திங்கள், 16 பிப்ரவரி, 2009

பெங்களூரில் பேராசிரியர் குடும்பத்தினர் 3 பேர் மர்ம கொலை




பெங்களூர், பிப்.17-

பெங்களூரில் விஞ்ஞானி தனது மனைவி, மகனுடன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது வளர்ப்பு மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



பெங்களூர் ஆர்.டி.நகர் 80 அடி ரோட்டில் வசித்து வந்தவர் புருசோத்தம் லால் சச்சுதேவ் (வயது 64). இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது அதே நிறுவனத்தில் பகுதி நேர கவுரவ பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

விஞ்ஞானி சச்சுதேவின் மனைவி பெயர் ரீட்டா (60). இந்த தம்பதியின் மகன் முன்னா (35). முன்னா மனநிலை சரியில்லாதவர். மேலும் உடல் ஊனமுற்றவர். வளர்ப்பு மகன் அனுராக் (20). இவர்கள் 4 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர்.


இந்த நிலையில், சச்சுதேவ் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் கோவாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் கடந்த சனிக்கிழமை பெங்களூருக்கு திரும்பி வந்தனர். மறுநாளான நேற்று முன்தினம் அவர்கள் 4 பேரும் ஆர்.டி.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். விருந்து முடிந்ததும் இரவில் வீட்டுக்கு திரும்பினார்கள்.

அன்று மதியம் சச்சுதேவின் வீட்டுக்கு கோவாவில் இருந்து அவரது உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தொடர்பு கொண்ட போதும், யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ஆர்.டி.நகரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் சச்சுதேவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, எந்த பதிலும் வரவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் சச்சுதேவின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது விஞ்ஞானி சச்சுதேவ், அவரது மனைவி ரீட்டா, மகன் முன்னா ஆகிய 3 பேரும் பிணமாக கிடந்ததைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணத்துக்காக இந்த கொலை சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனவே சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். விஞ்ஞானி சச்சுதேவின் வளர்ப்பு மகன் அனுராக் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு அனுராக் வந்தார். அவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

கருத்துகள் இல்லை: