போர்டு மாட்டப்பட்டிருந்தது.

அங்கு சென்ற மரியா ஆண்டனி, டாக்டர் சியாமளாவிடம், "எனக்கு உடம்பில் அரிப்பு ஏற்படுகிறது; முடி கொட்டுகிறது'' என்று கூறினார். இதற்கு சியாமளா மருந்து எழுதி கொடுத்தார். மருந்து எழுதி கொடுப்பதற்கு முன்பு அவர் யாருடனோ அடிக்கடி பேசினார். இதனால் சந்தேகம் கொண்ட மரியா ஆண்டனி, சியாமளாவிடம் மருந்து பற்றி சில சந்தேகங்களை கேட்டார். இதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை.


மரியா ஆண்டனி நேராக சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் டிடம் புகார் மனு கொடுத்தார். அதில், "தான் சிகிச்சை பெற சென்ற டாக்டரின் நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை அளிக்கிறது; அவர் போலி டாக்டராக இருக்கலாம் என்று கருதுகிறேன். விசாரித்து நடவடிக்கை எடுங்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.

சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு வந்த புகாரைத் தொடர்ந்து, அம்பத்தூர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால் அங்கு சென்று சியாமளாவிடம், "உங்கள் மீது ஒரு புகார் வந்துள்ளது. எனவே உங்கள் சான்றிதழை காட்டுங்கள்'' என்றார்.

இதற்கு சியாமளா, "சான்றிதழ் கிடைக்க 2 அல்லது 3 நாட்கள் ஆகும்; வேண்டுமானால் போர்டை கழற்றி விடுகிறேன்" என்று பதில் அளித்தார். "சான்றிதழை காட்டுவதற்கும் போர்டை கழற்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே: நீங்கள் உண்மையிலேயே டாக்டர் தானா"? என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

இதன்பிறகு சியாமளா தான் போலி டாக்டர் என்பதை ஒப்புக்கொண்டார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரில் பல ஆண்டுகாலம் டாக்டர் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்த சியாமளா கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கைதான போலி டாக்டர் பிளஸ்-2 வரை படித்தவர். வெளிநாட்டில் படித்ததாக கூறி சிகிச்சை அளித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.


அம்பத்தூர் வெங்கடாபுரம் எம்.டி.எச். ரோட்டில் வசிப்பவர் டாக்டர் பட். இவர் அம்பத்தூரில் நீண்ட காலமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவருடைய மகன் கிருஷ்ணராவ். புகழ்பெற்ற கண் மருத்துவர். இவருக்கும், கர்நாடகாவை சேர்ந்த சியாமளா என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

பிளஸ்-2 வரை படித்துள்ள சியாமளா குடும்பமே டாக்டர் தொழில் செய்வதால் வீட்டின் வெளியே மாட்டப்பட்டிருக்கும் போர்டில் டாக்டர் சியாமளா எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று எழுதி வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் ஏதாவது தொழில் செய்ய முடிவு செய்தார். அதன்படி அம்பத்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் மிகப் பிரமாண்டமாக பியூட்டி பார்லர் (அழகுகலை நிலையம்) தொடங்கினார். இதன் கிளை அலுவலகம் கீழ்ப்பாக்கம் அருகே தொடங்கப்பட்டு காலையில் கீழ்ப்பாக்கத்திலும், மாலையில் அம்பத்தூரிலும் சென்று பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.

சில நாட்கள் பியூட்டி பார்லர் நடத்தி வந்தவர் திடீரென டாக்டர் பட்ஸ் கண் மற்றும் தோல் லேசர் சென்டர் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்த தொடங்கினார். இதன்படி சுமார் 11 ஆண்டுகளாக பொது மக்களுக்கு அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இவரிடம் சிகிச்சை பெற பெரும்பாலும் பெண் நோயாளிகளே வருவார்கள். அவர்களுக்கு கணவரிடமோ, மாமனாரிடமோ செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருந்துகளை பற்றி கேட்டு சீட்டில் மருந்து எழுதி தருவார்.

இதுகுறித்து சிகிச்சை பெற வந்தவர் கேட்டால், நான் வெளிநாட்டில் படித்தவள். எனவே இந்தியாவில் உள்ள மருத்துவத்தை பற்றி தெரியாது என்று கூறுவார். இப்படி கடந்த 11 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்த சியாமளா தான் வெளிநாட்டில் படித்தவள் என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சிகிச்சை முடிந்து கட்டணம் எவ்வளவு என்று நோயாளிகள் கேட்டால், 10 டாலர் என்று கூறிவிட்டு, மன்னிக்கவும்; வெளிநாட்டில் இருந்ததால் எனக்கு டாலர் பற்றி மட்டுமே தெரியும் என்று சியாமளா கூறுவார்.

இவரது மாமனார், கணவர் ஆகியோர் வாங்கும் சிகிச்சை கட்டணத்தை விட சியாமளா அதிகமாக சிகிச்சை கட்டணம் வாங்கியதாக பொதுமக்கள் கூறினார்கள்.

போலி டாக்டர் சியாமளா கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், இவரிடம் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். சியாமளா கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக அம்பத்தூர் மாஜிஸ்திரேட்டு சத்தியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சியாமளா கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: