திங்கள், 16 பிப்ரவரி, 2009

பெங்களூரில் பேராசிரியர் குடும்பத்தினர் 3 பேர் மர்ம கொலை




பெங்களூர், பிப்.17-

பெங்களூரில் விஞ்ஞானி தனது மனைவி, மகனுடன் படுகொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவரது வளர்ப்பு மகனை பிடித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.



பெங்களூர் ஆர்.டி.நகர் 80 அடி ரோட்டில் வசித்து வந்தவர் புருசோத்தம் லால் சச்சுதேவ் (வயது 64). இவர் பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கழகத்தில் விஞ்ஞானியாக பணியாற்றி வந்தார். அந்த பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு, தற்போது அதே நிறுவனத்தில் பகுதி நேர கவுரவ பேராசிரியராக வேலை செய்து வந்தார்.

விஞ்ஞானி சச்சுதேவின் மனைவி பெயர் ரீட்டா (60). இந்த தம்பதியின் மகன் முன்னா (35). முன்னா மனநிலை சரியில்லாதவர். மேலும் உடல் ஊனமுற்றவர். வளர்ப்பு மகன் அனுராக் (20). இவர்கள் 4 பேரும் ஒன்றாக வசித்து வந்தனர்.


இந்த நிலையில், சச்சுதேவ் கடந்த வாரம் தனது குடும்பத்தினருடன் கோவாவில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கிருந்து அவர்கள் கடந்த சனிக்கிழமை பெங்களூருக்கு திரும்பி வந்தனர். மறுநாளான நேற்று முன்தினம் அவர்கள் 4 பேரும் ஆர்.டி.நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு விருந்துக்கு சென்றனர். விருந்து முடிந்ததும் இரவில் வீட்டுக்கு திரும்பினார்கள்.

அன்று மதியம் சச்சுதேவின் வீட்டுக்கு கோவாவில் இருந்து அவரது உறவினர்கள் தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டனர். ஆனால் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை. நேற்று காலை மீண்டும் தொடர்பு கொண்ட போதும், யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை.

இதனால் சந்தேகம் அடைந்த அவரது உறவினர்கள் ஆர்.டி.நகரில் உள்ள உறவினர்களுக்கு தகவல் கொடுத்தனர். அவர்களும் சச்சுதேவின் வீட்டுக்கு தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டபோது, எந்த பதிலும் வரவில்லை.


இதனால் சந்தேகம் அடைந்த அவர்கள் சச்சுதேவின் வீட்டுக்கு சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு பூட்டப்பட்டு கிடந்தது. தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர்.

அப்போது விஞ்ஞானி சச்சுதேவ், அவரது மனைவி ரீட்டா, மகன் முன்னா ஆகிய 3 பேரும் பிணமாக கிடந்ததைப் பார்த்து உறவினர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

நகை, பணத்துக்காக இந்த கொலை சம்பவம் நடந்ததற்கான எந்த அறிகுறியும் தெரியவில்லை. எனவே சொத்துக்கு ஆசைப்பட்டு கொலை நடந்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகிறார்கள். விஞ்ஞானி சச்சுதேவின் வளர்ப்பு மகன் அனுராக் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டு உள்ளது.

போலீசார் கொலை செய்யப்பட்டவர்களின் உடல்களை கைப்பற்றி விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது, அங்கு அனுராக் வந்தார். அவரை போலீசார் பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.

ஞாயிறு, 1 பிப்ரவரி, 2009

அம்பத்தூரில் கைதான போலி டாக்டர் பிளஸ்-2 படித்தவர்.

பணத்திற்க்காக மலம் தின்பவர்களை பார்த்து உள்ளீர்களா?.
உதாரணத்திற்கு இதோ,

அம்பத்தூர் வெங்கடாபுரத்தை சேர்ந்தவர் மரியா ஆண்டனி (வயது 40). இவர் அம்பத்தூர் ஓ.டி. பஸ் நிலையம் அருகே உள்ள "டாக்டர் பட் கண் மற்றும் தோல் லேசர் சென்டர்" என்ற ஆஸ்பத்திரிக்கு சென்றார். அங்கு டாக்டர் சியாமளா எம்.பி.பி.எஸ்., எம்.டி. என்ற போர்டு மாட்டப்பட்டிருந்தது.

அங்கு சென்ற மரியா ஆண்டனி, டாக்டர் சியாமளாவிடம், "எனக்கு உடம்பில் அரிப்பு ஏற்படுகிறது; முடி கொட்டுகிறது'' என்று கூறினார். இதற்கு சியாமளா மருந்து எழுதி கொடுத்தார். மருந்து எழுதி கொடுப்பதற்கு முன்பு அவர் யாருடனோ அடிக்கடி பேசினார். இதனால் சந்தேகம் கொண்ட மரியா ஆண்டனி, சியாமளாவிடம் மருந்து பற்றி சில சந்தேகங்களை கேட்டார். இதற்கு அவர் முறையான பதில் அளிக்கவில்லை.


மரியா ஆண்டனி நேராக சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட் டிடம் புகார் மனு கொடுத்தார். அதில், "தான் சிகிச்சை பெற சென்ற டாக்டரின் நடவடிக்கைகள் எனக்கு சந்தேகத்தை அளிக்கிறது; அவர் போலி டாக்டராக இருக்கலாம் என்று கருதுகிறேன். விசாரித்து நடவடிக்கை எடுங்கள்'' என்று கூறப்பட்டிருந்தது.

சென்னை புறநகர் கமிஷனர் ஜாங்கிட்டிற்கு வந்த புகாரைத் தொடர்ந்து, அம்பத்தூர்
போலீஸ் இன்ஸ்பெக்டர் சையத் ஜமால் அங்கு சென்று சியாமளாவிடம், "உங்கள் மீது ஒரு புகார் வந்துள்ளது. எனவே உங்கள் சான்றிதழை காட்டுங்கள்'' என்றார்.

இதற்கு சியாமளா, "சான்றிதழ் கிடைக்க 2 அல்லது 3 நாட்கள் ஆகும்; வேண்டுமானால் போர்டை கழற்றி விடுகிறேன்" என்று பதில் அளித்தார். "சான்றிதழை காட்டுவதற்கும் போர்டை கழற்றுவதற்கும் எந்த சம்பந்தமும் இல்லையே: நீங்கள் உண்மையிலேயே டாக்டர் தானா"? என்று போலீஸ் இன்ஸ்பெக்டர் கேட்டார்.

இதன்பிறகு சியாமளா தான் போலி டாக்டர் என்பதை ஒப்புக்கொண்டார். இதையொட்டி அவரை போலீசார் கைது செய்தனர். அம்பத்தூரில் பல ஆண்டுகாலம் டாக்டர் என்ற பெயரில் மருத்துவம் பார்த்து வந்த சியாமளா கைது செய்யப்பட்டு இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


கைதான போலி டாக்டர் பிளஸ்-2 வரை படித்தவர். வெளிநாட்டில் படித்ததாக கூறி சிகிச்சை அளித்த தகவல் இப்போது வெளியாகி உள்ளது.


அம்பத்தூர் வெங்கடாபுரம் எம்.டி.எச். ரோட்டில் வசிப்பவர் டாக்டர் பட். இவர் அம்பத்தூரில் நீண்ட காலமாக ஆஸ்பத்திரி நடத்தி வருகிறார். இவருடைய மகன் கிருஷ்ணராவ். புகழ்பெற்ற கண் மருத்துவர். இவருக்கும், கர்நாடகாவை சேர்ந்த சியாமளா என்பவருக்கும் கடந்த 11 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஒரு மகள் மற்றும் மகன் உள்ளனர்.

பிளஸ்-2 வரை படித்துள்ள சியாமளா குடும்பமே டாக்டர் தொழில் செய்வதால் வீட்டின் வெளியே மாட்டப்பட்டிருக்கும் போர்டில் டாக்டர் சியாமளா எம்.பி.பி.எஸ், எம்.டி. என்று எழுதி வைத்துள்ளார்.

திருமணத்திற்கு பிறகு வீட்டில் சும்மா இருக்க பிடிக்காமல் ஏதாவது தொழில் செய்ய முடிவு செய்தார். அதன்படி அம்பத்தூர் பஸ்நிலையம் அருகே உள்ள வணிக வளாகத்தில் மிகப் பிரமாண்டமாக பியூட்டி பார்லர் (அழகுகலை நிலையம்) தொடங்கினார். இதன் கிளை அலுவலகம் கீழ்ப்பாக்கம் அருகே தொடங்கப்பட்டு காலையில் கீழ்ப்பாக்கத்திலும், மாலையில் அம்பத்தூரிலும் சென்று பியூட்டி பார்லர் நடத்தி வந்தார்.

சில நாட்கள் பியூட்டி பார்லர் நடத்தி வந்தவர் திடீரென டாக்டர் பட்ஸ் கண் மற்றும் தோல் லேசர் சென்டர் என்ற பெயரில் ஆஸ்பத்திரி நடத்த தொடங்கினார். இதன்படி சுமார் 11 ஆண்டுகளாக பொது மக்களுக்கு அலோபதி எனப்படும் ஆங்கில மருத்துவம் மூலம் சிகிச்சை அளித்து வந்துள்ளார்.

இவரிடம் சிகிச்சை பெற பெரும்பாலும் பெண் நோயாளிகளே வருவார்கள். அவர்களுக்கு கணவரிடமோ, மாமனாரிடமோ செல்போன் மூலம் தொடர்பு கொண்டு மருந்துகளை பற்றி கேட்டு சீட்டில் மருந்து எழுதி தருவார்.

இதுகுறித்து சிகிச்சை பெற வந்தவர் கேட்டால், நான் வெளிநாட்டில் படித்தவள். எனவே இந்தியாவில் உள்ள மருத்துவத்தை பற்றி தெரியாது என்று கூறுவார். இப்படி கடந்த 11 ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி சிகிச்சை அளித்து வந்த சியாமளா தான் வெளிநாட்டில் படித்தவள் என்பதை மக்கள் நம்ப வேண்டும் என்பதற்காக சிகிச்சை முடிந்து கட்டணம் எவ்வளவு என்று நோயாளிகள் கேட்டால், 10 டாலர் என்று கூறிவிட்டு, மன்னிக்கவும்; வெளிநாட்டில் இருந்ததால் எனக்கு டாலர் பற்றி மட்டுமே தெரியும் என்று சியாமளா கூறுவார்.

இவரது மாமனார், கணவர் ஆகியோர் வாங்கும் சிகிச்சை கட்டணத்தை விட சியாமளா அதிகமாக சிகிச்சை கட்டணம் வாங்கியதாக பொதுமக்கள் கூறினார்கள்.

போலி டாக்டர் சியாமளா கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும், இவரிடம் சிகிச்சை பெற்று வந்தவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் உள்ளனர். சியாமளா கைது செய்யப்பட்டு இரவோடு இரவாக அம்பத்தூர் மாஜிஸ்திரேட்டு சத்தியா முன்பு ஆஜர்படுத்தப்பட்டு புழல் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். சியாமளா கைது செய்யப்பட்ட தகவல் கிடைத்ததும் இப்பகுதி முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதன், 14 ஜனவரி, 2009

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி!.




புதுடில்லி :

சத்யம் கம்ப்யூட்டர்ஸ் 8,000 கோடி ரூபாய் மோசடி குறித்து விசாரிக்கும் "பயங்கர மோசடி விசாரணைக்குழு' முடிவும், அறிக்கையும் அடுத்த மூன்று மாதங்களில் வெளிவரும். குறிப்பாக, சத்யத்தின் ஆடிட்டர் நிறுவனமான "பிரைஸ் வாட்டர் கூப்பர்ஸ் மீதும் இவ்விசாரணை இருக்கும் என்று அரசு தெரிவித்திருக்கிறது.

வர்த்தகத் துறை அமைச்சர் கமல்நாத், கம்பெனி விவகாரத்துறை அமைச்சர் குப்தா மற்றும் அதிகாரிகளுடன் பிரதமர் மன்மோகன் சிங் ஆலோசனை நடத்தினார். மத்திய கம்பெனி விவகாரத்துறை விசாரணை அதிகாரிகள் ஏற்கனவே சத்யம் கம்ப்யூட் டர்சையும், அதன் துணை நிறுவனங்கள் எட்டையும் விசாரித்து, சில ஆவணங்களை கைப்பற்றியிருக்கின்றனர்.

சத்யத்தில் வேலைபார்க்கும் 53 ஆயிரம் ஊழியர் மற்றும் கம்பெனி சந்திக்கும் நிதி நெருக்கடி ஆகியவை பற்றியும் அதில் இடைஞ்சல் இல்லாத அணுகுமுறை ஏற்படுத்துவது பற்றியும் பிரதமர் மன்மோகன் சிங் விசாரித்ததாகத் தெரிகிறது.

அதே சமயம், சத்யம் நிர்வாகத்தை தற்போது மேற்கொண்டிருக்கும் தீபக் பரேக் மற்றும் மூவர் குழு தெரிவிக்கும் யோசனைகள் அடிப்படையில், அரசு உதவி அமையும் என்று அமைச்சர் கமல்நாத் தெரிவித்தார்.

ஐதராபாத் ஜூப்ளி ஹில்ஸ் பகுதியில் அமைந்த சத்யம் ஆடிட்டிங் கம்பெனியான, பிரைஸ் வாட்டர் ஹவுஸ் கூப்பர்சில் சி.பி.சிஐ.டி., சோதனை நடந்தது. அதில் ஆடிட்டர்கள் உரிய ஒத்துழைப்பு அளித்து தகவல்களைத் தந்தனர் என்று கூறப்பட்டது.

ஆந்திர நிதியமைச்சர் ரோசய்யா, "சத்யம் தொடர்புள்ள மாயதாஸ் என்ற கட்டுமான நிறுவனக் கம்பெனிக்கு ஆந்திர அரசு அளித்த கான்ட்ராக்ட்களில் ஏதும் முறைகேடு இல்லை என்றார். இது தொடர்பாக அரசிடம் உள்ள ஆவணங்களை தகவல் கேட்டுப் பெறும் உரிமைச் சட்டப்படி யார் வேண்டுமானாலும் பெறலாம் என்றும் தெரிவித்தார்.

தவிரவும், இந்திய சார்ட்டர்டு அக்கவுன்ட்ஸ் அமைப்பு சார்பில் துணைத் தலைவர் குழு அமைக்கப்பட்டு, அக்குழு சத்யம் கம்பெனி தணிக்கை நடைமுறைகளை முழுவதும் பரிசீலிக்கும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.

ராமலிங்க ராஜூவால் தலைமை நிர்வாகியாக நியமிக்கப்பட்டு, பின் மூவர் குழு நிர்வாகம் வந்த பின் பதவி பறிக்கப்பட்ட ராம் மைனாபதியிடம் விசாரணை முழுவீச்சில் நடந்தது என்று கூறப்படுகிறது.

மேலும், சத்யம் நிறுவனப் பங்குகளில் முதலீடு செய்தவர்கள் காப்பற்றப்பட வேண்டும் என்று கோரிய பொதுநல மனு சுப்ரீம் கோர்ட்டில் நேற்று தாக்கல் ஆனது. இந்த மனுவைத் தாக்கல் செய்த சர்மா என்ற வக்கீல், அவசரமாக இம்மனுவை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையை தலைமை நீதிபதி கே.ஜி.பாலகிருஷ்ணன் தலைமையிலான பெஞ்ச் ஏற்கவில்லை.

மெகா மோசடி நடந்த சத்யம் விவகாரத்தில் அரசு எடுத்த நடவடிக்கைகளை இன்போசிஸ் வரவேற்றிருக்கிறது. அதேசமயம், தனியார் நிறுவனங்களுக்கு அரசு நிதி உதவி தருவது பற்றி கவலை தெரிவித்திருக்கிறது.

இதுகுறித்து இன்போசிஸ் தலைமை நிதி நிர்வாகி வி.பாலகிருஷ்ணன் கூறியதாவது:

சத்யம் போன்ற மெகா மோசடி விஷயத்தில் சம்பந்தப்பட்டவர்கள் யார் என்பதைக் கண்டறிந்து நடவடிக்கை எடுப்பது சரியானதே. ஆனால், சத்யத்துடன் மோசடி முடிந்த கதை அல்ல; மோசடிகள் தொடரும். அதேசமயம், ஒழுங்குமுறை அமைப்புகள் இவைகளைக் கண்டறிந்து எடுக்கும் நடவடிக்கைகள் மற்ற மோசடிகளைத் தடுக்க வேண்டும். சத்யம் விஷயத்தில் அதில் பணியாற்றும் 53 ஆயிரம் பணியாளர்களைக் காக்கும் அரசு முயற்சி பாராட்டத்தக்கது.

இந்த சம்பவத்தினால், இனி நம்பிக்கையான, பாதுகாப்பான ஐ.டி., நிறுவனங்களை மக்கள் நாடுவர். இனி எல்லாக் கம்பெனிகளும், தங்களைப்பற்றி அதிக தகவல்களைச் சொல்ல வேண்டிய காலம் வந்திருக்கிறது.
இவ்வாறு வி.பாலகிருஷ்ணன் கூறினார்.

"பாக்., அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை!.

வாஷிங்டன் :

"பாக்., அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்' என அமெரிக்க செனட் உறுப்பினர் பெர்மன் வலியுறுத்தியுள்ளார்.


பாகிஸ்தானின் பிரபல அணு விஞ்ஞானி ஏ.கியூ.கான். அணுசக்தி தொடர்பான பல்வேறு முக்கிய தகவல்களையும், தொழில் நுட்பங் களையும் ஈரான், லிபியா போன்ற நாடுகளுக்கு விற்பனை செய்ததாக இவர் மீது புகார் கூறப்பட்டது. இதையடுத்து, இவர் கைது செய் யப்பட்டார். தற்போது வீட்டுக் காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்த விவகாரம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.



இந்நிலையில், ஏ.கியூ.கான் நெட்ஒர்க்கின் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா நேற்று முன்தினம் அதிரடியாக தடை விதித்தது. இதுபற்றி அமெரிக்க செனட்டரும், வெளியுறவு கமிட்டியின் தலைவருமான பெர்மன் கூறியதாவது:

அரசின் இந்த நடவடிக்கை தாமதமானது என்றாலும், வரவேற்கத் தக்கது. ஆனால், இது போதுமானதல்ல. அணு ஆயுதம் தொடர்பான ரகசிய வர்த்தகங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏ.கியூ.கான் மற்றும் அவரது நெட்ஒர்க்கிற்கு எதிராக மேலும் கடுமையான நடவடிக்கை எடுப்பது அவசியம். இந்த விவகாரத்தில் ஈரான், வட கொரியா நாடுகளுக்கும் தொடர்பு உள்ளது. அந்த நாடுகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஏ.கியூ.கானுடன் தொடர்புடையவர்கள், அணுசக்தி தொடர்பான தொழில் நுட்பங்களை தொடர்ந்து விற்பனை செய்து வருகின்றனர்.

இதுபோன்ற நடவடிக்கைகளை தடுக்க, புதிதாக பொறுப்பேற்க உள்ள ஒபாமா தலைமையிலான அரசு, சட்ட ரீதியான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு பெர்மன் கூறியுள்ளார்.

வியாழன், 1 ஜனவரி, 2009

"மும்பை தாக்குதலுக்கு மூளையாக இருந்த தீவிரவாதி ரகுமான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும்" - பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கண்டிப்பு!.



இஸ்லாமாபாத், ஜன.1-

மும்பை தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்ட லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதி ஜாகியுர் ரகுமான் லக்வியை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்று பாகிஸ்தானை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.



மும்பையில் கடந்த நவம்பர் 26-ந் தேதி அன்று தீவிரவாதிகள் நடத்திய நேரடி யுத்தத்தில் மூளையாக செயல்பட்டவன், ஜாகியுர் ரகுமான் லக்வி. தாஜ் ஓட்டல் மற்றும் நரிமன் ஹவுசில் இருந்தபடி 60 மணி நேரத்துக்கும் மேலாக தீவிரவாதிகள் துப்பாக்கி சண்டை போட்டபோது, அவர்களுக்கு தேவையான ஆலோசனைகளை பாகிஸ்தானில் இருந்தபடி செல்போன் மூலமாக ரகுமான் லக்வி வழங்கினான்.

தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல்களை போலீசார் பதிவு செய்து சோதனை செய்தபோது இந்த தகவல் கிடைத்தது. இது குறித்து பாகிஸ்தானிடம் இந்தியா புகார் செய்தது. மேலும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிடமும் இந்த ஆதாரங்களை தெரிவித்தது. இதையடுத்து, `லஷ்கர்-இ-தொய்பா' இயக்கத்தின் தளபதியான ஜாகியுர் ரகுமான் லக்வியை பாகிஸ்தான் அரசு கைது செய்தது.



பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரின் தலைநகர் முசாபரா பாத்தில் கடந்த 7-ந் தேதி அன்று அவனும் அவனுடைய கூட்டாளிகள் 20 பேரும் கைதாகினர். இந்த சூழ்நிலையில் தீவிரவாதிகளின் செல்போன் உரையாடல் பதிவை அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து நாடுகளின் ஒலிப்பதிவு வல்லுனர்கள் ஆய்வு செய்தனர்.

அப்போது, 60 மணி நேர சண்டை நடந்த சமயத்தில் தீவிரவாதிகளுக்கு உத்தரவு பிறப்பித்துக் கொண்டு இருந்தது ரகுமான் லக்வி தான் என்பது உறுதி செய்யப்பட்டது. செல்போனில் இருப்பது தீவிரவாதி ரகுமான் லக்வி குரல் என்பதை கண்டு பிடித்தனர்.



இதையடுத்து அவனை இந்தியாவிடம் ஒப்படைக்குமாறு பாகிஸ்தானிடம் அமெரிக்கா வலியுறுத்தி உள்ளது. வாஷிங்டனில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகள் இந்த தகவலை உறுதி செய்தனர். இது தொடர்பான செய்தியை இஸ்லாமாபாத்தில் இருந்து வெளிவரும் `டான்' செய்தித்தாள் வெளியிட்டு இருக்கிறது.

மும்பை தாக்குதலில் உயிருடன் பிடிபட்ட முகமது அஜ்மல் மற்றும் தீவிரவாதி ரகுமான் லக்வி இருவரும் பாகிஸ்தானில் ஒரே பகுதியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. லக்வி தவிர யூசுப் முஜம்மில் என்ற லஷ்கர்-இ-தொய்பா தீவிரவாதிக்கும் மும்பை தாக்குதலில் நேரடி தொடர்பு உள்ளதை இந்தியா கண்டு பிடித்துள்ளது.


இதற்கிடையே, செல்போனில் பதிவாகி இருப்பது லக்வி குரல் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது என்று பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும், இந்திய அதிகாரிகளின் நெருக்கடிக்கு பயந்து தீவிரவாதி முகமது அஜ்மல் வாக்குமூலம் அளித்து இருப்பான் என்பதால் அதையும் பாகிஸ்தான் கோர்ட்டு ஏற்றுக் கொள்ளாது' என்றும் கூறி இருக்கின்றனர்.

தீவிரவாதியை ஒப்படைப்பது மற்றும் மும்பை தாக்குதல் தொடர்பான பிரச்சினையில் பாகிஸ்தானில் உள்ள அதிகாரிகளின் கருத்துகளுக்கும் அமெரிக்காவில் உள்ள பாகிஸ்தான் தூதரக அதிகாரிகளின் கருத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேற்றுமை உள்ளது.

செவ்வாய், 30 டிசம்பர், 2008

தலிபான்களின் கோட்டையாகி விட்ட சுவாத் பள்ளத்தாக்கு - நடவடிக்கையும் எடுக்க முடியாமல் திணறும் பாக். அரசு.


இஸ்லாமாபாத் :

பாகிஸ்தானில் ஒரு காலத்தில் பிரபல சுற்றுலா தலமாக இருந்த, சுவாத் பள்ளத்தாக்கு, தற்போது தலிபான்களின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாக மாறியுள்ளது. கண்ணுக்கு இனிய இயற்கை காட்சிகள் கொண்ட பள்ளத்தாக்கை தங்களின் கோட்டையாக மாற்றியுள்ள தலிபான்கள், எதிர்ப்பவர்களை தலையை துண்டித்தும் கொன்றும் வருகின்றனர். இருந்தும், எந்த நடவடிக்கையும் எடுக்க முடியாமல் கையைப் பிசைந்து கொண்டிருக்கிறது பாக்., அரசு.


பாகிஸ்தானில் பழங்குடியினர் அதிகம் வசிக்கும் வாசிரிஸ்தான் பகுதிகளில், ஏற்கனவே தலிபான்கள் மற்றும் அல்- குவைதா பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது. இங்கு இவர்களை ஒடுக்கும் பணியில் ராணுவத்தினரும் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர். அதே நேரத்தில், இந்தப் பகுதியில் இருந்து தொலை தூரத்தில் உள்ள மற்றொரு பகுதியான சுவாத் பள்ளத்தாக்கு பகுதிகளிலும், தற்போது தலிபான்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இங்குள்ள இயற்கை வனப்பு மிக்க மலைப்பகுதிகளில் பெரும்பாலானவை, தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளன. "சுவாத் பகுதி நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது. நிலைமை எவ்வளவு மோசமாக உள்ளது என்பதை கற்பனை செய்து கூடப் பார்க்க முடியாது' என, அந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள் பிரதிநிதி ஒருவர் கூறியுள்ளார். சுவாத் பகுதியில் உள்ள இவர் வீடு, சமீபத்தில் பயங்கரவாதிகளால் தாக்கப்பட்டது.


"சுவாத் பகுதியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்தான், தலிபான் பயங்கரவாதிகள் பரவத் துவங்கினர். தற்போது அவர்களின் ஆதிக்கம் அதிகரித்துள்ளது. இங்கு வெளிநாட்டு மற்றும் பாகிஸ்தான் பத்திரிகையாளர்கள் யாரும் இப்போது செல்ல முடியவில்லை. அங்கு வசிக்கும் மக்களிடமோ, மக்கள் பிரதிநிதிகளிடமோ அல்லது அதிகாரிகளிடமோ பேட்டி காண முடியவில்லை. தலிபான்களின் கெடுபிடிகளுக்கு பயந்து அதிகாரிகள் பலர், இப்பகுதியை விட்டு வெளியேறி விட்டனர்' என, அப்பகுதியைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறியதாவது: சுவாத் பகுதியை ஒட்டிய பர்னர் என்ற இடத்தில், கடந்த ஞாயிறன்று தற்கொலை படை தாக்குதல் நடந்தது. இந்தத் தாக்குதலில் 40 பேர் கொல்லப்பட்டனர். இதனால், இப்பகுதியில் பீதி உருவாகியுள்ளது.


மக்கள் பாதுகாப்பற்ற சூழ்நிலையில் வசிக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது. சுவாத் பள்ளத்தாக்கு பகுதியில் அரசு தனது கட்டுப்பாட்டை இழந்து விட்டால், நிலைமை மேலும் மோசமாகி விடும். இப்பகுதியில் முன்னர் 15 லட்சம் பேர் வசித்தனர். அவர்களில் மூன்றில் ஒரு பங்கினர் வெளியேறி விட்டனர்.
இப்பகுதியில் உள்ள பயங்கரவாதிகள் எல்லாம், மவுலானா பசுல்லா என்பவரின் தலைமையின் கீழ் செயல்படுகின்றனர். இங்குள்ள பயங்கரவாதிகள் எல்லாம், நீண்ட தலைமுடி, தாடி, துப்பாக்கிகள், சால்வைகள் மற்றும் ஷூக்களுடன் காணப்படுவதால், அவர்களை எளிதில் அடையாளம் காண முடியும். தற்போதைய நிலையில், 2,000க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உள்ளனர். சில இடங்களில் தலிபான் பயங்கரவாதிகளின் கட்டுப்பாட்டில், கிராமங்களே உள்ளன. அரசு ஆதரவாளர்களை தலை துண்டித்து கொலை செய்வதோடு, பாலங்களையும் குண்டுகள் வைத்தும் தகர்க்கின்றனர். மேலும், பெண்கள் எல்லாரும் பர்தா அணிய வேண்டும் என்றும் கடும் நிபந்தனை விதிக்கின்றனர். இதை மீறுவோரை தண்டிக்கவும் செய்கின்றனர்.


அரசைப் போலவே, கோர்ட்டுகளை நடத்துவது, வரி வசூல் செய்வது, சோதனை சாவடிகள் அமைத்து சோதனையிடுவது போன்ற வேலைகளையும் செய்கின்றனர். இப்பகுதியில் இருந்த மகளிர் பள்ளிகள் பலவற்றையும் தீ வைத்து அழித்துள்ளனர். டிசம்பர் மாத மத்திய பகுதியில், இளம் வயது நபர் ஒருவர் தலிபான்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கினார். உடன் அவரை கொன்ற பயங்கரவாதிகள், அவரின் பிணத்தை கிராமத்தின் மையப் பகுதியில் கயிற்றில் கட்டி இரண்டு நாட்கள் தொங்கவிட்டனர். அவரைப் போல யாருக்கும் துணிச்சல் வரக்கூடாது என்பதற்காக இதைச் செய்தனர். இவ்வாறு அந்த அதிகாரி கூறினார். செஞ்சிலுவை சங்கத்தின் சர்வதேச கமிட்டிக்காக சுவாத் பகுதியில் நிவாரண பணிகளை மேற்பார்வையிட்டு வந்த சலா - உத் -தீன் கூறுகையில், "சுவாத் பள்ளத்தாக்கின் 80 சதவீத பகுதி, தற்போது தலிபான்களின் கட்டுப்பாட்டில் உள்ளது' எனக் கூறியுள்ளார்.


தலிபான் பயங்கரவாதிகளுக்கு எதிராக பாகிஸ்தான் படையினர் நடத்திய அதிரடி வேட்டையில், இரண்டு குழந்தைகள் உட்பட எட்டு பேர் கொல்லப்பட்டனர். பாகிஸ்தானின் வடமேற்கில் உள்ள நகரம் பெஷாவர். இந்நகரை ஒட்டிய பழங்குடியின பகுதியில் தலிபான் பயங்கரவாதிகள் அதிகளவில் உள்ளனர். ஆப்கானிஸ்தானில் முகாமிட்டுள்ள அமெரிக்கா மற்றும் நேட்டோ படைகளுக்கு, பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்கள் மீது இந்த தலிபான் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். தலிபான்களை ஒடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ள பாக்., ராணுவத்தினர் நேற்று மீண்டும் அதிரடி வேட்டையில் ஈடுபட்டனர். ஜம்ரூத் பகுதியில் தங்கியிருக்கும் தலிபான்கள் மீது தாக்குதல் நடத்தினர். இதில், இரு பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட எட்டு பேர் பலியாயினர்.


இங்குள்ள மலைப்பகுதிகளில் தலிபான்களின் மறைவிடங்களை குறிவைத்து, ராணுவ ஹெலிகாப்டர்களும் தாக்குதலில் ஈடுபட்டன. அத்துடன் சிறிய பீரங்கிகள் மூலமும் தாக்குதல் நடத்தப்பட்டது.

திங்கள், 29 டிசம்பர், 2008

இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் !.


ஜெருசலேம்:

காசா எல்லைப் பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று இரண்டாவது நாளாக தொடர்ந்து குண்டு வீசி தாக்குதல் நடத்தின. இதுவரை நடந்துள்ள தாக்குதலில் 280க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.பாலஸ்தீனத்தில் உள்ள ஹமாஸ் அமைப்பினர் மீது இஸ்ரேல் போர் விமானங்கள் நேற்று முன்தினம் அதிரடியாக குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின.

இதில் ஏராளமானோர் பலியாயினர். இதற்கிடையே, இஸ்ரேல் போர் விமானங்கள் இரண்டாவது நாளாக நேற்றும்காசா எல்லைப் பகுதியில் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தின. இதில் ஏராளமான கட்டடங்கள் தரை மட்டமாயின. இதுவரை நடந்துள்ள தாக்குதலில் 280க்கும் மேற்பட்டோர் பலியாகி விட்டதாகவும், 800க்கும் மேற்பட்டோர்படுகாயம் அடைந்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதற்கிடையே, ஹமாஸ் அமைப்பினர் மீது தரை வழியாகவும் தாக்குதலைத் துவங்க இஸ்ரேல் ராணுவம் தயாராகிவருகிறது. 6,000 ராணுவ வீரர்களை எல்லைப் பகுதிக்குச் செல்லும்படி உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து இஸ்ரேல்அதிகாரிகள் கூறுகையில், "ராணுவ வீரர்களை எல்லைக்கு அனுப்ப இஸ்ரேல் அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது. இதன்படி விரைவாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது' என்றனர்.